திருத்தணிகைப் பிள்ளைத்தமிழ்
கந்தப்ப ஐயர்
சிறுபறைப்பருவம்10 / 11
திருத்தணிகைப் பிள்ளைத்தமிழ் · கந்தப்ப ஐயர்
சிறுபறைப்பருவம்
82✓
கனை கடல் உடுத்த புவி முழுவதும் நொடிப்பு அளவில்
கடிது வலமுற்ற சரணா
கமல மலரில் குடிகொள் பிரமனை அடித்து உலகு
கருணையின் அளித்த சதுரா!
தனை அவிழ் கடப்ப மலர் குவளையொடு செச்சை புனை
நல மலை நிகர்த்த புயனே!
நதி, அரவு, கொக்கு இறகு, பிறைமதி முடித்த சடை
நயன நுதலத்தன் மகனே!
வனை கழல் அரக்கரொடு மயல் புரி பொருப்பினையும்
மடிய, அயில் விட்ட கரனே!
மழையினொடு நல் தவள மதகரி மிசைக் குலவு
மசுபதி மகட்கு இனியனே!
தினை வளர் புனத்து அருவி இழி தணிகை வெற்பு அரச!
சிறுபறை முழக்கியருளே!
திமிர மலம் அற்றவர்கள் தெளிய வரு சிற்சொரூப!
சிறுபறை முழக்கியருளே!
83✓
கொலை புரி தயித்தியர்கள் உடல் தலைகள் அற்று ஒழுகு
குருதிகள் குடித்து நரி, நாய்,
குறைபடும் உடற்கு நிகர் கரணமொடு சுற்றிவரு
குறளிகள்தமைக் கறுவ, நீள்
மலை நிகர் பிணக்குவையின் உறுகுடர் புயத்து அணியும்
வயிரவர் களித்து மகிழா,
மருவு கழுமுள் படையை முறைமுறை திரித்து, வய
மகள் எதிர் நடிக்க, அழல் ஆர்
உலை உறு குடத்தினிடை வறைபடு தசைப் பொரியல்
உருகு நிணம் முற்றும் அயிலா,
உறு கழுகு, மைக் கொடிகள் வறுமை அற வெற்றி அயில்
ஒரு நொடியில் விட்ட முருகா!
சிலை மறவர் மொய்த்து வளர் தணிகை நகருக்கு அரச!
சிறுபறை முழக்கியருளே!
திமிர மலம் அற்றவர்கள் தெளியவரு சிற்சொரூப!
சிறுபறை முழக்கியருளே!
84✓
குறைவு அறு தவத்தை உறு கொடி இடை எயிற்றியர்கள்
குலவு நடை கற்ப, எகினம்
குளிர்முகம் நிகர்ப்ப எழு சுனையிடை முளைத்த ஒரு
கொடிய பதம் வைத்து, நிறைநீர்
உறுதவம் இயற்றல் நிகர்தரு கமல மெத்தைமிசை
உறையுமவர் பொற்பின் நிழல்போல்
உயர் தவம் இயற்றி மகிழ்வொடு தழல் வளர்ப்பது என
ஒளிர் கனல் புடைக்கண் எரியா,
மறு அறு கழைத்தலையில் மயிலினம் நடிக்க, அவர்
மருவு குதலைக்கு நிகர் ஆம்
மறைதரு குயில் தொகுதி, முகிலினம் வர, கடிது
மவுனம் உறு பெற்றிமை குலாய்,
சிறு மிளகு வெற்றிலையின் ஒளிர் தணிகை வெற்பு இறைவ!
சிறுபறை முழக்கியருளே!
திமிர மலம் அற்றவர்கள் தெளியவரு சிற்சொரூப!
சிறுபறை முழக்கியருளே!
85✓
கழையின் உகு முத்தின் நிலவு ஒழுகும் ஒளியில் குவளை
கடி இதழ் அவிழ்க்க, வளையின்
கதிர் மணியினில் குமுதமுகை புரி முறுக்கு விரி
கழனி அலை தத்து புனலின்
நுழை சிறு கயல் புகுதும் அளவில் எதிர் குத்தி இடை
நொசி கமுகின் மொய்த்த குலைமேல்
நுகரும் முது கொக்கின் வளை மிடறு ஒடிதரச் சினவி,
நொடி வரை குதித்து எழு வரால்
மழை அகடு முட்டி, மிசை வரு கதிரை எட்டி, உயர்
மதியமுது உகுத்து, வெடி போய்
மட நடையுடைக் கனக வன வளமுடைப் புவன
மடு நடுவில் உற்ற கமலச்
செழு மலர் மிசைத் துயிலும் உயர் தணிகை வெற்பு இறைவ!
சிறுபறை முழக்கியருளே!
திமிர மலம் அற்றவர்கள் தெளியவரு சிற்சொரூப!
சிறுபறை முழக்கியருளே!
86✓
நடம் இடு மயில் தொகுதி, இசை வளர் குயில் தொகுதி
நடை பயில் அனத் தொகுதி போல்
நவில் இயல் தழைத்து இனிய மழலை மொழி கற்று இளைஞர்
நகு நடை படைத்த மடவார்
தட வரை முடிக்கண் இவர்தரலுறு சுவர்க்கம் உறு
சசியின் எழிலைக் கவர, வான்
தலைமிசை நடிக்க எழு தகைமையை நிகர்க்கும் மழை
ததைதரு மலைச் சரிவிலே,
பட அர முடிக்கண் ஒளிர் மணி வெயில் எறிப்ப, இருள்
படு குகை விளக்கம் எனவே,
பயன் உறு கரிக்கணமும் அயல் உறும் அரிக்கணமும்
பகைமை அற ஒத்து, உறைதரும்
திடம் உள பொருப்பர் குடியிறு தணிகை வெற்பு இறைவ!
சிறுபறை முழக்கியருளே!
திமிர மலம் அற்றவர்கள் தெளிய வரு சிற்சொரூப!
சிறுபறை முழக்கியருளே!
87✓
வட வரை முகட்டில் உறு துருவனும், மகத்து இறையும்,
வனச மலர் உற்ற அயனும்,
மதியமும், உடுக்குலமும், மலர்கதிரும், மைக்கடலும்,
மகிதலமும், மற்றையவரும்,
பட அரவம் எட்டினொடு கட கரிகள் எட்டும் அவை
பயில் திசைகள் எட்டும் இறினும்,
பயன் உறு தவத்தின் நிலை அழிவு அரிய சித்தரொடு
பல முனிவர் மொய்த்த குகை சூழ்,
மட நடை எயிற்றியர்கள் இயல் உறும் மணிக் கலவ
மயில் முகில்வர, கணிகள்மேல்
மனம் மகிழ்தரக் குலவி, நடம் இடு சதிக்கு இசைய
வனசரர்கள் கொட்டு துடி ஆர்,
திடம் உறு துகிற் கொடிகள் உயர் தணிகை வெற்பு இறைவ!
சிறுபறை முழக்கியருளே!
திமிர மலம் அற்றவர்கள் தெளியவரு சிற்சொரூப!
சிறுபறை முழக்கியருளே!
88(வேறு)✓
தழைத்திடு தமனியம் இழைத்திடு மணிவெயில்
ததைத்திடும் எழுநிலைமேல்
சரித்திடு வனிதையர் முகத்து எழில் கவர்மதி
தளைப்படு நுழைவழி போய்,
மழைக்குலம் அவர்குழல் வனப்பினை நனி கவர்
மகிழ்ச்சியின் மழை பொழியும்
வருத்திடும் அவர் இடை எழில் கவர் தரு மினும்
மதத்தொடு நொடி அழியும்
செழித்திடு புரிசைகள் மிசைப்படு கொடி வளி
செறித்திட அசைதரலால்,
சிறப்பு உற வரு கதிர் இளைப்புறு துயர் தவிர்
செருத்தணி மலை இறைவா!
முழைச் செவி மலை உடல் அரக்கரை அடு குக!
முழக்குக, சிறுபறையே!
முழுத்திய மல இருள் ஒழித்திடு தினகர!
முழக்குக, சிறுபறையே!
89(வேறு)✓
மலைச் சரிவினில் வளர் தினைக் கதிரினை நுகர்
வரிக் கிளிதனை இதன்மேல்
மறத்தியர் அணி விரல் சுழற்றிய கவண் எறி
மணிக்கல் வல் விசையொடு போய்,
புலத்து உறு கடைசியர் களித்திடு குரவையின்
பொழில்-கமுகு உறு. குலைமேல்
பொருக்கென விழ, முதிர் பழத் திரள் பல இரு
புறத்து உதிர் தரு கனியும்,
செலைத்தொடு கதலியின் குலைக்கனிகளும் எழில்
திளைத்திடும் உழவர் எலாம்
செறித்து அனுதினம் உழு வயல்தலை எரு இடு
செருத்தணி மலை இறைவா!
முலைக் குவடு அசைதர, மறத்தியர் நகைசெய,
முழக்குக சிறுபறையே
முழுத்திய மல இருள் ஒழித்திடு தினகர!
முழக்குக, சிறுபறையே!
90(வேறு)✓
கடைப்படு பிறவியின் அகப்படும் இருவினை
கலக்குற நிலை குலையா,
கறைப்படு நரகொடு துறக்கமும் உழல்தரு
கசட்டனை அருள் விழியால்,
தடைப்படு மயலினை அறுத்து, இகல் அற ஒளிர்
தனிக் கழல் நிழல் நிறுவி,
சலிப்பு அறு பரசுக அளக்கரில் எனது உயிர்
தழைத்திட விடு முருகா!
குடத்தினை நிகர்தன மறத்தியர் இயல் மயில்
குறித்து அனுதினம் மருவா,
குறிச்சியில் உறு கணி மரத்தினில் அமர்தரு
குகைத் தணி மலை இறைவா!
முடக்கிய மணி விரல் பிடித்திடு குணில் கொடு
முழக்குக, சிறுபறையே!
முழுத்திய மல இருள் ஒழித்திடு தினகர!
முழக்குக, சிறுபறையே!
91(வேறு)✓
தகைத்திடு பொறிவழி உகைத்திடு புலனொடு
தடைப்படும் மனம் நிறுவா,
தவத்தினை அநுதினம் உஞற்றிய முனிவரர்
தமக்கு எதிர் பிணிமுக மேல்,
மிகுத்திடு நறை பொழி கடப்பலர் அணிதரு
விறல் புயம் அசைதரவே,
விண்ணில் செறி பிடியொடு குறக்கொடி இருபுறம்
விருப்புற வருபவனே!
திகைத்திடு நிருதர்கள் பகைத்து எதிர் விடு கணை
சிதைத்து அவர் தலை அறவே
செகுத்திடும் இலை அயில் பிடித்திடும் அறுமுக!
செருத்தணி மலை இறைவா!
முகிழ்த்திடும் அணி விரல் பிணித்திடு குணில் கொடு
முழக்குக, சிறுபறையே!
முழுத்திய மல இருள் ஒழித்திடு தினகர!
முழக்குக, சிறுபறையே!