முருகன் App
திருவருணை முருகன் பிள்ளைத்தமிழ்
சி. அருணைவடிவேல் முதலியார்
தாலப்பருவம்4 / 11
திருவருணை முருகன் பிள்ளைத்தமிழ் · சி. அருணைவடிவேல் முதலியார்

தாலப்பருவம்

22✓
உண்ணா ரமுதம் யாம்பெறுவா
னுறுவெங் கடுவைக் களத்தடக்கு
மொருவற் கினியாம் புரிவதெவ
னுளதென் றுளத்தி னொருங்குன்னி
விண்ணா ரமரர் தம்முலகின்
விளங்க வெழுமத் திருவுருவின்
மேவித் தொழுவான் புகுந்துமிகு
வியன்வா னதியி னாட்டியெனக்
கண்ணார் முகடு தொடுத்தெங்குங்
கவினப் பரவிக் கடிமலர்முய்க்
களிதே னளவிக் கல்லெனிசை
காட்டிச் சந்தங் கமழருவி
மண்ணா ரண்ணா மலையின்வளர்
மருந்தே தாலோ தாலேலோ!
மந்தா கினியா டந்தவருண்
மைந்தா தாலோ தாலேலோ! 22
23✓
கஞ்சா தனத்தன் படைத்திடுமக்
கடமா வுயங்கிக் கான்மடியிற்
கருதுந் திசைக ளவைபொறுப்பான்
கனிவின் முனிவின் றினிதளித்து
நஞ்சார் கண்டன் புரந்திடுமந்
நலத்தி னெங்கு நனிதிரியு
நால்வாய்க் களிறு பிளிறுவத
னயக்குங் குரலு முருவுமிடை
யெஞ்சா நசைகொள் பிடிதெரியா
தினைய வனைய துணராமே
யிகல்வன் களிறு மிடருழப்ப
விளியிற் குளிறி வெளிறின்றி
மஞ்சா ரண்ணா மலையின்வளர்
மருந்தே தாலோ தாலேலோ!
மந்தா கினியா டந்தவருண்
மைந்தா தாலோ தாலேலோ! 23
24✓
மயங்கு மிருண்மெய்க் கானவர்தம்
வன்கைச் சிறுவர் விளையாட்டின்
மகிழ்வோ டெறிந்த கவணிருந்து
வான்போய்த் துகிலின் முகில் கிழித்தங்
கியங்குங் கதிர்த்தேர் மாமுடுக்கி
யியல்வெண் மதியின் முயறுளைத்தே
யிமையா நாட்டத் தமரர்நக
ரெழிற்கற் பகக்கா ழுக்கியதின்
முயங்கும் பொலன்செய் மலருதிர்த்து
முங்கிற் றலைத்தே னடைகீறி
முழவுப் பலவின் கனிபோழ்ந்து
மொய்த்த விழும்பன் மணியெங்கும்
வயங்கு மண்ணா மலையின் வளர்
மருந்தே தாலோ தாலேலோ!
மந்தா கினியா டந்தவருண்
மைந்தா தாலோ தாலேலோ! 24
25✓
தேன்றோய் கமலந் திறந்தடைக்குஞ்
செங்கைக் கதிரோன் றேர்ப்புரவி
திகழ்மெய் பசுமை போய்வெளுப்பத்
தீய வவுணர் செடிகொண்முடை
யூன்றோய் குலிசப் படையண்ண
லுகைக்குங் களிற்றினுடல் வெண்மை
யொருவிக் கருக வடுபதியென்
றொருபேர் படைப்பவெண்டிங்கண்
மீன்றோய் விசும்பி னவரிமையா
விழிகளிமைப்ப வெண்சுதையும்
விழுநீ லமுஞ்செம் மணியுமொளி
வீச நகரி வியன்சிகரி
வான்றோ யண்ணா மலையின்வளர்
மருந்தே தாலோ தாலேலோ!
மந்தா கினியா டந்தவருண்
மைந்தா தாலோ தாலேலோ! 25
26✓
வினையோங் கிடுமவ் வெம்பிறவி
வேலை நீந்திக் கரையேற
விடுக்கும் புணையா விப்பிறவி
விழுப்பங் கருது மதுவன்றி
நினையோம் பிறிது நல்லறத்தி
னிற்போ மற்போம் படியென்னு
நேயத் தவர்மெய் யடியர்வரி
னிறைபே ரன்பா னெடுஞ்செல்வந்
தனையோம் புறுதற் பயன்றெரிந்து
தாண்மேல் விழுந்து தகைந்தழைத்துத்
தக்க வகையிற் புறந்தருமத்
தருமந் தழையத் தழைத்திடும்பன்
மனையோங் கண்ணா மலையின்வளர்
மருந்தே தாலோ தாலேலோ!
மந்தா கினியா டந்தவருண்
மைந்தா தாலோ தாலேலோ! 26
27வேறு✓
ஆரண முரைமெய்ப் பொருளா முதல்வ
னனைத்து மழித்துடனே
யவைமீ ளத்தரு மவனெனு மதனை
யகந்தெளி வித்ததெனக்
காரண வுறுவிண் ணிலனென நிலனுயர்
ககன மெனத்திரியக்
களிசெய் குறும்பொடு நீவிளை யாடுதல்
கருதார் பொருதிடுமச்
சீரண வுறுவிண் ணவர்தமை மேருச்
சிமயத் திடையட்டுச்
சேர வெழுப்பிநி னொருபே ருருவவர்
தெரிசித் திடவருள்வோய்!
தாரணி புகழுண் ணாமலை முருகா
தாலோ தாலேலோ!
தண்டமி ழூக்கொரு வண்டனி முதல்வா
தாலோ தாலேலோ! 27
28✓
காதல்செ யுளமெனும் வயலெழு முக்கட்
கழைதரு நன்முத்தே!
கலைமக ளலைமகள் பணிமலை மகடரு
காமரு மாமணியே!
கோதறு மைங்கைக் குஞ்சர நெஞ்சு
குளிர்ந்தழை மென்களிறே!
கோகன கவ்விழி மாமடி கண்மகிழ்
கொளுமோர் கவுத்துவமே!
தீதறு தெய்வப் பிடிமலை மலையே!
தேவர் தமக்கமுதே!
செறிகான் கொடிபடர் தருவே! யடியவர்
சேம நிதித்திரளே!
தாதவிழ் பொழிலரு ணைக்கரு ணாநிதி
தாலோ தாலேலோ!
தண்டமி ழக்கொரு வண்டனி முதல்வா
தாலோ தாலேலோ!
29✓
கலைமலி புலவர்த மலைவற வருமொரு
கண்ணே தாலேலோ!
கண்டே! பாகே! கனியே! யினிய
கரும்பே தாலேலோ!
மலைமகண் மடியின் வளர்ந்து கிளர்ந்தெழு
மதியே தாலேலோ!
மணியே! முத்தே! மரகத மே!நன்
மருந்தே தாலேலோ!
புலமலி யடியவர் நலமலி தரவடை
பொழிலே தாலேலோ!
பொன்னே! யொளியே! .பூவே! மணமே!
பொற்பே தாலேலோ!
தலமவை தமிலுய ரருணையி லறுமுக
தாலோ தாலேலோ!
தண்டமி ழக்கொரு வண்டனி முதல்வா
தாலோ தாலேலோ!
30வேறு✓
வான்முக மீனினர் பான்மா றாவா யானோ காண்
மாமுதல் வோனென வேதா டாழா தேயேகு
நான்முக னார் தமை வேதா போதா யோதாயோ
நாடுமெய் தானென வேத மூவா ளாமீள்வோ
னூன்முக மார்தலை சாடா வேடா நீயோ நீ
சூழ்புரி வோனென வேகா வாவோ வாமேபார்
மேன்மையொ டேபுரி வோனே தாலோ தாலேலோ!
வீறரு ணாபுரி வாழ்வே தாலோ தாலேலோ!
31✓
தாதுகு நீபமொய் தாராய் தாலோ தாலேலோ!
தாழ்கிலர் பாலருள் தாராய் தாலோ தாலேலோ!
வேதம தோதுபல் பேராய் தாலோ தாலேலோ!
மேவுநர் பானிலை பேராய் தாலோ தாலேலோ!
ஏதமின் ஞாலமெய் வேராய் தாலோ தாலேலோ!
ஏழைய மேய்பிழை வேராய் தாலோ தாலேலோ!
ஆதிய ணாமலை யூராய் தாலோ தாலேலோ!
ஆய்மயி லேயல தூராய் தாலோ தாலேலோ!