திருத்தணிகைப் பிள்ளைத்தமிழ்
கந்தப்ப ஐயர்
முத்தப்பருவம்6 / 11
திருத்தணிகைப் பிள்ளைத்தமிழ் · கந்தப்ப ஐயர்
முத்தப்பருவம்
42✓
தூங்கும் துளைக்கைப் பிறைமருப்புச்
சொரி மும்மதம் தாழ் கவுள் உரல்-கால்
சுழலும் சிறுகண் புகர்முகத்துத்
தும்பி நிகரும், சம்பு முதிர்
வீங்கும் கனிகள் விழுந்து அழிந்து
விரி சார் அருவி ஒழுகு இமய
வெற்பின் தவத்தால் அவதரித்து
விளங்கும் தெய்வப்பிடி மணந்து,
தீங்கு இல் ஐந்து முகத் தேவர்
சிங்கம் எனவும் பெயர் படைத்து,
செழிக்கும் திருவாலங்காட்டில்
தேவர் வணங்க நடம் புரியும்
மூங்கில் அளித்த முத்தம் அருள்
முத்தே! முத்தம் தருகவே!
மூலாத் திரியில் எழு ஞான
முளையே! முத்தம் தருகவே!
43✓
வழங்கும் அயமா மகம் புரிந்த
மன்னன் புதல்வர் எனும் சகரர்
வானத்து இறைவன் புரிந்த நெடு
வஞ்சம் அறியா, மாநிலத்தைக்
கிழங்கின் அகழ் மண் எலாம் அருந்திக்
கீழ் போய், தவம் செய்திடு முனிபால்
கிளரும் பரி கண்டு, அவற் சீற,
கிளத்து முனிவன் தவக் கனலால்
சழங்கி மாய்ந்து நிரையம் உறும்
தன்மை வினவி, பகீரதனார்
தவம் ஆறு அயுதம் ஆண்டு இயற்ற,
சதுமா மறையோன் உலகு அகன்று,
முழங்கி வரு வானதி அளித்த
முத்தே! முத்தம் தருகவே!
மூலாத் திரியில் எழு ஞான
முளையே! முத்தம் தருகவே!
44✓
விதி நா அமர் வெள் ஓதிமமும்
விண்டு உரம் சேர் பொன்-அனமும்
மேவும் கொழுங் கண் மலர் பூத்து,
விழையும் மதியோர்க்கு அருட்செந்தேன்
பொதி சேதாம்பல் இதழ் அவிழ்ந்து,
புரை தீர் கங்காநதி குலவி,
பொலியும் பவள வனம் அடர்ந்து,
பொன்றாது அணி மங்கல வளையின்
கதிர் வாய்ந்து, ஐங்கைக் களிற்றினுக்கும்
கவுணியனுக்கும் திருமுலைப்பால்
கறந்து கொடுத்த நேமியம்புள்
அருளி, உயிர்கள் பல அளித்தும்
முதிரா நீலக்கடல் அளித்த
முத்தே! முத்தம் தருகவே!
மூலாத்திரியில் எழு ஞான
முளையே! முத்தம் தருகவே!
45✓
விளரித் தீஞ் சொல் அரமகளிர்
விழைந்து குடையும் மயிர்ச் சாந்தும்
விண்-நின்று இழி கார்த்திகை மடவார்
விம்மிச் சுரக்கும் முலைப்பாலும்,
கிளர் மைக் கருங்கண் உமை கறந்த
கிண்ணத்து ஒழுகும் முலைப்பாலும்,
கேடு இல் கூலத் தரு மலரில்
கிண்டும் அளியால் சொரி தேனும்,
தளர்வு இல் சங்கு, மீன், போதா,
தாரா, நாரை, குருகு உண்டு,
தழைப்பத் தவம் செய் சரவணத்தின்
தண்ணீர்மிசை ஆயிரம் இதழ்த் தேன்
முளிரப் பூஞ் சேக்கையில் குலவு
முத்தே! முத்தம் தருகவே!
மூலாத் திரியில் எழு ஞான
முளையே! முத்தம் தருகவே!
46✓
மெய் வாய் மூக்குக் கண் செவியின்
வழி போய், விடயங்களை அருந்தி,
விரவும் வினையால் சுழல் பிறவி-
வேலை கடக்கும் கருத்துடையார்
ஐவாய் வேட்கை அவா ஒழிந்திட்டு
ஆறு ஆதாரப் படி ஏறி,
ஆறோடு ஆறு அங்குலம் மீதில்
அறியும் நிமலப் பெருவெளியில்
கை வாய் மழுவும் கறை மிடறும்
கண் ஆர் நுதலும் பிறை முடியும்
கவினத் தோன்றும் சிவனிடத்தில்
கலந்த உமையாள் உடன்பிறந்த
மொய் வான் அறுமீன் உவந்து அளித்த
முத்தே! முத்தம் தருகவே!
மூலாத் திரியில் எழு ஞான
முளையே! முத்தம் தருகவே!
47(வேறு)✓
கயிலை வெற்பும், பனி கொள் இமய வெற்பும், புதிய
கனக வெற்பும், குறைகள் தீர்
கடவுள் வெற்பும், சமரபுரியின் வெற்பும், பலவு
கனியும் வெற்பும், புனிதமா
மயிலை வெற்பும், தழலின் அருணை வெற்பும், பொதிய
மலைய வெற்பும், கலை நிலா
மதிய வெற்பும், கதிரின் உதய வெற்பும், சுருதி
மறையின் வெற்பும், கொடி உறா
நியம் வெற்பும், கடிகை உரக வெற்பும், களிறு
நியதி அர்ச்சனை புரிய வாழ்
நெடிய வெற்பும், திகிரி வடிவு வெற்பும், வதுவை
நிகழும் வெற்பும், விடையதாம்
சயில வெற்பும், பழைய குடியிருக்கும் குமர!
தருக, முத்தம் தருகவே!
தணிகை வெற்பின்கண் அமர் அறுமுகப் பொன் குழவி!
தருக, முத்தம் தருகவே!
48✓
இருடியர்க்கும் பழைய உரகருக்கும் துயர் இல்
இமையவர்க்கும் கிரணம் ஆர்
எரி கதிர்க்கும் குளிரும் மதியினுக்கும் புவியில்
எவர்களுக்கும் வழியதாய்,
வரவிடுத்து, அங்கு அவர்கள் அறிவு அழித்து, அஞ்சி உயிர்
மடி இருட் கங்குல் எனவே
மதி மயக்கும் குருகு பெயர் படைத்து, அண்டம் உறு
மலையினுள் சென்று துயர் கூர்
உருவுடைத் தம்பியரும் உயர் இலக்கம் பெயரும்
ஒளி பெருக்கும் கணவரோடு
உயிர் படைத்து, அங்கண் எழ மலையொடு அத் தும்பிமுக
னொடு கணத்து அஞ்சி விழவே
தருமலர்ச் செங்கை உறு மயில் விடுக்கும் குமர!
தருக, முத்தம் தருகவே!
தணிகை வெற்பின்கண் அமர் அறுமுகப் பொன்குழவி!
தருக, முத்தம் தருகவே!
49✓
மழையின் முத்தும், தவள மதியின் முத்தும், கமல
மலரின் முத்தும், கரியின் நீள்
வளர் மருப்பின்கண் ஒளி கிளரும் முத்தும், கதலி
வரு கனிக்கண் பொழி நிலா
விதையும் முத்தும், குருகு தலையின் முத்தும், கமுகின்
மிடையும் முத்தும், தெரிவைமார்
மிடறின் முத்தும், கிருடி எயிறு முத்தும், கிளையின்
விளையும் முத்தும், பணையின் ஆர்
கழையின் முத்தும், பணிலம் உதவும் முத்தும், செநெலின்
கதிரின் முத்தும், புனல் உலாம்
கயலின் முத்தும், சலவர் முழுகு நத்தின் வயிறு
கஞலும் முத்தும், புகழதாய்த்
தழையும் முத்தும் புனையும் மணி உரத்தின் குமர!
தருக, முத்தம் தருகவே!
தணிகை வெற்பின்கண் அமர் அறுமுகப் பொன்குழவி!
தருக, முத்தம் தருகவே!
50(வேறு)✓
தருவும் சுரபியும் மணியும் கடை விழி
தத்தும் அருட்பார்வை
தனை நம்புற, இரு புறமும் செறிதர,
மொய்த்த கடற்சேனை
மருவும் சபைதனில் எவரும் பணி செய
உற்ற கொலுக்கூடம்
மணியின் கணம் ஒளிர் அணையின் புடை அரசு
உற்ற சசிக்கோவின்
திருவெண்கரி தரும் ஒரு பைங்கொடி படர்
வெற்றி மணித்தோளில்
திகழ் சந்தனம் அகில் புழுகும் புனைதரு
சித்ர மயிற்பாகா!
முருகு உண்டு அளியினம் உலவும் தணிகையில்
முத்தம் அளித்தருளே!
முதிரும் சுவையமுது ஒழுகும் துவர்இதழ்
முத்தம் அளித்தருளே!
51✓
உனது இன்புறு கவிபுகல் என்று அனுதினம்
உற்று அறிவித்திடவும்,
உயர் செந்தமிழ் சிறிது அறைகின்றிலன் என
ஒட்டு கவிப்புலவன்
அனம் இன்று என மதுரையில் அந்தணன் அடர்
வற்கடம் உற்றிடலும்
அழுது அன்பொடு தொழ, அரிசுந்தரன் அருள்
பொற்கவியைச் சொலவே,
இனிது அன்று இது பொருள் என வந்து, இறைதரு
குட்டம் அடுத்திடு நோய்
இடரும் குகை உறு சிறையும் தவிர்தரு
நற்கவி சொற்றிடலும்,
முனிவு இன்று எதிர் வரும் முருகன் தணிகையில்
முத்தம் அளித்தருளே!
முதிரும் சுவையமுது ஒழுகும் துவர் இதழ்
முத்தம் அளித்தருளே!