திருவிலவஞ்சி முருகன் பிள்ளைத்தமிழ்
கவிராச பண்டாரத்தையா
காப்புப்பருவம்2 / 11
திருவிலவஞ்சி முருகன் பிள்ளைத்தமிழ் · கவிராச பண்டாரத்தையா
காப்புப்பருவம்
1திருமால் துதி✓
தேமேவு தமிழும் கடம்பும் தடம்புயத்
திரள்மணிக் குவடு பூத்துச்
செக்கர்வான் என்னவரும் ஓர்ஆறு திருமுகத்
திங்கள்அம் சிறுகுழவியைக்
கோமேவு செந்தமிழ் இலஞ்சிவே லவனைத்ரி
கூடா சலத்தெம் பிரான்
கொத்தடியர் குலம்எலாம் தழையவரும் அரசிளங்
குமரனை வியந்து காக்கப்
பூமேவும் உந்தியில் பல்புவன பந்தியைப்
பூத்துமுறை காத்துநின்ற
பொருவரிய நீலப்பொ ருப்பைக் கருப்பைப்
புகாதுபுக் கிந்திரற்குக்
காமேவும் அரசிருப் புதவுசக் ராயுதக்
கடவுளைக் குடவளைக் கைக்
கண்ணனைத் தண்அம் துழாய்மௌலி யானைமங்
கலவாழ்த் திசைத்தும் அன் றே.
2சிவபெருமான் துதி✓
அரவின்முக மண்டலமும் அமுதமயம் ஒன்றநில
வார்சடைக் கொத்தேறு நீள்பிறைக் கீற்றனை
அமுதபலி தந்தபல முனிவரர் மடந்தையரும்
ஆசைமுற் றிச்சோரும் மாதவக் கூத்தனை
அருவிசொரி கங்கைமது ஒழுகிநுரை பொங்குபுனல்
வார்திரைச் சிற்றாறு சூழ்துறைத் தீர்த்தனை
அகிலபகிர் அண்டமும்ஓர் அடியினில் அளந்தமுகில்
காணுதற் கெட்டாத சோதியைச் சீர்ப்பொலி
பரவைமனை சென்றுகவி பரவசம் இயம்பிவரு
தூதினைச் சொற்றருளும் நீதனைப் பூத்தொளிர்
பனிவரை மடந்தையுறு குழல்மொழி மடந்தை ஒரு
பாகனைச் சொற்காதி போகனைப் பாக்கியப்
பலமிகுகு றும்பலவின் நிழல்மிகு விளங்குசிவ
லோகனைக் கர்த்தாவை ஏகனைக் கூர்த்தெழு
பழமறைகி டந்தலற வழிஅடியர் தொண்டன்இடு
பாதனைக் குற்றால நாதனைப் போற்றுதும்;
விரிதிரைமு கந்துநவ மணிவிசிறு செந்நிநகர்
மேவுகப் பற்சேரும் ஆழ்கடற் சேர்ப்பனை
மிருகமத கதம்பதள பரிமள சுகந்தபுய
பாரனைக் கற்பூர பாளிதக் காப்பனை
விகடதட கும்பகட கரடமத குஞ்சர
விநாயகர்க் கற்பமர்வி சாகனைச் சேட்பொலி
வெறிகமழ் குறிஞ்சிமனை வரையுறு மடந்தையால்
விகாரமுற் றுச்சாப வேடரில் தோற்றிய
குரிசிலை மணம்புணர்தல் குறமகள் விரும்பும்அநு
கூலனைக் கட்டாரி வேலனைக் கோற்றொடி
குலவுகர சுந்தரிபொன் மனையில்வளர் குஞ்சரி
மணாளனைச் சப்பாணி கூடுகைக் காப்பொலி
குழறஒரு புண்டரிகன் மணிமகுட பந்திபுடை
கோபனைக் கற்றோர் குழாம்எழுந் தேற்றிய
கொழிதமிழ் இலஞ்சிநகர் தழையவள ருஞ்சிறு
குமாரனைக் கட்டாண்மை வீரனைக் காக்கவே.
3பராசக்தி துதி✓
வலம்புரிகொள் வீதியினும் வளர்கோ புரத்தினும்
வயங்கும்செறி நீள்அருவி மணிகாலும் வைப்பினும்
வழங்கும்ஒரு மூவரையும் மகவாய் வளர்த்திய
வளந்தரணி பீடநிலை சொலவே தொழப்புகல்
குலம்எழு சுராதிபர்ம குடகோடி துற்றிய
கொழுங்கதிர் நிலாமணிகள் வெயிலாய் எரிக்கஓர்
குறும்பலவின் நீழல்உறை குழல்வாய் மொழிக்கொரு
குழந்தைஅடி யேமுழுதும் வழிபா டியற்றுவாம்
கலங்குகடல் நீர்சொரிய அயிரா வதத்தெழு
கடுங்குலிச தாரணனு மடவாள் குயத்திடை
கலந்தினிது வாழஒரு மயில்வா கனத்தெழு
கடம்பமலர் சேர்புயபன் னிருபார வெற்பனை
இலஞ்சிநகர் வாழ்பவனை எனைஆளும் அப்பனை
இலங்கிழை நலார்எழுத முடியாத பொற்பனை
இலங்குசுடர் வேலவனை இமையோர்கள் வைப்பைஎன்
இளங்குமர நாயகனை இயல்பாய் வளர்க்கவே.
4செண்பக விநாயகர் துதி✓
ஆனனம் விளங்கிய பனைத்தடக்கைச் சேர்த்தெழு
பாரதப் பெருங்கதை வடித்தெடுத்துக் காட்டிஓர்
ஆயிர நெடுஞ்சிகர புத்தகத்தில் தீட்டி
அராமுடி அகன்புவி புரக்கும்ஒற்றைக் கோட்டனை
வானவர் பெருந்தகையை வச்சிரக்கைப் பார்த்திபன்
மாமுடி புனைந்தசர ணத்தனைப் பற்றார்க்கொரு
வாலுளை மடங்கலென நிற்கும்வெற்றித் தாக்கனை
மாரிசொரி செண்பகவனக்களிற்றைப் போற்றுதும்
பானல்கம ழுஞ்சரவ ணத்துதித்துக் கார்த்திகை
பால்ஒழுகு கும்பமுலை யைக்குடித் துப்பார்த்தெழு
பார்வையில் இரங்கிஒரு பட்டுடுத் துப்போர்த்த
படாமுலை முகங்களில் எடுத்தணைத் துப்பார்ப்பதி
வானுலவு செங்கண்விடை மத்தர்வைத் துத்தேற்றிடு
வானிகர வந்தசிறு பொற்றளிர்க்கைக் காப்பனை
வாழ்வுறும் இலஞ்சிநகர் வைப்பை எய்ப்பிற்காக்கும்
மனோகர துரந்தர மணிப்பொருப்பைக் காக்கவே.
5திருமகள் துதி✓
வெங்கடாங் கரடக் கடாங்கவிழ்த் தூற்றுமத
வேழங் கடாந் தடக்கை
வெம்பணி பிணித்தசெம் பருதிபொரு வுஞ்செம்பொன்
விம்பகும் பங்க ளாட்டப்
பொங்குபூண் நகுகும்பம் ஏந்துபைங் கூந்தல்அம்
பிடிகள்போற் கவரி காலப்
புடைநின்ற முடிபொறுத் தரிவனப் பூந்தவிசு
போந்தபெண் அரசு காக்க;
கொங்குலாம் செழுமலர் இலஞ்சியிற் சினைவரால்
கொழுமலர் இலஞ்சி யிற்போய்க்
கொண்டல்தண் துளிகொண் டிரங்குதென் இலஞ்சியிற்
குமரனைச் சமர்க டந்த
சிங்கமா முகனைமுதல் இட்டபகை வேர்அறச்
செவ்வேல் வலந்த ரித்துத்
தேவேந் திரற்கர சளித்ததிறல் ஆளியைத்
தேவர்சே னாபதி யையே.
6பிரமதேவன் துதி✓
திணிகொண்ட மூதண்ட மண்டபம் பணிகொண்டு
சீவகோ டிகள்உ யிர்த்துச்
செந்தா மரைப்பொலந் தவிசில்வெண் தாமரைத்
தேவியுடன் மேவி ஏவற்
பணிகொண்ட மகவாடல் கண்டனைய விளையாடல்
பார்த்தகம் மகிழ்ந்துபூத் துப்
பல்ஊழி வாழும்ஒரு தொல்பெருஞ் செல்வம்
படைத்தவன் காக்கமன் னோ;
மணிகொண்ட கட்செவி நிதம்பக் கதம்பமுலை
வள்ளிபடர் கொழுகொம்ப ராய்
வளர்கின்ற பன்னிரு தடம்புயனை என்இருகண்
மணியைமா ணிக்கமலை யைத்
தணிகொண்ட கொண்டல்நுண் துளியும்வெண் தரளநிரையும்வண்
தாரகையும் நிரைகிடப்பத்
தண்டலை தழைத்தசுப் பிரமணிய புரவசதி
தருகுமர குருபரனை யே.
7நாமகள் துதி✓
முத்தமிழ் ஒருத்தனுக்க கருமறைக் கெட்டாத
மூர்த்திக்குற் றேவல் கேட்க
முற்றிவிக் குந்திர முடத்தேன் முகந்துமணி
முடிவேந்தர் முன்றில் எதிர்போந்
தித்திறத் தரியா சனந்தர்அயி ராசபதம்
எய்திஇக மும்பர மும்வாய்ந்
தெம்மனோர் செம்மாந் திருக்கப் பெருங்கல்வி
இறைமைதரும் இறைவிதுணை ஆம்;
சித்தசனன் மைத்துனனை அத்திமுக னுக்கிளைய
சிங்கத்தை வெண்சூர் அறச்
செஞ்சேவ லங்கொடி உயர்த்தபைங் கரம்ஒன்று
தேவர்கோ மகன் முடிக்கு
வைத்துமுழு தாண்டதென் இலஞ்சிநகர் அதிபனை
வரைபக எறிந்தவேற் கை
மறவனைத் தழையுமர கதகலா பமயூர
வாகனனை வாழ்விக்க வே.
8சத்தமாதர்கள் துதி✓
பொன்னில் சிறந்திட்ட புலமையில் தலைமையில்
பொய்யாத மெய்உணர்வி னில்
பொற்புண்ட ரீகபத பூசனையில் வாசனை
பொருந்தப் பயிற்றிமுழு தும்
என்னைப்புரந்துகொண் டன்றே தனக்கடிமை
என்றுவிலை ஓலையிட்ட
எம்பிரான் செந்தமிழ் இலஞ்சிப் பிரான்பொருட்
டெழுவரையும் அஞ்சலிப் பாம்;
அன்னத்தில் வருமயிலும் மயிலில்வரு கிள்ளையும்வெள்
ஆனையில் தோன்றுபிடி யும்
ஆனின்வரு மானும்முது கலையில்வரு மானும்புள்
அரசில்வரு கரியகுயி லும்
முன்னுற்ற சிங்கப் பொருப்பில்வரு கால்மாவும்
முதிர்பரவை காற்றின்அணு கல்
முடுகாமல் மாற்றிநின் றேற்றகுழ விப்பருவம்
முழுதும் புரக்கஎன் றே.
9காளி துதி✓
பாமிழற்றும் பாணர்எனப் பண்மிழற்றும் சுரும்பு
பந்தியிருந் தந்திநறை பருகுதரைப் பாண்டிக்
கோமகற்குச் சென்னியபந் தளித்தகுல மகள்தன்
குலமகட்கு மகள்எங்கள்குருபரனைக் காக்கத்
தேமலர்ச்செண் பகக்காவும் திரிகூடச் சிலம்புஞ்
சினகரமும் நன்னகரும் தென்றல்உலாம் திசையும்
மாமணிச்சங் காவணமும் மன்றும்என்றும் காக்கும்
மங்கையைநம் குற்றால நங்கையைவாழ்த் துதுமே.
10முப்பத்துமுக்கோடி தேவர்கள் துதி✓
கொச்சைப்புனத்தில் குறிஞ்சிக் கொடிச்சியர்
குழாத்தூ டொருத்தி வளரக்
கொற்றமகள் அன்றிட்ட வாகையும் தும்பையும்
பின்னிக் கிடந்து குலவக்
கச்சைப் பொருந்தனத் திந்திர குமாரத்தி
காதல்மண மாலைசூட் டுங்
கற்பகப் பந்தரில் காப்பேந்தி நின்றவன்
காக்கமழ் இலஞ்சிகாப் பார்;
பச்சைப் பசும்புரவி மான்தேர் மிசைத்தோன்று
பண்ணவர்கள் பன்னிருவ ரும்
பரிமுகக் கடவுளோர் இருவரும் பொருவரும்
பசுபதிகள் பதினொரு வரும்
இச்சைப் படுந்திறத் தெண்மரும் எனத்தொகுத்
தெண்ணுமுப் பான்மூவ ரும்
இக்கோடி முப்பத்து முக்கோடி என்றதொகை
அமையவரும் இமைய வருமே.