முருகன் App
திருவருணை முருகன் பிள்ளைத்தமிழ்
சி. அருணைவடிவேல் முதலியார்
சப்பாணிப்பருவம்5 / 11
திருவருணை முருகன் பிள்ளைத்தமிழ் · சி. அருணைவடிவேல் முதலியார்

சப்பாணிப்பருவம்

32✓
முட்டைக் குறும்வடிவு மொழிபெயரு முழுதுடைய
முதுலக மீன்றவன்னை
மொய்யொளிக் கிண்கிணிகள் சிற்றரை வடத்தினொடு
முரலோசை யோர்த்துநிற்பக்
கட்டைமுட் டாண்முளரி யோனைவின வும்பொருள்
கருத்தொடும் வினவியெழில்வாய்க்
கனியுறு தேறலென மொழிமழலை யோசைமுக்
கட்டாதை யோர்த்துநிற்ப
நிட்டைக்கு வைத்தமன வடியர்விரை செலுமயிலி
னிகழோசை யோர்த்துநிற்ப
நீடினைப் புனமதனி லோடியொர் குறத்தியந்
நிறைகிள்ளை யோப்புமோதை
தட்டைப் புடைப்பொலியொ டுற்றோர்த்து நின்றவன்
சப்பாணி கொட்டியருளே
தருணவெழி லுறுமுருவொ டருணைவரு மறுமுகன்
சப்பாணி கொட்டியருளே.
33✓
காமரை முனிந்ததன் னுருவினொடு பெயர்புனை
கருத்தரை யுருத்திரித்துக்
கைம்மலர் சுமக்கெனத் தந்தவத் தாதையுட்
கவலாது நோக்கினும் பின்
னாமரைக் கூற்றவனொ டணியிருந் தேகென
வமர்க்குவிடு தாய்நோக்கினு
மவுணன் கழுத்திலிடு மாழிபெற வவைமகிழு
மம்மாம னேர்நோக்கினு
மூமரை நிகர்த்தொருசொ லுரையாது குட்டுண்ட
வுவனுவகை யொடுநோக்கினு
முற்றமைத் துச்சென்னி வைத்தகைக் கடியவ
ருளம்பதைத் திடுதலறிவேந்
தாமரை மலர்ச்சிறுகை நோவாது மென்மெலச்
சப்பாணி கொட்டியருளே
தருணவெழி லுறுமுருவொ டருணைவரு மறுமுகன்
சப்பாணி கொட்டியருளே.
34✓
அங்கைத் தலங்குவித் துச்சிவைத் தேத்தும
வகத்திய முனிக்கினிக்கு
மத்தமிழொ டெத்தலத் தார்க்குமரி தாமறை
யளித்தருள்செய் திட்டவதுவுஞ்
செங்கைத் தலஞ்சிவக் கக்குட்டி வேதனைச்
சிறையிட்ட நீயவன்றான்
றெரிகிலா துற்றபொரு டெரிதிகொ லெனுஞ்சிவன்
செவிதரத் தேற்றுமதுவு
மெங்கட் களித்தவித னொடுநோக்க வோரிறை
யிறும்புது பயவாவென
வின்பமுறு மன்பினைந் திணையென்னு நுந்தைநூற்
கிசையுமெய் யுரைமெய்யினாற்
சங்கத் தமிழ்ப்புலவர் தங்கட் கிசைத்தவன்
சப்பாணி கொட்டியருளே
தருணவெழி லுறுமுருவொ டருணைவரு மறுமுகன்
சப்பாணி கொட்டியருளே.
35✓
தோளம் மலைக்குலந் திசைதொறுஞ் சுலவச்
சுடர்ப்பரிதி மதிமண்டிலஞ்
சுடுகனலி யடுகனலி யொடுமுன்வரு மனையமுத்
தொகுவிழியி னூடொளிப்பக்
காளந் தரித்தவக் கண்டமென வண்டங்
கறுக்குமிரு ளுற்றுமுற்றுங்
ககனச் சுரக்குழா முனிவரர் குழாஞ்சிவ
கணத்தொடும் பரவவண்ட
கோளந் தனக்கெழில் குலாவவெளி நின்றே
குனிக்குந் தனிக்குருந்தை
கூத்தினுக் காத்துமா வாய்த்தநின் னன்னையுங்
கோகனத னும்முறைதருந்
தாளத் திருத்தநின் நாளம்புயக் கையிற்
சப்பாணி கொட்டியருளே
தருணவெழி லுறுமுருவொ டருணைவரு மறுமுகன்
சப்பாணி கொட்டியருளே.
36✓
குலாமிட்ட தெய்வங்க ளாய்ச்சில குளத்தினுங்
கோட்டத்து முற்றிருக்குங்
கோடானு கோடியாந் தேவரை யெலாங்கொடுங்
கோலினி லலைத்தலைத்துக்
கலாமிட்ட வவுணக் கடும்பகை தொலைத்தவக்
கைக்கினிமை பெறவாயிரங்
கண்ணுடைய விண்ணரசு நண்ணியுத வொண்ணுதற்
கடவுட் பிடிக்கணுற்றுந்
துலாமிட்ட வன்புடைமை தோற்றாது வேற்றுருத்
தோற்றியெதிர் தோற்றுசெவ்விச்
சொல்லாடி யல்லாடு வில்லாடு குழனுதல்கள்
சுட்டியொர் குறக்கொடிக்குச்
சலாமிட்ட சேயொளி தழைக்குந் திருக்கையொரு
சப்பாணி கொட்டியருளே
தருணவெழி லுறுமுருவொ டருணைவரு மறுமுகன்
சப்பாணி கொட்டியருளே.
37வேறு✓
அள்ளற் பழனக் கழுநீர்த் தாமரை
யாய்மலர் மேய்மேதி
யவைமுனி வுற்றுக் கவையடி யிட்டங்
கணைகழை மென்றுவிடாப்
பள்ளத் தடமலர் விள்ளப் புகவெடி
பட்ட தகட்டுவரால்
பருமடி முட்டக் கருவடிவத்துப்
பரிவுறு கன்றென்ன
வுள்ளிச் சொரிபால் வெள்ளத் தனைய
வுருக்கார் மேதியுற
லொலிகெழு பாற்கடன் மலிமகிழ்வாற்பட
லுற்றுத் துயில்மாயன்
கொள்ள னிகர்க்கு முனைத்திரு நாடா
கொட்டுக சப்பாணி
குரவிரை கமழ்திரு வருணையி லறுமுக
கொட்டுக சப்பாணி.
38✓
வெய்ய சுடர்க்குந் தண்ணிழ றந்துபின்
மென்கால் கொளவீசு
மிடைதுகி லின்கொடி படுமா ளிகைகளின்
மேனிலை வானுலவு
மைய நகிற்கொடி கட்கிடை யார்வமொ
டாடு நறுஞ்சுண்ண
மடையப் பொத்தலி னளிமூ சிடவா
னரமங் கையர் தங்கா
மொய்யத் திருமலர் தம்மல ரலவென
முற்றும் விடுத்தெதிரா
முன்னொளிர் மாடப் பொன்னொளி ரோவிய
முட்டறு பன்மலர்தாங்
கொய்ய நினைக்கு முனைத்திரு நாடா
கொட்டுக சப்பாணி
குரவிரை கமழ்திரு வருணையி லறுமுக
கொட்டுக சப்பாணி.
39வேறு✓
வட்டணை பெற்றொளிர் சக்கர மற்ற
வருத்த வளைப்பாணி
வக்கிர நற்கிர கக்கதி செப்பு
வகைக்கர கப்பாணி
கட்ட ளப்பில வுற்ற மனத்தழு
கைக்குலி சப்பாணி
கட்புல முற்ற வழிப்படர் பெய்த்த
களைத்த கடற்பாணி
துட்ட ருயிர்த்தொகை பற்ற வடற்கை
துடித்த கதைப்பாணி
துற்ற மகிழ்ச்சியின் மிக்க புயத்தவர்
சொற்பெறு மெய்ப்பாணி
கொட்டமு னெட்டயி றொட்ட கரத்தவ
கொட்டுக சப்பாணி
குற்ற மறுத்தவ வெற்பரு ணைக்குக
கொட்டுக சப்பாணி.
40✓
முக்கணர் நெற்றி விழிக்கன லிற்றரு
மொய்த்த வொளிச்சேயே
முத்தமி ழிற்பயில் கிற்பவர் சொற்ற
முடிக்கு மளித்தாயே
மிக்க வுயிர்ப்பயிர் கட்கு வளத்தை
விளைத்த வருட்காரே
மெய்க்கலை கற்றவர் நித்த லெடுத்து
விரித்த பொருட்சீரே
மைக்க ணெழிற்பிடி தொக்க குறத்தி
வரித்த திருப்பேறே
மற்றொரு பற்றிலர் சித்த மினித்தெழு
மட்டில் பெருக்காறே
குக்குட மெய்க்கொடி வைத்த கரத்தவ
கொட்டுக சப்பாணி
குற்ற மறுத்தவ வெற்பரு ணைக்குக
கொட்டுக சப்பாணி.
41வேறு✓
முற்றும்வெளி லுற்றகளி லுற்றிவரு மெய்க்கண்விழி
மொய்த்தகுலி சப்பாணியோன்
முற்சுரர்த மக்குமசு ரத்தின்மக ளிர்க்குமுவர்
முற்பட நினைப்பாகுமா
றுற்றிடுவ லத்துவிழி கொட்டவசு ரர்க்குமவ
ருட்குமவ ருக்குமிருமா
லுய்க்குமவ ருக்குமிட முற்றவிழி கொட்டவிதி
யொத்துவழி தெற்கேகிவான்
பெற்றவல னுற்றபணை கொட்டவவு ணத்தகுவர்
பெட்குநக ரெப்பாலுமே
பெற்றியினெய் தற்பறைகள் கொட்டவுயி ருற்றவர்கள்
பிற்றையடி யிட்டோடவே
கொற்றவயில் வெற்றியொடு தொட்டகர முற்றுநனி
கொட்டியருள் சப்பாணியே
கொட்பமர ருற்றுலவு வெற்பருணை நித்தக்குக
கொட்டியருள் சப்பாணியே.