திருவருணை முருகன் பிள்ளைத்தமிழ்
சி. அருணைவடிவேல் முதலியார்
முத்தப்பருவம்6 / 11
திருவருணை முருகன் பிள்ளைத்தமிழ் · சி. அருணைவடிவேல் முதலியார்
முத்தப்பருவம்
42✓
அவ்விய மகன்றநெஞ் சத்தன்ப ரகமெனு
மகன்றடந் தன்னின்மலர
வடியிணைநன் மலரருள்வை யமரா பதித்தலைவ
ரடுபகை யகன்றுவாழ
வெவ்விய குணத்தவுணர் கவ்வைக் குழாமடும்
வீறுவே லருள்வையென்றும்
வேலுமயி லுந்துணை யெனப்பரவு சொற்குறு
வியன்செவிகள் பலவுமருள்வை
நவ்வியங் கட்குஞ் சரிக்குங் குறத்திக்கு
நகை முகம்வண் மார்வத்தொட்டே
நன்னெஞ்சு மருள்வைநின் னாமமொரு காற்சொல்லி
னயனமருள் வாயெமக்கே
செவ்வியின் விள்ளுமொரு சேதாம்ப லனையநின்
செவ்வாயின் முத்தமருளே
திருவா றறத்தருணை முருகா வெமக்குனது
திருவாயின் முத்தமருளே.
43✓
பொலிவுபெறு நாற்கோட்டு மதமலையின் மேல்வரு
புரந்தரனை யாதியாய
புலவர்போ னின்னையா மவுணக் குழாத்தினொடு
போரேற்க வேண்டகில்லே
மொலிகடலி னஞ்சுண்டு பலிமகிழ்செய் தாதைபோ
லுண்ணுமொரு கனிகாட்டியே
யுலவாப் பரப்புடைய வண்டமுழு தோர்நொடியி
லோடிவர வேவகில்லே
மலிவளக் கூடல்வாய் நக்கீரன் முதலாய
வண்டமிழ்ப் புலவர்போல
மாறுபடு முரைபல வகுத்தவற் றின்றர
மதித்திட விருத்தக்கில்லேஞ்
செலின்மகி முகத்தே மிரப்பதொன் றேயுனது
செவ்வாயின் முத்தமருளே
திருவா றறத்தருணை முருகா வெமக்குனது
திருவாயின் முத்தமருளே.
44✓
காரார் குழற்கணிய தாமலர் முடித்துக்
களித்திட விரும்பி யுள்ளாங்
கருதரிய மறைமுடியு மறிவரிய வாகுநின்
கான்மல ரலாதுமுடியே
மேராறு நறுமலரி னெழுநறா வேட்பின
விருந்தமி ழகத்தியற்கு
மிறைவற்கு மருமொழி யிசைக்குநின் வாய்மொழியி
னின்றே னலாதுபருகே
மூராறு நறுமண முவத்துமே லுனதுதிரு
வுச்சியல் லாதுமோவே
மொள்ளொளிய முத்தம் விரும்புவே மாயினின்
னுயர்பவள வாயின்மிளிருஞ்
சீராறு முத்தமல் லாதெதனை விழைகுவேஞ்
செவ்வாயின் முத்தமருளே
திருவா றறத்தருணை முருகா வெமக்குனது
திருவாயின் முத்தமருளே.
45✓
முந்தமிழ்த மன்னநீர்ச் சரவணத் தொருமகவின்
முளரியிடை வந்துற்றநாள்
முற்றவ மவர்க்கெய்த வறுகுழவி யாயறுவர்
முலையுண் டமர்ந்தகனிவாய்
கந்தமல ரயனையோ மெனுமொழிப் பொருளது
கடாவியு னதுக்கு நவிர்வாய்
கறைமிடற் றண்ணனி யப்பொரு ளுரைக்கெனக்
கட்டுரைத் திட்டமலர்வா
யந்தரத் திந்திரன தாம்பல்வா யன்றியு
மகன்புவிக் குறவர்கொடிதன்
மலரின்வாய்த் தேன்சுவைத் துண்பவள வாயெம்
மகத்தியற் கோத்துரைக்குஞ்
செந்தமிழ்த் திருவா யெனப்பரிந் தனமுனது
செவ்வாயின் முத்தமருளே
திருவா றறத்தருணை முருகா வெமக்குனது
திருவாயின் முத்தமருளே.
46✓
கண்முத்தம் விழவிழக் கரைமுத்த மெற்றுபொய்
கைக்கரையி னின்றுநோக்கிக்
கலுழுமொரு பிள்ளைக்கு நின்றந்தை தேவிதன்
கனதனப் பாலளித்துப்
பண்முத்த மிழைநலம் பகரவைத் தெங்கணும்
படர்பொழுது கொள்ளமுத்தாற்
பந்தருஞ் சிவிகையுஞ் சின்னமுங் குடையும்
பரிந்துநன் றேயளித்தான்
பெண்முத்த மாய்க்கடலி னொண்முத்த வாணரிற்
பேணுநின் றாயுமொருடன்
பிள்ளைத் தமிழக்கவிதை கேட்டுமுத் தாரம்
பிறங்குபுல வற்களித்தா
திண்முத்த ரோடியா மெண்முத்தமா நினது
செவ்வாயின் முத்தமருளே
திருவா றறத்தருணை முருகா வெமக்குனது
திருவாயின் முத்தமருளே.
47வேறு✓
தாவா முத்தம் பிறக்குமிடந்
தம்மை யெண்ணித் தொகுத்தவவர்
தம்பே தையையே தலைக்கீடாத்
தகுமென் வாயென் தீங்கரும்போ
வோவா முழக்கிற் கருங்கடலோ
வுடும்போ கயலோவுன்கொக்கோ
வும்பன் மருப்போ தாமரையோ
வுரையீ ரென்ன வுரையாதி
யாவா வனைய விடத்துதிக்கு
மம்முத் தங்க ணின்றிருவா
யவிர்முத் தத்திற் கோரணுவு
மமையா வென்ப தறிவேம்யா
மூவாச் செல்வ முத்தர் தொழு
முதல்வா முத்தந் தருகவே
முத்தித் தலமாந் திருவருணை
முருகா முத்தந் தருகவே.
48✓
தம்மை மதிக்குந் தலைமதியாற்
றரணி தனையு மதிக்குமவர்
சால மதித்து மணியினியல்
சாற்று நூலிற் றகவாய்ந்து
வெம்மை தவிர்த்துக் குளிர்மைதரு
மேன்மை முத்தத் தியல்பென்ன
விரித்து நிறுத்த வப்பொருளின்
மெய்ம்மை நோக்கின் வியன்ஞாலத்
திம்மை யுடலுக் கலதுயிருக்
கேலா தென்றல் வெளியதனா
லிடர்வெம் பிறவி யகன்றருளி
னினிதாந் தண்மை யுறவிழைவே
மும்மை மலந்தீர் முத்தர்தொழு
முதல்வா முத்தந் தருகவே
முத்தித் தலமாந் திருவருணை
முருகா முத்தந் தருகவே.
49✓
அதிருங் கடன்முத் தொருமுனிவ
னங்கைத் தலத்தி னடங்குமுத்த
மலர்தா மரைமுத் தரிவையர்த
மடிதோய்ந் திடத்தேயந் திடுமுத்தம்
வெதிருங் கரும்புந் தருமுத்தம்
வெடிபோ முத்தம் வியன்சாலி
விளையு முத்தங் களையினொடு
விரவு முத்த மிகுகொண்மூ
வுதிரு முத்த நிலைநில்லா
தோடு முத்தம் பிறபிறவு
மோரோர் குறையை யுடையவென
வுகவே மெமக்கிங் கவைபணியேல்
முதிரு முணர்வின் முத்தர்தொழு
முதல்வா முத்தந் தருகவே
முத்தித் தலமாந் திருவருணை
முருகா முத்தந் தருகவே.
50வேறு✓
சுற்று மடுத்த கடற்புவி விட்டொர்
சுவர்க்க தலத்துறுவோர்
துய்க்கு நலத்தினு மிக்க வளித்தொர்
துளக்கினின் மெய்ப்பதிவாய்த்
துற்ற முகிற்சூலம் விட்புல நற்பதி
தொட்டெழு வெற்புறுவேய்
தொக்க முழக்கரு விக்குல மிற்ற
துளைக்கை மருப்பிவையே
யுற்றவர் பெற்றிட முத்தமளிக்கு
முவப்பி னிவப்பனவே
லுட்கனி வுற்றளி முத்த மெனப்பி
னுனக்குரை மற்றெவனோ
முற்று நலத்தரு ணைக்கரு ணைக்குக
முத்த மளித்தருளே
முச்சுட ருக்கொரு மெய்ச்சுட ரொத்தவ
முத்த மளித்தருளே.
51✓
அத்த ரிடத்தனை நித்தன் முகத்தொ
டணைத்தெழு நித்திலமே
யப்ப மவற்பொரி மொக்குநர் கைக்கொ
ளரத்த விரத்தினமே
மைத்தழை மெய்க்கண னுற்று விழித்துணை
வைத்த கவுத்துவமே
வைக்குலி சப்படை யத்தன் மனத்துறு
மற்றை மணித்தனமே
மொய்த்த சுரக்குழு விற்கு முடித்தலை
முக்கிய விற்பரலே
முட்டி றவத்தவ ருட்டெளி வுற்றணி
முட்டின் மணிக்கலனே
முத்த ருயிர்க்குயி ரொத்த சுடர்ப்புலன்
முத்த மளித்தருளே
முற்று நலத்தரு ணைக்கரு ணைக்குக
முத்த மளித்தருளே.