திருத்தணிகைப் பிள்ளைத்தமிழ்
கந்தப்ப ஐயர்
வருகைப்பருவம்7 / 11
திருத்தணிகைப் பிள்ளைத்தமிழ் · கந்தப்ப ஐயர்
வருகைப்பருவம்
52✓
கண்ணனும் கனக நிற வண்ணனும் திரு நுதற்-
கண்ணனும் ஒருங்கு உறைதல்போல்
கருமலை இடத்து உற, செம்மலை வலத்து உற,
கவினும் வெண்மலை இடையதாய்,
பண் அமரும் நந்திநதி புடைசூழ, இடைஇடைப்
பைஞ்சுனை வயங்க, மீச்செல்
பயோதரம் வயா நலிவுற, கொடி கடாக்கல் பல
பாவையர் மருத்துவம் செய்து,
உள் நிலவு நீர் மகவு உயிர்த்திட, விலாப்புறத்து
ஒண் கரத்தால் வருடல்போல்,
ஓங்கு முடிமேல் ஊன்று வெள்ளிவீழ் என்ன மழை
ஒழுகு நீர் அருவி இழிதல்
தண் நிலவு கல்லார மாலை அணி மாண்பு நிகர்
தணிகை நாயகன் வருகவே!
தடா மலப்பிணி எனை அடாது சிற்சுகம் அருள்
சடானனக் குரு வருகவே!
53✓
நாவலம் பெயர்புனை பொலந்தகடு அணிந்தநுளன
நனை இதழ் முறுக்கு அவிழ்ந்து,
நளிர் வண்டு உணாது ஒளிர் விளக்கு ஏற்றி வைத்தது என
நறு மலர்கள் துறு செண்பகக்
காவில், அந்தணர் புரியும் ஓம அங்கியின் நிமிர்
கரும்புகைப் படலம் மீப் போய்,
கடவுளர்க்கு ஆயுளை வளர்த்துமுகில் மேனி பொதி
காட்சியால் களி துளும்பி,
தூவுமின் குலவு நகை வாய் நவின்று உரறி மதி
தோறும் மும்மாரி பொழி நீர்
துன்னு கண் பணையயில் வளர் செஞ்சாலி ஓங்கு கதிர்
சூரியன் பரிகள் தினவே,
தா இல் இன்பு உறு குடிகள் மேவு தண்ணடை குலவு
தணிகை நாயகன் வருகவே!
தடா மலப் பிணி எனை அடாது சிற்சுகம் அருள்
சடானனக் குரு வருகவே!
54✓
ஆசினியின் முட்புறக் கனி பழுத்து, ஒண்புவி
அதிர்ந்திட வெடித்த விடரின்
அவிர் சுளை விரிந்து நறை ஒழுகு மணம் எண்திக்கும்
அளவு கால் வழியின் ஓடி,
மூசு வண்டினம் அளவி மொய்த்தல், நிதியின் புதையல்
முன் கண்டு கவரும் வறியோர்
முறைமகள் தெரித்திடும் சாரல் உறு சோலைகளின்
முதிர் கறிக்கொடியின் மிளகைக்
கூசு கரும் இள மந்தி தின்று, அழுதல் கண்டு, வன்
கோடரம் தேனின் அடையைக்
கொண்டு வந்து அதன் நாவிடைப் பிழிந்திடலும், மகிழ்
கூர்ந்து விளையாடு பணைசூழ்
தாசரதி ஆசிரியன் ஆகி உயர் வாழ்வு தரு
தணிகை நாயகன் வருகவே!
தடா மலப்பிணி எனை அடாது சிற்சுகம் அருள்
சடானனக் குரு வருகவே!
55✓
கானத்தை ஒத்த பைங் கதலியின் புலி அடிய
காய்க்குலை அறுத்து, மீப் போய்,
கமுகு இளம் பாளை மடல் கீறி, முப்புடைய தெங்-
கம் பழம் உதிர்த்து எழுந்து,
வானத்து அகட்டைப் பிளந்து, மழை சிதறி, உயர்
மதியின் உறு மானை முட்டி,
வானமீனைச் சினந்து, ஆகாயகங் கையிடை
வளர் சுறவின் முள் தகர்த்து,
கூன் நத்தை ஒத்த கண்டத்து அரம்பையர் செவிக்
குழை மகரமும் கிழித்து,
கோளகை இடித்து, புறம் கோத்த நீரில்
குதிக்கும் இள வாளை உகளும்
தானத்தினொடு மருவி, நீர் ஆறு பாய் வயல்
தணிகை நாயகன் வருகவே!
தடா மலப் பிணி எனை அடாது சிற்சுகம் அருள்
சடானனக் குரு வருகவே!
56✓
வாள் தடங்கண் செறி உழத்தியர் சரோருக
மலர்க்களை எடுத்து, அருந்தி,
மரு மலர்க்கைக் கோப்புடன் குரவை ஆடும் ஒலி
மஞ்சின் ஒலியைப் புடைப்ப,
நாட்ட அருஞ் சுமைகள் தரு தொழுவரைப் போர்மேல்
நயந்து இவர்ந்து ஏறும் உழவர்,
நாவலோ!' என்று கூவிளி கொளும் சும்மை அலை
நரலையைத் தட்ப, வயலின்
ஈட்ட அருங்கள் தரளம் முதிர் கரும்பைத் தறித்து
எந்திரத்து இட்டு மள்ளர்
எறியும் முட்கோல் கொடு கடாவைத் தெழிக்கும் ஒலி
இடி-ஒலியை மாற்ற, அணி தோல்
தாள் துணைச் செஞ்சூட்ட அனம் உலவு பண்ணை சூழ்
தணிகை நாயகன் வருகவே!
தடா மலப் பிணி எனை அடாது சிற்சுகம் அருள்
சடானனக் குரு வருகவே!
57(வேறு)✓
கன்னல் குதலைச் செங்கனி வாய்க்
கலச முலைப் பொற் கடைசியர்தம்
கருங்கண் மலரைப் பூந்தடத்தில்
கமலத்து அருகு முறுக்கு அவிழும்
நன்னர்க் குவளை என அறுகால்
நாடி, பெடையினொடு சுழலும்—
நகைத் தண் தரளம் பொழி நிலவால்
நறும் பூங் குமுதம் வாய் விரியும்—
பின்னல் குழலை மேகம் எனப்
பெருகுங் கனிமா மயில் அகவும்—
பிறழும் வளைக்கை கஞ்சம் எனப்
பிரியாது அனங்கள் உவந்து ஏறும்—
வன்னப் பணை சூழ் செருத்தணிகை
வாழ்வே! வருக, வருகவே!
மலையான் உதவும் உமையாள் கண்-
மணியே! வருக, வருகவே!
58✓
தென்றல் கொழுந்து தவழ் பொழிலில்
செறி பூங் கழை சேர் வழை நிழலில்
தினையின் கதிர் தின்று, அருவி இழி
தீம் தேன் உண்டு, வாய் குதட்டும்
குன்றக் குகைவாய் மோட்டு எருமை
குடம் நேர் செருத்தல் உகு தீம் பால்
குட்டம் பலவும் நிரப்பியிட,
குதிக்கும் கயல்கள் உண்டு, மயல்
துன்றி, கமலமிசை உறங்கும்
தூநீர் மருதம் பற்பல சூழ்
சோலை உயர் விண் கற்பகப் பூஞ்
சோலை எனப் பொன்மலர் கஞலும்
மன்றல் குவளை அலர் தணிகை
வாழ்வே! வருக, வருகவே!
மலையான் உதவும் உமையாள் கண்-
மணியே! வருக, வருகவே!
59✓
பிறப்பும் இறப்பும் எவ்வுயிர்க்கும்
பிறழாது அமரும் திறம் போலப்
பெருகும் புனல் பாய் வயல்கள்தொறும்
பின்னல் கதிரின் செந்நெல் முதிர்ந்து
அறுப்பும் படுப்பும் உழுது பரம்பு
அடித்து விதைத்து நடு நடவும்
அகலாது உழவர் செறி பணை சூழ்ந்து,
அழகு ஆர் கன்னல்-காடு உழக்கி,
ஒறுக்கும் மத வாரணம் பிடியோடு
உலவித் திரியும் சாரல் வளர்ந்து
ஓங்கும் மூங்கில் தலையின் மயில்
உலவும் கழைக்கூத்தரின் அகவி,
மறப்பு இல் இறும்புது உறும் தணிகை
வாழ்வே! வருக, வருகவே!
மலையான் உதவும் உமையாள் கண்-
மணியே! வருக, வருகவே!
60(வேறு)✓
தகுவர் முடிகள் உருள, எயிறு
தரள நிரையின் உதிர, வாய்
தடிகள் உதிரம் ஒழுக, வயிறு
சரிய, மலையை அனைய தோள்
தொகுகை, நெடிய மிடறு, கழல்கள்,
துடைகள், இடைகள் துணியவே,
சுழலும் விழிகள் சிதற, அலகை
சுலவு கழுகு நரிகள் நாய்
புகுத, அயிலை எறியும் இறைவ!
புகர் இல் தணிகை வரையில் வாழ்
புனித முருக! அரியின் மருக!
புலவர் மலர்கள் பொழிய நீள்
மகுட நிரைகள் அசைய, விசைய
மயிலும் அசைய வருகவே!
மறுகும் எமது பிறவி அகல
வருக வருக வருகவே!
61✓
சரண மலர்கள் அசைய, விருது
தழுவு கழலும் அசையவே,
சகல உலகும் விலை இல் அறுவை
தழையும் இடையும் அசையவே,
அருண கிரண கடகம் அசைய,
அயிலும் அசைய, அழிவு இலா
அழகு புயமும் அசைய, இருவர்
அணையும் மருமம் அசையவே,
முரணும் மகர குழைகள் அசைய,
முறுவல் அணியும் அசைய, நீர்
முழுகு தணிகை வரையில் அலரும்
முருகு குவளை அணி கொள் தார்
மருவும் முடிகள் அசைய, விசைய
மயிலும் அசைய வருகவே!
மறுகும் எமது பிறவி அகல
வருக வருக வருகவே!