திருவருணை முருகன் பிள்ளைத்தமிழ்
சி. அருணைவடிவேல் முதலியார்
சிறுபறைப்பருவம்10 / 11
திருவருணை முருகன் பிள்ளைத்தமிழ் · சி. அருணைவடிவேல் முதலியார்
சிறுபறைப்பருவம்
82✓
சற்றொலி திருத்தாதை தமருக மெழுப்பவரு
தாவிலாப் பயனுலகெனுந்
தன்மையா னன்மைசா லறிவரெல் லாந்தந்
தவாமன நினைந்திருந்து
முற்றொலி யினிற்பொலியு முதுமறை முழக்கினொடு
மும்மைநற் றமிழ் முழக்கு
முரிதிரை முழக்கிமறி விரிதரு கருங்கடன்
முகந்துபொழி வான்முழக்குஞ்
சுற்றொலிப் புனல்கண்டு வயன்மண்டு செயல்கொண்டு
தொகுமுழவ ரேர்முழக்குந்
துகளில்பல வைப்பின்முப் பணைமுழக் குஞ்சுரர்க
டுந்துபி முழக்குநீயோர்
சிற்றொலி யெழுப்பவிளை பேரொலி யெனக்கொளச்
சிறுபறை முழக்கியருளே
தெருண்ணி யளித்துமிளி ரருணகிரி மெய்க்குமர
சிறுபறை முழக்கியருளே.
83✓
இருளவுணன் வாணனீ ராயிரக் கைகளி
னியக்குகுட முழமுழக்கு
மேனமாய் நேடியறி யாதமான் மானமொ
டிசைக்குமத் தளமுழக்கும்
பொருளறி விலாதுமறை புகலயன் றாளம்
பொருந்தவொற் றிடுமுழக்கும்
பொற்பினுறு சிற்பர னடத்தியல்பு முற்றப்
பொருந்தாமை புகலுமதுவென்
மருளுயி ரகன்றுநனி யருளுறும் படியருண்
மாதா விழைந்துகாண
மகிழ்கொளுந் தாதைமிகு புகழ்கொள்வகை பலவும்வர
மன்றினிடை நின்றுபுரியுந்
திருநடன மதுதனக் கிதுமுழுது மிசைவெனச்
சிறுபறை முழக்கியருளே
தெருண்ணி யளித்துமிளி ரருணகிரி யிற்குமர
சிறுபறை முழக்கியருளே.
84✓
ஒள்ளொளி மணிச்சுடிகை யோராயிரப்படத்
துற்றபே ரரவுறுமென
வுளந்துணுக் குற்றுமா மேருமலை சுற்றுபே
ருடலணை முடக்குறாமே
யள்ளொளி முகிழ்ஞா மதுகிடந் ததுவென்ன
வதன்மிசை கிடக்குமாம
னஞ்செவி மடுத்துமிக விஞ்சொலியி தேதென்ன
வறிதுயில் விடுக்குறாமே
விள்ளொளிய மலரவன் கற்பவொலி யென்றுதன்
விதிநிலை யொடுக்குறாமே
விண்டலவர் மண்டலவ ரெண்டலவர் யாவரும்
வெரீஇயுள நடுக்குறாமே
தெள்ளொளி மலர்க்கரம் வருந்தாமன் மென்மெலச்
சிறுபறை முழக்கியருளே
தெருண்ணி யளித்துமிளி ரருணகிரி யிற்குமர
சிறுபறை முழக்கி யருளே.
85✓
மெய்க்களங் கற்றமதி முகமகளிர் மகிழ்மாட
மேனிலைச் சிகரிவைத்த
விழுநீல மணியொளியி னழிவில்கற் பகநீழல்
வெண்கரி கருங்கரியதா
மிக்கவள மாளிகைச் சுதையொளியின் ஞாலத்து
வெங்களிறு வெண்களிறதா
மேவிடக் கண்டென்கொன் மேதினியும் வானமு
வியன்றட்டு மாறினவெனக்
கைக்கவள மாவரு புரந்தரனு மித்தலக்
காவலரு முண்மருண்டு
கண்விழித் துறநோக்கி யுண்முகதற் கெண்மிகக்
காட்டுநெடு வீதிபலவுந்
திக்களக் குந்திரு முனைப்பாடி நாடனே
சிறுபறை முழக்கியருளே
தெருண்ணி யளித்துமிளி ரருணகிரி யிற்குமர
சிறுபறை முழக்கியருளே.
86✓
மாமா னிருக்குமவ் வாவிமல ரணையன்ன
மகிழ்திரு மணத்தினுக்கு
வண்கயி ரவத்தீயி னொண்கனிக ணெய்வேட்ப
மலிபுன்கு பொரிசொரிதரத்
தூமாண் சுரைக்கண்மயி னடமிடக் கார்முழவு
தோற்றவரி வண்டியாழ் செயத்
துன்றுஞ் செருந்தியுங் கொன்றையும் பொன்றரச்
சுற்றமென முற்றும்வளாய்ப்
பூமாந்த ரவையெனப் பொலிவலி முகங்கண்முட்
புறவருக் கைக்கனியுகிர்ப்
போழ்ந்துதீஞ் சுளையிறால் வார்ந்தொழுகு தேனளாய்ப்
புகழ்விருந் துண்டுமகிழுந்
தேமாம் பொழிற்றிரு முனைப்பாடி நாடனே
சிறுபறை முழக்கியருளே
தெருண்ணி யளித்துமிளி ரருணகிரி யிற்குமர
சிறுபறை முழக்கியருளே.
87வேறு✓
மதுமல ருற்றவன் மறைகண் முழக்கு
வயக்குரல் பொருவுமெனா
வலிதி னொருக்குப லிசைகள் பயிற்றி
மனத்திடர் மிகவவனர்
விதுவெனு மெய்க்கலை மகள்கை யெடுத்த
விறற்கரு வியினிசையே
விழைதக வொப்பது சரத மெனத்தன்
விரற்செயல் புரிவுறமேற்
பொதுவர் மனைப்புகு புயற னெழிற்கை
பொருத்திய வளையொலியேர்
பொருவுமெனத்தன திதழ்கொள மிக்க
புனற்றலை யொடுமிளிரோர்
முதுகரு ணைக்கட றமருக மொப்ப
முழக்குக சிறுபறையே
முருகன லற்புத னருண மலைக்கண்
முழக்குக சிறுபறையே.
88வேறு✓
வந்துறு கின்றவ ரஞ்சலி ரென்று
வகுத்தழை திருமுரசா
வம்பு செறிந்தவர் வெம்புதி ரென்று
மறுத்தொழி யருமுரசாச்
சிந்தை மருண்டயர் கின்றவர் துஞ்ச
றெளித்திடு பருமுரசாத்
திண்டிறல் கொண்டற மொன்றலர் நன்று
திருத்திடு பெருமுரசா
வந்தமிழ் கொண்டவ ரின்புற நண்பி
னளித்தளி தருமுரசா
வஞ்ச லகன்றெதிர் கின்றவ ரெஞ்ச
வழித்திடு செருமுரசா
முந்துறு பந்தனை சிந்திடு கந்தன்
முழக்குக சிறுபறையே
முன்றழ லென்றுரு வொன்றிய குன்றன்
முழக்குக சிறுபறையே.
89வேறு✓
தோகைகொண் மாமயின் மேகநன் மாரி
துளித்திடு மொலியெனவே
சோர்வரு வானவர் சூரடு வாகை
துதித்திடு மொலியெனவே
யோகியர் நாடொறு மோர்தச நாடி
யுதித்தெழு மொலியெனவே
யோவலின் மாவிருள் போகுநர் சேவ
லூரத்தெழு மொலியெனவே
பாகம தாயின ரேர்பர நாத
பதத்தெழு மொலியெனவே
பாயிர மாமறை யோதுந ரோதல்
பயிற்றிடு மொலியெனவே
மோக மிலாதுறு மாதவர் பாலன்
முழக்குக சிறுபறையே
மூதரு ணாசல மீதுறு வேலன்
முழக்குக சிறுபறையே.
90வேறு✓
ஒழிவில் கருத்தொடு தொழுநர்
களித்திடு பெருநிதியே
உயநினை கிற்பவர் மயலற
முற்பெற வருமதியே
இழிவில் பதத்துற வெழுமவ
ருக்குத வுறுமொளியே
யிணையி லருட்கட றுளையு
மவர்க்குளம் வருகளியே
கழிவில் செருக்கொடு மிகவக
லுற்றவர் திணியிருளே
கருது கலைப்பொரு கடலை
மதிப்பவர் துணிபொருளே
யழகு தமிழ்க்கொரு புலவன்
முழக்குக சிறுபறையே
யருண மலைத்திரு முருகன்
முழக்குக சிறுபறையே.
91✓
தமர மிகுத்திடு கடலெழு
லற்றவொர் சுவையமுதே
தகுமலர் மொய்த்துறு மதுகரம்
வைப்பறு தகைமதுவே
திமிர மகற்றிட வெழுன்மறை
வற்றுள னொளிர்கதிரே
திகழ்கலை மிக்குறல் குறைத
லகற்றிய குளிர்மதியே
பமர மொலித்துற மலர்மலர்
பற்றிலொர் நறுமணமே
பலவகை பெற்றிய றிரிதர
லற்றுய ரொருகுணமே
யமரர் படைக்கொரு தலைவன்
முழக்குக சிறுபறையே
யருண மலைத்திரு முருகன்
முழக்குக சிறுபறையே.