முருகன் App
திருவருணை முருகன் பிள்ளைத்தமிழ்
சி. அருணைவடிவேல் முதலியார்
சிற்றிற்பருவம்9 / 11
திருவருணை முருகன் பிள்ளைத்தமிழ் · சி. அருணைவடிவேல் முதலியார்

சிற்றிற்பருவம்

72✓
மருவார் கொன்றை மலர்ச்சடையோன்
மகிழு முண்ணா முலைத்தாயென்
மணியே வருக வெனவழைத்து
மகிழ்ந்து புகழ்ந்து நீராட்டி
யுருவார் நீற்றி னொடுதிலக
மொளிரத் தீட்டி யுவமனிலா
தொளிர்பொன் வள்ளத் துறுசுவையி
னுண்பா லடிசி லுவந்தூட்டி
யிருவார் குழையி னொடுமிணையி
லினிய பணிகள் பலபூட்டி
யெழிலார் முன்றில் விடுத்ததெமக்
கிடுக்க ணிழைத்து நடுக்கவிடவோ
திருவா ருருவிற் றிகழ்குமரா
சிறியேஞ் சிற்றில் சிதையேலே
சேணார் சோணா சலச்சேயே
சிறியேஞ் சிற்றில் சிதையேலே.
73✓
கொழிக்கும் வயிரச் சுவரெடுத்துக்
குலவும் பவள விளக்கேற்றிக்
கொள்ளு நீல மணியடுப்புக்
கூட்டித் தீச்செம் மணிகொளுவிக்
கழிக்கு முன்சங் கக்குழிசிக்
கமழுந் தேனி னுலைவார்த்துக்
கதிர்முத் தரிசிச் சோறட்டுக்
களிக்கு மெங்க டிருமனைசு
எழிக்கு மதற்கோ நீபோந்த
தையா மெய்யா வெமக்கெய்தற்
கரிய விருந்தா வகமகிழ்ந்தே
மயிர்வேம் விருந்து மடியவர்பாற்
செழிக்குங் கருணைத் திருக்குமரா
சிறியேஞ் சிற்றில் சிதையேலே
சேணார் சோணா சலச்சேயே
சிறியேஞ் சிற்றில் சிதையேலே.
74✓
தந்தா ரிருவர் கருமணியாய்த்
தவமிக் கவர்தங் குருமணியாய்த்
தழைக்கு மமரர் தலைமணியாய்ச்
சாற்றும் புலவர் கலைமணியாய்
முந்தார் வமுறுங் குலமணியா
முழுதா மின்ப நலமணிநீ
முன்னுஞ் சிலர்க்குப் பெண்மணியா
மொழியு மெமக்கு விண்மணியாய்
வந்தா யென்றே நனிமகிழ்ந்தேம்
வண்டன் மனைக ளவைசிதைத்து
மறுக்கம் புரிவா யெனினுரைக்கு
மாற்ற முளதோ மனநினைவார்
சிந்தா மணியே சிவமணியே
சிறியேஞ் சிற்றில் சிதையேலே
சேணார் சோணா சலச்சேயே
சிறியேஞ் சிற்றில் சிதையேலே.
75✓
அல்லும் பகலு நினைபவர்த
மகத்தின் ஞான விளக்கேற்று
மண்ணா னீயெம் பவளவிளக்
கவித்த லழகோ வார்வமொடு
புல்லுந் தமிழாற் போற்றுநர்க்குப்
பொன்னி னுலக மளித்திடுநீ
புகுந்திங் கெமது வண்டன்மனை
பொருக்கென் றழித்தல் பொருந்துவதோ
வெல்லும் புலனின் மேலவர்க்கு
விளியா வின்ப மிகத்தருநீ
விரும்பெஞ் சிறுசோ றெங்கும்விழ
வீச றகுமோ விழைந்தறிவர்
செல்லுங் கதியாந் திருவடியாற்
சிறியேஞ் சிற்றில் சிதையேலே
சேணார் சோணா சலச்சேயே
சிறியேஞ் சிற்றில் சிதையேலே.
76✓
ஐயார் மேனிச் சுரர்பிடியு
மழகார் வேடர் குலக்கொடியு
மாகே மெனினு மகரமின்னார்
ரல்லே மென்ப தறிந்துமியாங்
கையா லிழைத்த வண்டன்மனை
காலா லழித்துப் போகின்றாய்
கண்ணீ ராறா வுறினுமியாங்
கண்ணீ ராறா வதுகாணாய்
மையார் தடங்கண் மலைநீலி
மற்றுன் றாய்முன் வந்துரைப்பின்
வருவ தறியே மாயினுமவ்
வழக்கு நினையேஞ் சழக்கெவர்க்குஞ்
செய்யா வருமைத் திருக்குமரா
சிறியேஞ் சிற்றில் சிதையேலே
சேணார் சோணா சலச்சேயே
சிறியேஞ் சிற்றில் சிதையேலே.
77✓
முந்தி யெழுந்து மழவிடைபோன்
முடுகி நடந்து முனிவினொடம்
முன்றின் மணைக ளழிப்பாயேன்
முதிய மறையின் முடிபொருளும்
புந்தி மகிழ்ந்து புலவர்சொன்மெய்ப்
புகழும் படியுஞ் சீறடிகள்
பொய்ம்மை படியும் பொருள்படியும்
புழுதி படியும் போற்றாயோ
தந்தி மருப்புந் தடமருப்புஞ்
சந்தோ டகிலுந் தகத்தள்ளித்
தருவின் மலரும் பொருவிலொளி
தயங்கு மணியு மிருமருங்குஞ்
சிந்தி யெழுபெண் ணையினடா
சிறியேஞ் சிற்றில் சிதையேலே
சேணார் சோணா சலச்சேயே
சிறியேஞ் சிற்றில் சிதையேலே.
78✓
ஏரார்ந் தொளிர்கற் கொண்டேயா
மிழைத்த வகமுஞ் செய்குன்று
மெங்கோ னினக்கா மேரகமு
மெழில்கொள் பரஞ்சீர்க் குன்றுமலாற்
கூரார் வேன்மு னெதிர்ந்திகலுங்
கொடிய ரகமுங் குருகுபெயர்க்
குன்று மலவே நன்றுணர்ந்துங்
குலைய வழிக்கு நிலையெவனோ
வாரார் கொங்கை மடமகளிர்
மகிழ்விற் குடைய வவர்மார்பின்
மலியுங் களப மணநாறி
மலரும் புனைந்தொர் வான்மகளாஞ்
சீரார் பெண்ணைத் திருநாடா
சிறியேஞ் சிற்றில் சிதையேலே
சேணார் சோணா சலச்சேயே
சிறியேஞ் சிற்றில் சிதையேலே.
79✓
வானார் நடுங்க வருமவுணர்
வைய மழித்தி மாவழித்தி
மதியா வவர்தங் கொடுமுகத்தின்
வயங்கு மூரல் வகையழித்தி
யானா மகிழ்வி னியாமழைத்தே
யாடும் வண்டன் மனையழியே
லதன்கட் கோல மாவழியே
லாக்கு மூரல் வகையழியேல்
கானார் மலருங் கவின்மலையிற்
கழையின் றலையுங் கரைக்கமுகின்
கழுத்தின் வைத்த சுரும்படையுங்
கரும்பின் பணையுங் கழியவழி
தேனார் முனைநற் றிருநாடா
சிறியேஞ் சிற்றில் சிதையேலே
சேணார் சோணா சலச்சேயே
சிறியேஞ் சிற்றில் சிதையேலே.
80✓
வாக்கு மனமுங் கடந்தசுடர்
வடிவு நீக்கி வளர்புனத்தோர்
மரமா கியுதுங் கரவினற
மலிவே டங்கொண் டதுவுமதன்
கோக்குஞ் சரங்க டடுத்தியென்றோர்
குறவர் மகளைக் கைகுவித்துக்
கும்பிட் டதுவும் புகன்றேமோ
கொள்ளும் வெகுளிக் கென்முதறா
னாக்கும் பாவி லழிவில்புக
ழௌவை பாடற் கமுதனைய
வந்தீம் பாலுஞ் செந்தேனு
மளவின் றோடி யவலெங்குந்
தேக்கும் பெண்ணைத் திருநாடா
சிறியேஞ் சிற்றில் சிதையேலே
சேணார் சோணா சலச்சேயே
சிறியேஞ் சிற்றில் சிதையேலே.
81✓
களிக்கு மெமது சிறுமனைநீ
காணும் விருந்தா யினுமெதிர்வேங்
கரவில் குரவ னாய்வரினுங்
கழல்கள் சென்னி முடிக்கிற்பே
மளிக்குந் தெய்வ மெனிற்றொழுவே
மனைத்தும் விடுத்து மணமகனே
யாகி வரினு மகற்றகிலே
மழிக்கு முனிவிற் கடியிலையால்
பளிக்கு மாடத் தகம்புறமும்
பயில்வோ ரனைய நிலையுணராப்
பரிசு துரிசின் மெய்யுணர்வு
படைத்த வவர்தம் பண்பினிது
தெளிக்குஞ் சேதித் திருநாடா
சிறியேஞ் சிற்றில் சிதையேலே
சேணார் சோணா சலச்சேயே
சிறியேஞ் சிற்றில் சிதையேலே.