முருகன் App
திருத்தணிகைப் பிள்ளைத்தமிழ்
கந்தப்ப ஐயர்
காப்புப்பருவம்2 / 11
திருத்தணிகைப் பிள்ளைத்தமிழ் · கந்தப்ப ஐயர்

காப்புப்பருவம்

2திருமால் துதி✓
நீர் தந்த உததி முதிர் நிலவுலகு புகழ்கின்ற
நீலமலர் எந்நாளினும்
நீள் சுனையில் முப்போதும் மலர்கின்ற கல்லார
நெடு வரையில் வீற்றிருந்து,
சீர் தந்த பிரணவப் பொருளை இறைவன் திருச்
செஞ்செவியில் அறிவுறுத்த
தேசிகனை, வாசவன் அளித்த பொற்கொடி மருவு
செவ்வேளை, இனிது காக்க—
கார் தந்த மேகம் தடித்து இடைவிடாது உற,
கதிரவனும் ஓர்பால் உற,
கலை நிறையும் வெண் மதியம் ஓர்பால் உற, குலவு
காட்சி நிகர் மணி வண்ணமும்
ஏர் கொண்ட பொன் மார்பு இலங்க, ஒரு கைத் திகிரி
ஏந்தி, ஒரு கையில் வெண் சங்கு
ஏந்தி, உலகு ஈரேழும் அனுதினம் அளித்து, உவணம்
ஏறியருள் செங்கண் மாலே!
3சிவபெருமான் துதி✓
திங்கள் அம் குழவி விடு வெண் கதிரும் அரவின் மணி
தேக்கு செங்கதிரும் அளவி,
செம்பொனில் செய்த புரி வெண்பொனில் செய்த புரி
சேர்த்துத் திரித்த கயிறாய்,
கங்கை தங்கும் செஞ்சடாடவிக் கற்றையைக்
கட்டிவைத்தென மொய்த்திடும்
கண்ணுதல் செந்திலதம் ஒப்ப மிளிர் ஐம்முகக்
கடவுள் இணை அடி பரவுவாம்—
மங்கலம் பூண அயிராணிதன் கண்டத்து
மாயை மருகியர் கழுத்தின்
மன்னும் உயிர் அகரம் முதல் மருவு மங்கலம் ஆக
வளர் கடைக்கண் சிவந்து
செங்கை இலைவேல் தொட்டு மலையலை அரக்கர் நிலை
சிந்தி அயிராவதத்தில்
தேவர்-உலகைப் பவனிவந்து, தென் தணிகை அமர்
சேயைப் புரக்க என்றே.
4உமாதேவியார் துதி✓
ஆண் உருவினால் அழிவு இல் அந்தகாசுரனுக்கு
அஞ்சி அழியும் சுரர் எல்லாம்
அபயம் என ஓலம் இட, அஞ்சல் என்று, அவர்களொடும்
அன்று பின்பக்கம் மருவ,
பூண் அரவம் ஆம் இறைவர் கண்சாடை காட்டலும்
பொற்சிலைக் கைப்பிடித்து,
பொருது அழித்து அந்தகனை, இமையவர்தமைக் காத்த
பூரணியை அஞ்சலிப்பாம்—
தாணு நுதலின் கண் தழல்-பொறியதாய், கங்கை
தங்கி, இமயச் சாரல் வாழ்
சரவணப் பொய்கைதனில் ஆறு மக உருவமாய்,
சாரும் அறுமீன் முலைப்பால்
மாணும் மலர் வாயினில் நுகர்ந்து, மது வார்ந்து ஒழுகு
வனச மா மலரணையின்மேல்
வண்டு தாலாட்ட, விழி துயில்கூர் திருத்தணிகை
மயில் இறைவனைக் காக்கவே.
5கணபதி துதி✓
கோது அற்ற மேரு என்ஏட்டிலே
கோழ் உற்ற வால் வளைக் கோட்டினால்,
ஆதிப் பொற் பாரதம் தீட்டிய
ஆபத்சகாயனைப் போற்றுவாம்—
தாதைப் பொற் கால் தளை பூட்டியே
தாழ் நித்தற்கு ஓர் மொழி காட்டி, நால்
வேதத்தின் ஆர் தணிகைக்குளே
மேவுற்ற வேலனைக் காக்கவே.
6பிரமன் துதி✓
காய்த்த குலைக்கதிர் வாய்த்த தினைப்புனம்
காத்த குறப்பெண்பாற் செலா
காட்டில் மிகப் பசி வாட்டுது எனக்கு அருள்
காட்டிடு எனத் தனி நோக்கியே
தேய்த்த இடைக் கொடி மாத்திரளைப் பிழி
தேக்கிலையில் கடிது ஊட்ட, வாய்
தேக்கி, வினைத்திடர் நீக்கு செருத்தணி
சேர்க்கும் ஒருத்தனைக் காக்கவே—
மாத் தவளத்து உரு ஏய்த்த வனத்து எழில்
மாற்று பனத்தியை நாக்கிலே
மாட்டி, இருக்கு எனும் பாட்டை உரைத்து, உயிர்
வாய்த்த சகத்தை உண்டாக்கினோன்,
தோய்த்த தயிர்க்குடம் போய்த் திருடித் தினி
சூட்டு அரவப் பணப் பாய்க்கணே
தூக்கம் மிகுத்தவன் மோட்டு உதரப்புழை
தோற்று மலர்ப் பரமேட்டியே!
7கங்கையின் துதி✓
தூயோர் சகரர்க்கு அளற்று நோய்
தோயாது உயர்நல் துறக்கமேல்
சோராது அமர, தரைக்கண் வீ
சூடு ஆர் சுடலைப் பொடிக்குள் நீர்
பாயா நனையப் பொருத்தினோன்
பாடு ஆர் தவம் மிக்கு இயற்ற, வான்
பாலாய் அரன் பொற்சடைக்குள் வீழ்
பாகீரதியைப் பழிச்சுவாம்—
தீ ஆர் விழியில் பொறிக்குள் ஓர்
சேயாய் உதித்து, குளத்திலே
தேன் ஆர் கமலப் பொகுட்டின்மேல்
சேரா மகிழ்வுற்று உயிர்க்கு எலாம்
மாயா இடரைக் கொடுத்த சூர்
மாவாய் மலையத் துணித்து, நீள்
வான் ஆர் தணிகைப் பொருப்பிலே
வாழ் வேலவனைப் புரக்கவே
8வீரபத்திரர் துதி✓
நேரில் தக்கன் சிரத்தினை வீட்டினான்,
நேய எச்சனை அப்படி மாட்டினான்,
நீழல் அக்கினியைக் கரம் வாட்டினான்,
நீள் குயில் சிறை அற்றிட ஓட்டினான்,
மேருவிற்கு இறையைப் புறம்பு ஆக்கியே,
வேள்வியில் தகரைத் தினுவோர்க்கு எலாம்
வீறு அழித்து, இடர் பற்பல ஆக்கிய
வீரபத்திரன் மெய்ப்பதம் போற்றுவாம்—
கார் உடுத்த குவட்டு உறு தேக்கினை,
காமர் பச்சிலையை, திருவாத்தியை,
காழ் அகில் சினையை, சுளை வேர்ப்பலாக்
காயினைத் திரையில் பெயர்த்து ஈர்த்து எழீஇ,
சாரலில் கழைமுத்தினை, பூக்களை,
தா இல் வச்சிரத்தை, கரிக்கோட்டினைச்
சாடியிட்டு அருவித்திரள் ஆர்ப்பொடு
தாழ் செருத்தணி வெற்பனைக் காக்கவே.
9வயிரவக்கடவுள் துதி✓
விராவு மதமொடு புராரிதனை இகழ்
விரோத மொழிபல வாக்கினில் சாற்றிட
வினாவு பிரணவம் முனான சதுமறை
விகாதம் அறுபொருள் தேற்றிடக் கேட்டிடன்
கராவின் அறிவு அழி பிதாவின் உயர்தலை
கடாவு விரல் உகிரால் பறித்து, ஆர்ப்பொடு
கண்ஆயிரவன் முதல் விணாடர் பலிகொளும்
கபால வயிரவர் தாள்-துணை போற்றுதும்—
ஓர் ஆறு சிரமுடன் இராறு புயமுடன்
உகாத சிறையில் ஏற்றினுக்கு ஏற்றிடும்
உலாசன், நொடிவரை செலாமுன், உலகினை
உலாவி வலம்வரு சீர்த்தியைப் போர்த்தவன்,
மராவின் மலரொடு குராவின் மலர் நறை
மறாத தொடைபுனை மூர்த்தி, நல் கார்த்திகை
வழாமல் அருள் குகன், கலாரகிரி உறை
வலாரி மருகனை வாய்ப்புறக் காக்கவே.
10இந்திரன் துதி✓
கரிய மதன் அம்பு பட்டு, விரகமதின் நொந்து இளைத்து
கனி இதழ் மடந்தையர்க்கு மோகம் ஆம்
கவலை உறு துன்பு ஒழித்து, வினை இரு சமம் கிடைத்து,
கருதரிய இன்ப முத்தி நாடியே
கமல மலர் உந்தி உற்ற கனலையும் அறிந்து எழுப்பி,
கடிகொள் இடை பிங்கலைக்குள் ஓடிமீள்
புரை வளி இரண்டு அடக்கி, சுழுமுனையில் நெஞ்சு இருத்தி,
புருவ நடு விந்துவுக்குள் ஓமமே
புரியும் மதி-மண்டலத்தின் மருவு பரை இன்பம்உற்ற
பொருளினை அறிந்து இயற்றும் யோகினோர்
புணர் மலம் ஒழிந்து வெற்பின் குகையிடை வதிந்துநித்தம்
புகழ் தணிகை மன் குகற்கு ஓர் காவல் ஆம்
தருமலர் புனைந்து, கற்பின் சசிதனை மணந்து, சொர்க்கம்
தனி அரசு இயைந்து மைக்கண் ஏறியே,
சலமழை பொழிந்திட, பைந்தழை பயிர் விளைந்து எவர்க்கும்
தகை உண உவந்து அளிக்கும் நீர்மையான்,
தவள மத குஞ்சரத்தின் முதுகிடை இவர்ந்து அரக்கர்
தலை அற எறிந்து, சித்தர் பாடவே,
இருடியர் கணங்கள் சுற்ற, சுரர் தலை கரங் குவிப்ப,
இளமுலை அரம்பை மெச்சி ஆடவே,
இருநிதி வளம் கொழிப்ப, மருவலர் புறங்கொடுப்ப,
இகல் அற நடந்து வெற்றி கூடவே,
எழுபுவியின் மன்பதைக்கும் இடர்புரிதரும் பொருப்பின்
இரு சிறை அரிந்த வச்சிர பாணியே.
11பலதேவர்கள் துதி✓
வம்பு அவிழும் பரங்குன்றமும் நந்தினை,
வார் அலைவாய் உறுசீர் அலைவாயினும்,
வாவி தண்டலை மனும் ஆவினன் குடியினும்,
வார் அகம் உற்றிடும் ஏரக வெற்பினும்,
பம்பிய குன்றுதொறு ஆடலினும், திருப்
பழமுதிர் சோலையினும் விளையாடிய
பாவலனை, செழுஞ் சேவலனை, சிவன்
பாலகனை, தணிகாசலனைத் தினம்—
வெம்பிய சூரியர், சந்திரர், மாதவர்,
விண்ணவர், பண் அமர் விஞ்சையர், கின்னரர்
வீறும் உருத்திரர், கூறும் மருத்துவர்,
மேதகும் ஓர் எழு மாதர்கள் ஆதியர்,
தம்பியரா உறும் ஒன்பது வீரர்கள்,
தக்க இலக்கம் எனும் கணநாதர்கள்,
தள்ளரும் வெள்ளம் இராயிரம் பூதர்கள்,
தா இலராய்ப் புறம் காவலர் ஆவரே.