திருத்தணிகைப் பிள்ளைத்தமிழ்
கந்தப்ப ஐயர்
சிறுதேர்ப்பருவம்11 / 11
திருத்தணிகைப் பிள்ளைத்தமிழ் · கந்தப்ப ஐயர்
சிறுதேர்ப்பருவம்
92✓
அறுபதம் மிதிப்ப, முகை விண்டு தண் தேன் துளி
அசும்பு சலசப் பொகுட்டின்
அரசு இள அனம், சங்கு வயிறு உளைந்து ஈன்ற மணி
அவிர் பெடை உயிர்த்த கரு என்று,
உறு சிறை அகத்து வைத்து அடைகிடந்திடு வயல்
உடுத்த கன்னல்-காடு வான்
ஓங்கு கமுகைத் தீண்ட, வளர் கழுகு தெங்கின் முப்
புடைய கனியைத் தாவிட,
செறி இலை முடத் தாழை இரவி இரதம் தொட,
செழித்த தண்ணடைகள் புடைசூழ்
திருநந்தி ஆறு புனல் பெருகு கால் ஊர்தொறும்
திகழ் திருத் தணிகை நாடா!
சிறை தவிர் அமரர் உறு குறை தவிர்த்து அருள் குமர!
சிறுதேர் உருட்டியருளே!
சிவஞான சித்திதர! வரு ஞான சத்திதர!
சிறுதேர் உருட்டியருளே!
93✓
கவான் மலையில் விளையாடு வனசரர் சிறார் விளாங்
கனி உதிரவே எறிந்த
கரி மருப்பு அயல் சூழும் மருதம் உறு தண் பலாக்
கனியினைச் சாடி, உழவர்
குவால் உறப் புரியும் நெற்போர்மீது வரையின் ஊர்
குழவிமதி ஒப்ப வீழும்;
கொண்டல் உருவக் களமர் தரு மகார் வான் ஓங்கு
கொக்கின் முதிர் கனி உதிரவே
தவாது எடுத்து எறி சங்கு வெள்ளில் அம் கனிகளைச்
சாடி, வனசரர் குடிசைமேல்
தவழும் முழுநிலவு எனத் திகழும் அதிசயம் மருவு
தணிகை அம் கிரி முருகனே!
திவாகரன் இவர்ந்துவரு தேர் நாண ஒளிர்மணிச்
சிறுதேர் உருட்டியருளே!
சிவஞான சித்திதர! வரு ஞான சத்திதர!
சிறுதேர் உருட்டியருளே!
94✓
கொந்து ஊர் மலர்த் தடத்து, அரவிந்த மெத்தையில்
குடிகொண்ட வாழ்க்கை ஒருவி,
குட வயிறு உளைந்து அலறி வாய்விட்டு அரற்ற, நீர்க்
கோடு ஏறி வயலின் ஊர்ந்து,
முந்து ஊர் புனற் காலின் ஓடித் தவழ்ந்து, உழவர்
முன்றிலில் சென்று, மேதி
முதுகில் தவழ்ந்து ஏறி, அசலம் நிகர் நெற்போரின்
முடிமிசைச் சென்று இறங்கி,
சந்து ஊரும் மலையருவி நீரினில் எதிர் ஏறி,
தடஞ் சுனை எலாம் உழக்கி,
தவர் உறு முழைக்குள் தவழ்ந்து, முத்து ஈன்று, வளை
தங்கு தென் தணிகை இறைவா!
செந்தூர் இருந்து அவுணர் நந்து ஊர் அழித்த குக!
சிறு தேர் உருட்டியருளே!
சிவஞான சித்திதர! வரு ஞான சத்திதர
சிறு தேர் உருட்டியருளே!
95✓
சகத்திரத் தோடு விரி கஞ்சப் பொகுட்டில் உறை
சதுமுக விரிஞ்சன் எழுதும்
தலைப்பொறி அனைத்தையும் உணர்ந்த சித்திரகுத்தர்
சாற்றிய கணக்கை வினவி,
மிகப் பருத்து ஓங்கி வளையும் கருங் கோட்டு, முழை
மேவு பிலவாய், செங்கண்
மேதிக் கடாவைக் கடாவி, முச் சிகை மருவு
வெள் வேல் திரித்து முகிலின்
வகைப்படும் இருட்டு உருவம் அசனி உரை வாய்ந்து, பிறை-
வாள் எயிறு இலங்கு சண்டன்
வாராமுன் என்தனைக் காத்தருள் திருத்தணிகை
மா மலையில் வாழும் முருகா!
செகத்தில் உயிர் யாவையும் அளித்த அம்பிகை மதலை!
சிறுதேர் உருட்டியருளே!
சிவஞான சித்திதர! வருஞான சத்திதர!
சிறுதேர் உருட்டியருளே!
96✓
தாரகன் தேரினை உருட்டி, அரிமாமுகன்
தனது பேய்த்தேர் உருட்டி
தா இலாச் சூரன் இந்திரஞால இரதம்
தகர்ந்திட உதைத்து உருட்டி,
வீரர் ஒன் பதின்மர் தேரொடு படைத்தலைவர் தேர்
வெவ்வேறு புடை சூழ் தர,
மேதினி எனும் பரமன் ஏறு தேர் எங்கும்
விரிந்திடும் இரண்டாயிரம்
பேர் எனும் தொகை மருவு பூதவெள்ளத்தின் நடு
பிறழ் மணித் தேரில் ஏறி,
பெயர்த்து அலை எறிந்திடு கடல்-தலை நிசாசரர்
பிணக் குவை படத் தொலைத்து,
தீர அரிது ஆம் சினம் தவிர் செருத்தணிகை இறை!
சிறுதேர் உருட்டியருளே!
சிவஞான சித்திதர! வரு ஞான சத்திதர!
சிறுதேர் உருட்டியருளே!
97✓
மங்குலைத் தீண்டு கொடி மணி மாட முடி தவழும்
மதி-இளம்பிள்ளை மடவார்
மடிமீது சிறு குழவி என உவந்து ஏறலும்,
மகிழ்ந்து, மணி முறுவல் பூத்து,
பங்கய மலர்க் கரத்து ஏந்தி வாய் முத்தாடி,
பஞ்சணையின் மீது சேர்த்தி,
பாலொடு பழம் கனிந்து உதவி முகமன் சொலி,
பரிந்து, விளையாடி வா என்று
அங்கண் அகலும்படி விடுத்திடு விருப்பினால்
அனுதினம் கலைகள் வளரும்
அழகிய செருத்தணிகை வரை நினைந்தவர் வினை
அறுத்தருளும் ஆறுமுகவா!
செங்கதிர்த் தேர் நாண, அம்புவித் தேர்மீது
சிறுதேர் உருட்டியருளே!
சிவஞான சித்திதர! வரு ஞான சத்திதர!
சிறுதேர் உருட்டியருளே!
98✓
பேய்த்தேரை நீர் எனக் கொண்டு உழலும் இரலையின்,
பிணித்திடு கயிற்றில் அரவப்
பிராந்தி உறும் ஒருவனின், சுத்தி நிகழ் இரசிதப்
பித்து அடைந்திடு பேதையின்,
பூத்தேரின் உறு வாழ்வு மெய் என்று கருதி, யான்
பொறிவழிச் சென்று, பஞ்சப்
புலனையும் அருந்தி, யான் எனது எனும் அகந்தையால்
புன் பிறவி அணுகு மலநோய்
நீத்து, ஏர் பெறும் திருவடித் தாமரைப் போதின்
நீழல் தந்து, ஆனந்தம் ஆம்
நித்த பரிபூரண சிதாகாச வெளியிலே
நிலைபெற விடுத்த முருகா!
தேய்த்தே முடிக்கண் மதி தவழ் தணிகை வெற்பின்மேல்
சிறுதேர் உருட்டியருளே!
சிவஞான சித்திதர! வரு ஞான சத்திதர!
சிறுதேர் உருட்டியருளே!
99✓
காமக் குரோதம் மிகு லோபமொடு மோகமும்
கருதி மத மாச்சரியமும்
கட்டிப் பிணித்து நிரையத்தில் இடும் ஐம்புலக்
காதலும் அறத் துறந்து,
தாம் உற்றிடும் துறவறத்தின் நிலை தவறாது
தழை கானகத்து அடைந்து,
சருகு அருந்தி, பஞ்ச தழலிடை இருந்து, நல்
தவம் இயற்றிடு மாதவர்
தோம் அற்ற சிந்தனைக்கு எட்டாத நின் திருத்
துணை மலர்ப்பத நீழலில்
துயர் அற இருத்தி, எனை ஆண்டருள் செருத்தணி
சுடர்க்கிரி அமர்ந்த முருகா!
சேமித்த மறை நெறிகள் எங்கணும் விளங்கிட,
சிறுதேர் உருட்டியருளே!
சிவஞான சித்திதர! வரு ஞான சத்திதர!
சிறுதேர் உருட்டியருளே!
100(வேறு)✓
மனத்தொடு மொழி உடல் ஒருப்படும் அடியவர்
வணக்கொடும் அடி பேண,
மலத்தொடும் இரு வினை அகப்படும் உயிர் அருள்
வசப்படு திறம் நாடி,
சினத்தொடு மயல் விழைவு அளித்திடு பொறி புலன்
சிதைத்து, அறிவினில் ஓவாச்
சிவத்தினை அடைதர, அவத்தைகள் கழிவுறு
செயற்கையை எளிது ஈய,
தனித்து ஒரு மயில்மிசை இருத்திய கழலொடு
தவத்தினர் புடை சூழ,
சலிப்பு அற எதிர் வரும் அருத்திகொள் அறுமுக!
தலத்து உயர் குருநாதா!
உனக்கு உறு வலவனும் மனத்து அதிசயம் உற,
உருட்டுக, சிறுதேரே!
உலப்பு அறு வளம் மலி செருத்தணி மலையவன்
உருட்டுக, சிறுதேரே!
101✓
தரைத்தலை முனிவர்கள் உரைத்திடு சுருதிகள்
தழைத்த பனிரு காதில்
தமிழ்க்கடல் உறு விதி தினைத்துணை அறிவிலி
சலிப்பு அறும் விழைவாலே
விரித்திடு புகழ்பெறு பிளைத்தமிழ் ஒருசத
விருத்தமும் நனி ஏறும்,
வெளிற்று உரு உறு கரிமிசைக் குலவிய கழல்
வெறிக்கணும் உறலாலே;
குருப் பொலி இமையவர் அளித்திடும் அமுதொடு
குறத்தியர் தினைமாவும்
குளிர்ப்புற நுகர்தரு களிப்பொடு மகிழ்பெறு
குலப் புதுமலர் வாயா!
ஒருத்தரும் நிகர் அறு செருத்தொழில் வல குக!
உருட்டுக, சிறுதேரே!
உலப்பு அறு வளம் மலி செருத்தணி மலையவன்!
உருட்டுக, சிறுதேரே!