திருத்தணிகைப் பிள்ளைத்தமிழ்
கந்தப்ப ஐயர்
சப்பாணிப்பருவம்5 / 11
திருத்தணிகைப் பிள்ளைத்தமிழ் · கந்தப்ப ஐயர்
சப்பாணிப்பருவம்
32✓
இரைத்துத் திரைத்து நுரை பொங்கு கடல் ஓர் ஏழும்
இணை அறு கிடங்கது ஆக,
இடைப்படு வரைப்பு எலாம் திருஉலாப் போந்துவரும்
ஏழ் பெருந் தெருவது ஆக,
நிரைத்துத் தழைத்த பொழில் ஏழும் உய்யானமா,
நேமிவரை நெடிய மதிலா,
நீர்ப் புறக்கடல் ஆடு தெப்பக் குளத்தின் இயல்
நேராக, மேருவரை சூழ்
வரைப்பு அனைத்தும் புறக்கோவிலா, தணிகைமலை
மருவும் அந்தப்புரமதாய்,
மன் உயிர் எலாம் புரந்து ஆண்டு அரசு புரிகின்ற
வள்ளி தெய்வானை கணவா!
தரைக்குள் உயர் கும்பமுனி முடி வைத்த செங்கை கொடு
சப்பாணி கொட்டியருளே!
சரவணப் பொய்கைதனில் அவதரித்திடு முருக!
சப்பாணி கொட்டியருளே!
33✓
மலை அலையை அங்கையில் அடக்கி, இகல் வாதாவி
மலையலை வயிற்று அடக்கி
வண்தமிழ் எனும் புதிய தென்கலையுடன் பழைய
வடகலையை நா அடக்கி,
நிலவலயம் உத்தரம் தாழ்ந்து தென் திக்கின்மேல்
நிமிர்தலைத் தாள் அடக்கி,
நீல் நிற விடத்தினை மிடற்று அடக்கும் கயிலை
நிமலனை உளத்து அடக்கி,
குலவிய கருப்பம் நிறை மாதர் என மந்த நடை
கொண்டு வளர் தென்றல் எனும் ஓர்
குழவியைத் தன்வயின் அடக்கு மலயத்தில் அமர்
குறுமுனிக்கு அருள் குரவனாய்,
தலைமை பெறு வீட்டுநெறி காட்டு தணிகைக்கு இறைவ!
சப்பாணி கொட்டியருளே!
சரவணப் பொய்கைதனில் அவதரித்திடு முருக!
சப்பாணி கொட்டியருளே!
34✓
பொன்மலையை வெள்ளி வெற்பு ஆக்கி, உயர் வெள்ளிப்
பொருப்பை நீலக் கிரியதாய்ப்
புதுக்கி, இந்திரநீல வெற்பை மாணிக்கப்
பொருப்பு ஆக்கி, மாணிக்க மா
மின் மலையினைப் பவளம் ஆக்கி, மரகத வெற்பை
வெள்வயிர வெற்பது ஆக்கி,
விண் உலகை மண் ஆக்கி, மண் உலகை விண் ஆக்கி,
விரிகதிரை மதியம் ஆக்கி,
நன் மதியினைக் கதிரது ஆக்கி, விண்ணவர்கள்தமை
நானிலத்தவர்கள் ஆக்கி,
நானிலத்தவர்கள் தமை உரகர் ஆக்கி, புதுமை
நாட்டு விளையாட்டு அயர்தரும்
தன்ம விடை ஏறும் அரன் அருள் தணிகை வளர் குழவி!
சப்பாணி கொட்டியருளே!
சரவணப் பொய்கைதனில் அவதரித்திடு முருக!
சப்பாணி கொட்டியருளே!
35✓
பருந்தினொடு நிழல் செலும் பான்மை என விஞ்சையர்கள்
பயிலும் இயல் இசைகள் பாட,
பாங்கர் உறு வேங்கையின் பனிமலர்ச் சினை மேவு
பைந்தோகை கேட்டு உறங்கும்-
முருந்தினொடு முத்தம் உறழ் மூரல் கொடிச்சியர்கள்
முருகு வாய் வைத்து அருந்தி,
முருகன் எதிர் சாரல் வெறியாட்டு அயர்தல் நோக்கியே
முதைப் புனம் இதைப் புனம் சூழ்
குருந்தினொடு கொன்றைமிசை அமர் பசுங் கிளிகள் மகிழ்
கூர்ந்து பூவைக்கு இசைக்கும்-
குளிர் தணிகை வெற்பினில் இருந்து, மானிட வடிவு
கொண்டு, புனம் எய்தி, வள்ளி
தரும் தினையின் இடி இரந்து ஏற்ற நீள் அங்கைகொடு
சப்பாணி கொட்டியருளே!
சரவணப் பொய்கைதனில் அவதரித்திடு முருக!
சப்பாணி கொட்டியருளே!
36✓
கிம்புரிப் பூண் அமர் மருப்பு எனும் உலக்கை கொடு
கேழ் நிறச் சந்த உரலில்
கேடு இல் சாதிக்காய் லவங்கமொடு கர்ப்பூரம்
கீறு தக்கோலம் ஏலம்
வம்பு உறு கொடிச்சியர், இடித்த வாசப் பொடிகள்
வாங்கி எழில் விஞ்சை மகளிர்,
வளர் கதிர்க் கற்றை கால் பீதாம்பரத்தை விலை
மாற்றிடும் வள்ளிமலையில்
கொம்பு முற்று அலர் வேங்கை மரமாய், விருத்தனாய்,
குன்றவர் தமக்கு ஒளித்து,
குறமான்தனக்கு மயல் பூட்டி, எழில் காட்டி, அணை
குமரனே! நிமல அழல் ஆம்
தம்பம் உற்றவன் உதவு தணிகாசலக் கடவுள்!
சப்பாணி கொட்டியருளே!
சரவணப் பொய்கைதனில் அவதரித்திடு முருக!
சப்பாணி கொட்டியருளே!
37(வேறு)✓
உரகம் முழக்கிய ஒலியை அடக்கிடும்
உழைகள் உரப்பொலி; அவ்
உழையின் உரப்பொலிதனையும் அடக்கிடும்
உழுவை முழக்கு; கொடு-
வரியின் இரைப்பொலி நலிய அடக்கிடும்
வழுவை சிலப்பொலி; அவ்
வழுவை சிலப்பொலி மறைய அடக்கிடும்
வயவரிக் கர்ச்சனைகள்;
சரபம் அதிர்ப்பொலி அரியின் மிடுக்கொலி
தனையும் அடக்கியிடும்
தரு வனம் மொய்த்திடு சரி அருவித் திகழ்
தணிகை மலைக்கு இறை ஆம்
குருபர! சித்திர மயில் வரு தற்பர!
கொட்டுக சப்பாணி!
குறுமுனிவற்கு அரு மறை புகல் உத்தம!
கொட்டுக சப்பாணி!
38✓
தவரை வளைத்திடு சவரர் வடிக் கணை
தைத்திடும் எய்த் தேகம்
தனை உதற, கணை நிகர் கரு முள் பட
எய்த்திடும் மைக் கேழல்
அவிர் பிறையின் பிறழ் வளை எயிறு இற்றிட,
முற்கலையைப் பாயும்;
அதுவும் மருப்பு உக, எதிர் புலி கொட்புற
முட்டி எடுத்து ஏகி,
இவர் சருவில் படும்-அருவி, தினைப்புனம்
உற்று ஓடி, காவின்
இழி நறவத்தொடு செழிய மலர்த் தடம்
வற்றாமல் பாயும்-
குவளை தழைத்திடு தணிகை மலைக்கு இறை!
கொட்டுக சப்பாணி!
குறுமுனிவற்கு அரு மறை புகல் உத்தம!
கொட்டுக, சப்பாணி!
39✓
சுந்தரம் மொய்த்திடல் கண்டு, வயப்புலி,
குஞ்சரம் என வியவா,
கடுகி அடித்திட, மழைகள் தடித்து இடி
கான்றிட, உளம் நாணி
வந்து எதிர் உற்றிடு கைம்மலை தன்னையும்
மைம்முகில் என இகழா,
மது நுகர் மக்களின் அறிவு அழிய, சரி
மலை-முழையுள் புகுதும்-
சந்திரன் வந்திட, முந்து குறத்தியர்
தண் நிழல் ஆடி என,
சந்தன குங்கும ஒண்திலதம் புனை
தனி எழிலைப் பார்க்கும்-
கொந்து அலர் பைங்குவளைத் தணிகைக்கு இறை!
கொட்டுக, சப்பாணி!
குறுமுனிவற்கு அருமறை புகல் உத்தம!
கொட்டுக சப்பாணி!
40(வேறு)✓
நிரை உலகு எங்கணும் உலவி இறப்பொடும், இப்போது
நிகழ்வு வரும் செயல் அறிதரு நல்-தவன் நட்போடும்
புரியும் மகம்தனில் எழுதரு செச்சை மதத்தாலே
பொருது, கொடுஞ்சினம் முடுகி, அனைத்தும் அழித்து ஏகல்
கருதி, மறிந்தீடு சூரர் அபயத்தொடும் முன் போத,
கருணை புரிந்து, அச வலியை அடக்கி, அடித்து ஏறும்
தரு நிகர் செங்கையில் ஒருமுறை கொட்டுக சப்பாணி!
தணிகை நெடுங்கிரி வரும் இறை! கொட்டுக, சப்பாணி!
41✓
வேழமுகத்தவ னோடு இகலி, கனியைப் பேணி
மேதினி சுற்றுறும் மாதிரம் எட்டும் நொடிப் போதில்
சூழ மயிற்பரி ஏறி, மணிக் கடலில் போகி,
சூரனை அட்டு, உயர் வானவர் பொற்பதியில் கூடி
வாழ அளித்து, ஒரு வாசவன் பெற்ற மடப்பாவை -
வாய் வதுவைத் தொழில் யாவும் முடித்திடு மெய்த்தேவ!
தாழும் மரக்கொடி நாயக! கொட்டுக, சப்பாணி
தா இல் செருத்தணி வேலவ! கொட்டுக, சப்பாணி!