முருகன் App
திருத்தணிகைப் பிள்ளைத்தமிழ்
கந்தப்ப ஐயர்
செங்கீரைப்பருவம்3 / 11
திருத்தணிகைப் பிள்ளைத்தமிழ் · கந்தப்ப ஐயர்

செங்கீரைப்பருவம்

12✓
புகழ் பூத்த கார்த்திகை எனும் செவிலிமாதர் தண்
புனல் ஆட்டி, மெய் தொடைத்து
புவியில் வாய்நீர் உமிழ்ந்து, அணி விரலினால் தேய்த்துப்
புது நுதல் திலகம் இட்டு,
மகிழ் பூத்த பூதித் திருக்காப்பு அணிந்து, தம்
மடிமேல் இருத்தி, எழில் சேர்
மணி முலைப் பால் ஊட்டி, மார்பு அணைத்து, உச்சிதனை
மோந்து, வாய் முத்தம் ஆடி,
அகழ் பூத்த சரவணப் பொய்கை அம் தொட்டில் மலர்
அணையில் கிடத்தி அகல,
அளியினம் தாலாட்ட, அலை கயிறதாய் வளி
அசைப்ப, துயின்று எழுந்து,
திகழ் பூத்த விளையாடல் பயில் செருத்தணிகை இறை!
செங்கீரை ஆடியருளே!
சேணாடர் அர்ச்சனை செய் சேனாபதிக் குரிசில்
செங்கீரை ஆடியருளே!
13✓
மேனை எனும் மாதாமகீ தந்த பொற்கட்டி
வெண் பிறை நுதற்கண் ஆட,
மென்முலைப் பால் கறந்து ஊட்டியிடு கைத்தாய்
மிலைச்சு பூஞ் சுடிகை ஆட,
வானம் உறு கார்த்திகைத் தாதியர்கள் செவியில் அணி
மகர குண்டலமும் ஆட,
வரநதி எனும் செவிலி புனையும் அரைமணி ஆட,
வளர் சரவணப் பொய்கை ஆம்
மானம் உறு கோடாய் அணிந்த வயிரக் கடகம்
மறைமலர்க் கையில் ஆட,
வண்மை பெறு பாண்டிமாதேவி எனும் நற்றாய்
வனைந்திடு சதங்கை ஆட,
தேன் ஒழுகு பைங்குவளை மலர் செருத்தணிகை இறை
செங்கீரை ஆடியருளே!
சேணாடர் அர்ச்சனை செய் சேனாபதிக் குரிசில்
செங்கீரை ஆடியருளே!
14✓
பூமி எனும் நல் மாமி அசுரர் புரி வேதனை
பொறுக்கலாது அயர் துன்பு எலாம்
போக்குவல் எனத் திரு உரத்து இரு கை வைத்தல்போல்
பொற்கரம் நிலத்தில் ஊன்றி,
மீமிசை உறும் தேவர் படு சிறை எலாம் களைய
மேக்கு எழும் செய்கை மான
மென்மெலக் கந்தரம் எடுத்துஎடுத்து அந்தர-
மிசைப் பசுந் தலை நிமிர்த்து
தோம் இல் தவ மாமுனிவருக்கு இடர் விளைத்த ஒரு
சூர் வலிதனைக் கூறுவல்போல்
சுந்தரப் பொன்முடி அசைத்து அசைத்துத் தண்டை
சூழ் கால் சதங்கை கொஞ்ச,
தேமருவு கல்லாரம் அலர் செருத்தணிகை இறை
செங்கீரை ஆடியருளே!
சேணாடர் அர்ச்சனை செய் சேனாபதிக் குரிசில்
செங்கீரை ஆடியருளே!
15✓
பொன்மலைச் சாரலின் உறும் திருச் சரவணப்
பொய்கை ஒரு கட்டில் ஆக,
பூந்தாமரைச் சேக்கை மலர் மெத்தை ஆக,
புனற்கரை மரம் கால்கள் ஆய்,
மின் மலியும் மீனின் நெருங்கிப் பரந்த வான்
வெண்மலர்ப் பந்தர் ஆக,
வீறு பைந் தருமலரின் இடைவிடாது ஒழுகு தேன்
விசித்த ஊசல் கயிறு அது ஆய்,
துன் மலைகள் ஆம் அலையின் ஒலி முழுவது ஆய், வளைத்
தொனி மிகத் தும்பி பாட,
தோலடிப் பறவை ஒலி செஞ்சிலம்பு ஓசையின்
தோன்ற மகிழ் கூர்ந்து துயிலும்
தென் மலய மாமுனிக்கு அருள் செருத்தணிகை இறை
செங்கீரை ஆடியருளே!
சேணாடர் அர்ச்சனை செய் சேனாபதிக் குரிசில்
செங்கீரை ஆடியருளே!
16✓
வெள்ளி வரையில் குடி விழைந்த பரமன் செவியில்
வீறு சங்கக் குழையினை
மென் மலர்க் கைப் பிடித்து, உரம் மேவு சிரமாலை
மீது ஏறு சோபானமாய்,
துள்ளிக் களித்து, அடி சிவப்புற மிதித்துத்
துவைத்துச் சுவற்கண் ஏறி,
சுடர் பொற் கடுக்கை பொதி வேணியை அவிழ்த்திட,
சுரநதி குதிப்ப மூழ்கி,
பிள்ளைமதியைப் பிடித்து அரவின்வாய் வைத்து, அவண்
பிரியாத முகிலை ஈர்ப்ப,
பெரிது உடல் நடுங்கித் தடித்தொடும் இடித்து மழை
பெய்ய விளையாட்டு அயர்தரும்
தெள்ளு புனல் ஊறு கற்சுனை மருவு தணிகை இறை
செங்கீரை ஆடியருளே!
சேணாடர் அர்ச்சனை செய் சேனாபதிக் குரிசில்
செங்கீரை ஆடியருளே!
17வேறு✓
மழை நிகர் விழியின் அருட்கடை ஆட,
மணிப்பட்டமும் ஆட,
மார்பில் அணிந்த மதாணியும் ஆட,
வரைத்தோள் அணி ஆட,
தழை கனிவாய் ஒழுகும் புனல் ஆட,
சரி தொந்தியும் ஆட,
தண்டை சதங்கை புலம்பு பதம் திகழ்
தனி நூபுரம் ஆட,
குழை அணியும் பன்னிரு செவி ஆட,
குஞ்சி அசைந்து ஆட,
கோது அறு பொன் அரைநாண் அரை ஆட,
குற்றுடைவாள் ஆட,
அழிவு இல் பதம் தரு தணிகை அமர்ந்தவன்
ஆடுக, செங்கீரை!
அமரர் புகழ்ந்திட அசுரரை வென்றவன்
ஆடுக, செங்கீரை!
18✓
நிறம் திகழ் குஞ்சி புனைந்திடு மலரொடு
நிமிர்தலை ஆறு ஆட,
நெடுநிலமிசை எழு வரை உறழ் திணிபுய
நீள் கடகமும் ஆட,
மறம் திகழ் அவுணர் உரம் தொளைபட விடு
வைவேல் வெயில் ஆட
மார்பில் வனைந்திடு நீபம் உறும் களி
வண்டு ததைந்து ஆட,
சிறந்திடு செங்கழுநீர் இதழ் அங்குலி
செறி மோதிரம் ஆட,
செவ் அரையில் திகழ் வட்டுடை ஆட,
சேவற் கொடி ஆட,
அறம் திகழ் அன்பர் தொழும் தணிகைப் பரன்
ஆடுக, செங்கீரை!
அமரர் புகழ்ந்திட அசுரரை வென்றவன்
ஆடுக, செங்கீரை!
19✓
திருமலர் வாய்தொறும் நகைநிலவு ஆட,
செந்துவர் இதழ் ஆட,
தெரிவையர் மதர்விழி இருபுறம் ஆட,
சிறுநுதல் வேர்வு ஆட,
குரு மணி மேகலை புனை வடம் ஆட,
குல மா மயில் ஆட,
கோது அறு மாதவர் பூசுரர் நெஞ்சு
குழைந்து குழைந்து ஆட,
தரு அயிராணி பொன்மாது எனும் மாமியர்
தாம் களி கூர்ந்து ஆட,
தாரகை ஆகிய தாயரும் ஆசை
தழைந்து மகிழ்ந்து ஆட,
அரி கமலாசனர் பணி தணிகாசலன்
ஆடுக, செங்கீரை!
அமரர் புகழ்ந்திட அசுரரை வென்றவன்
ஆடுக, செங்கீரை!
20(வேறு)✓
உமையொடு பரசிவன், ‘உலகினை வலம் முனம்
வந்தால், இன்றேதான்
ஒரு கனி உதவும்; இது பொழுது அகலுதிர்!’
என்றே முன்பு ஓத,
தமையனொடு இகல் புரிதரு பிணிமுகமிசை
தங்காது அங்கு ஏறி,
சகம் முழுதையும் ஒரு நொடியினில் வலம்வரு
தந்தாய்! செந்தூரா!
கமை அறு நிசிசரர் அவிதர அயில் விடு
கந்தா! மந்தாரக்
கடிமலர் முடிபுனை சசிமகள் வடுவகிர்
கண் பாவும் தோளா!
சிமையமது உயரிய தணிகையில் அறுமுக!
செங்கோ செங்கீரை!
திருமகள் மருமகன் என வரு குருபர!
செங்கோ செங்கீரை!
21✓
கஞ்சன் இகழ்ந்து நடந்திட, அங்கு அது
கண்டே, வெங்கோபக்
கனல் படு மனமொடும், ‘உலகினை மறைகொடு
தந்தாய் என்றால், நீ
விஞ்சிய சங்கிரகம் படு மந்திரம்
முந்து “ஓம்” என்பாயேல்,
விரி பொருள் எது? அது புகலுதி!’ எனலும்,
மயங்கா நின்றானை.
குஞ்சி உறும் தலை பொந்து படும்படி
கொந்து ஆரும் பாணிக்
குரு விரல் பொதிதர, ஒரு முறை அறைதரு
குன்றே! பொன் தோய் கற்
செஞ்சிலை கொண்டவன் அன்று அருள் சுந்தர!
செங்கோ செங்கீரை
திணி மல இருள் தவிர் தணிகையில் வரு குக!
செங்கோ செங்கீரை!