திருத்தணிகைப் பிள்ளைத்தமிழ்
கந்தப்ப ஐயர்
சிற்றில்பருவம்9 / 11
திருத்தணிகைப் பிள்ளைத்தமிழ் · கந்தப்ப ஐயர்
சிற்றில்பருவம்
72✓
அல்லிக் கமலத்து அயன் நாவில்
அமரும் காயத்திரி மானும்,
அவனி முழுதும் முடி சுமக்கும்
அனந்தன் இரண்டாயிரம் நாவும்,
சொல்லற்கு அரிய புகழ் நிலவும்
தொலையாச் சூரன்தனை வென்ற
தோற்றம் படைத்து, ஈரேழ் உலகும்
துயர் கூர் பாவ இருள் அகற்றும்
கல்விக் கடலே! நின் பெருமை
கற்றோர்க்கு உதவும் நல் துணையே!
காவில் அரசன் அருள் பிடியும்
கானக் குறவர் தரு பிணையும்
செல்வக் கரத்தால் வருடு அடியால்
சிறியேம் சிற்றில் சிதையேலே!
சேண் ஆர் தணிகை மலைக்கு இறைவா!
சிறியேம் சிற்றில் சிதையேலே!
73✓
கங்கை அலை மிக்குறப் புடைத்தும்,
கயத்தின் அலர் தாமரை மிதித்தும்,
கானக் குறமான் புனத்து உழன்றும்,
கவின் ஆர் செச்சை விலா உதைத்தும்,
மங்கை உமையாள் மடித்தலத்து
மணிமேகலைக் கல் உறத் தளர்ந்தும்,
மை ஆர் களத்தன் திருமார்பில்
வனைந்த கேழல் மருப்பு அலைத்தும்,
திங்கள் தவழும் கொடுமுடிகள்
செறியும் மலைகள்தொறும் நடந்தும்,
தேவர் புனை மா மணி மகுடம்
தேய்க்கச் சிவந்தும், அரம்பையர்கள்
செங்கை வருடும் சீறடியால்
சிறியேம் சிற்றில் சிதையேலே!
சேண் ஆர் தணிகை மலைக்கு இறைவா!
சிறியேம் சிற்றில் சிதையேலே!
74✓
கானத்து இறைவா; மலைக்கு இறைவா!
கயிலைக்கு இறைவா! கலைக்கு இறைவா!
கமலத்து இறைவன் செருக்கு ஒழித்த
கருணைக்கு இறைவா! மகத்து இறைவா!
வானத்து இறைவா! மறைக்கு இறைவா!
மயிலுக்கு இறைவா! வருடை மிசை
மன்னும் இறைவா! செங்கடப்ப
மாலைக்கு இறைவா! மதிக்கு இறைவா!
மோனத்து இறைவா! அயிற்கு இறைவா!
மொய்ம்பு ஆர் கோழிக்கொடிக்கு இறைவா!
முனிவர்க்கு இறைவா! வேதாந்த
முத்திக்கு இறைவா! முடிவு இல் இன்பத்
தேன் நக்கு அலர் பொற் சேவடியால்
சிறியேம் சிற்றில் சிதையேலே!
சேண் ஆர் தணிகை மலைக்கு இறைவா!
சிறியேம் சிற்றில் சிதையேலே!
75✓
வந்தித்திடுவோம் முப்பொழுதும்;
வழுத்தியிருப்போம் திருப்புகழை;
வலம் வந்திடுவோம் நின் கோவில்;
மலரும் தருவோம் பூசனைக்கு!
பந்தித்திடுவோம் ஐம்பொறியும்;
பரம் என்று உனையே நினைந்திடுவோம்;
பாலும் பழமும் உவந்து அளிப்போம்;
பணிக்கும் உனது ஏவலும் புரிவோம்;
சந்தின் புழுகும் சுப்புரமும்
தனிக் குங்குமமும் கலந்து அணிவோம்
சலசத்து இறையும் மலை இறையும்
தண்ணம் திருப்பாற்கடல் இறையும்
சிந்தித்திருக்கும் சீறடியால்
சிறியேம் சிற்றில் சிதையேலே!
சேண் ஆர் தணிகை மலைக்கு இறைவா!
சிறியேம் சிற்றில் சிதையேலே!
76✓
வம்பைப் பொடித்து மான்மதத்தால்
வளரும் எமது முலைக்கரியை
வயங்கி ஒளிர் பன்னிரு புயம் ஆம்
மணிக் கந்து இறுகப் பிணித்திடுவோம்;
பம்பித் தரள முறுவல் நிலாப்
பயிலும் நினது செங்கனி வாய்ப்
பவளக் கடிகைத் துவர் இதழில்
பழுக்கும் சுவைத்தேன் பருகிடுவோம்;
நம்பித் துணை என்று ஒருவரையும்
நாடோம்; உனையே நாம் புணர்வோம்;
நவிற்றும் நினது தேவியர்பால்
நண்ணும் துணைச் சேடியர் ஆவோம்;
செம்பொற் கமலச் சேவடியால்
சிறியேம் சிற்றில் சிதையேலே!
சேண் ஆர் தணிகை மலைக்கு இறைவா!
சிறியேம் சிற்றில் சிதையேலே!
77(வேறு)✓
துயில் நீங்கி, கொடுவினை நீங்கி, சிறைத்
துனி நீங்கி, சுரர் களிகூர,
துணை நீங்கி, கொலு-அணை நீங்கி, திரி
துயர் நீங்கி, கரி இறை வாழ,
மயல் நீங்கிச் சுழல் மனம் நீங்கி, பழ
மலம் நீங்கி, தவர் தவம் மேவ
மறம் நீங்கி, திணி பொறை நீங்க, பல
மதம் நீங்கிப் புவிமகள் வீற,
உயிர் நீங்கி, புனை உடை நீங்கி, கருகு
உடல் நீங்கி, தகுவர்கள் மாய,
உரை நீங்கி, புயவலி நீங்கி, பிழை
உறல் நீங்கி, துணைவரும் மேவ,
அயில் ஏந்திக் கருமலை போழ்ந்திட்டவன்
அடியேம் சிற்றிலை அழியேலே!
அருள் தாங்கி, தணிகையில் ஓங்கு உத்தமன்!
அடியேம் சிற்றிலை அழியேலே!
78✓
தழை பாம்புக்குழை புனை பூம் பொற்கொடி,
சதிர் ஆம் சொற்கினி, மகமாயி,
சடை தாங்கு உத்தமி, நடை தூங்கல் பிடி,
தனி ஆம் தற்பரை, சதுர்வேதி,
கழை ஆம் பொற்சிலை மலர் ஆங்கு உற்றிடு
கரம் வாய்ந்துற்றவள், அபிராமி,
கலை தேர்ந்திட்டவள், மலையான் பெற்றவள்,
கடு ஆர்ந்திட்டவள், கலியாணி,
எழில் ஆம் பற்பல உலகு ஈன்றிட்டவள்
இனிது ஆம் சிற்புகம் உறு வாமி,
எனை ஆண்டு அற்புத அருள் ஈந்திட்டவள்,
இடம் ஆம் வித்தகன் விடை ஊரும்
அழலேந்திக்கு ஒரு மகன் ஆம் புத்திர!
அடியேம் சிற்றிலை அழியேலே!
அருள் தாங்கி, தணிகையில் ஓங்கு உத்தமன்!
அடியேம் சிற்றிலை அழியேலே.
79✓
கொலை ஏங்க, பழி வினை ஏங்க, குடை
கொடி ஏங்க, தகுவர்கள் நீடும்
குடி ஏங்க, கழல் அடி ஏங்க, தழை
குலம் ஏங்க, பெரு வரம் மேவும்
நிலை ஏங்க, சினமொழி ஏங்க, கொடு
நினைவு ஏங்க, புயவலிதானும்
நெடிது ஏங்க, புனைமுடி ஏங்க, படை
நிறைவு ஏங்க, பொறை அறு மாயை
மலை ஏங்க, குகை இருள் ஏங்க, பொலி
வளம் ஏங்க, தகுவியர்தாமும்
மனம் ஏங்க, பரியினம் ஏங்க, கரி
மதம் ஏங்க, புனல் செறி வாரி
அலை ஏங்க, பொரு சிலை வாங்கு அற்புதன்!
அடியேம் சிற்றிலை அழியேலே!
அருள் தாங்கி, தணிகையில் ஓங்கு உத்தமன்!
அடியேம் சிற்றிலை அழியேலே!
80(வேறு)✓
முற்றிலின் மணல் வாரி, முத்தொடு முழுநீலம்
மொய்த்திடும் அகில்ஆரம் முற்படு பனிநீர்கள்
வற்புறு நிழல் ஆடி, வச்சிரம் முதலான
மட்டு அவிழ் மலர்மாலை வைத்து அறையது கோலி
நல் தவ முனிவோரும் நச்சு எழில் இளமாதர்
நட்பொடும் எதிர்கூடி, நல் தணிகையில் வீதித்
தெற்றியில் விளையாடும் சிற்றிலை அழியேலே!
சித்திர மயில்வீரா! சிற்றிலை அழியேலே!
81(வேறு)✓
பற்பல மணியாலும், பச்சிலை மலராலும்,
பத்தி கொள் அறைவீடு, பக்கமது உறு மேடை,
பொற்பு உறு மணி மாடம், புக்கு இனிது உறு கூடம்,
புத்தமிர்து அடு தூதை, பொற்கலம் நிறைசால் நீர்,
வெற்பு உறு குறமாதர் மெய்த்தணிகையில் வீதி
விற்கறி, சிறுசோறு மிக்குற விளையாடும்
சிற்பனும் உளம் நாணும் சிற்றிலை அழியேலே!
சித்திர மயில்வீரா! சிற்றிலை அழியேலே!