திருவிலவஞ்சி முருகன் பிள்ளைத்தமிழ்
கவிராச பண்டாரத்தையா
சிறுபறைப்பருவம்10 / 11
திருவிலவஞ்சி முருகன் பிள்ளைத்தமிழ் · கவிராச பண்டாரத்தையா
சிறுபறைப்பருவம்
84✓
நங்கள்கொண் மூவிரு முகங்களி னாலும்வித்
தேந்திநத் தேந்து வேலை
நளினக் குடங்கையில் அடக்கும்உர வோன்சந்த
னாசல வரைப்பின் வித்தி
எங்கள்பன் னிருகுரவ ருந்தனி வளர்ந்திட
எழுத்துமுதல் ஐந்தி யற்பேர்
இயல்முதல் முக்கொடி படர்ந்துதொண் ணூற்றாறு
இசைப்புனுவல் பூத்துவறிஞர்
தங்களுக்குதவாத பதகர்பாற் காய்தந்து
சாரம் குறித்து நல்கும்
தலைவர்அவர் பாற்கனிந் துணர்ந்தவர்க் கருமருந்
தாகிநாற் பொருள்பயக்கும்
செங்கமுக முத்தமிழ் முழங்கும்வள நாடனே
சிறுபறை முழக்கிஅருளே
தென்னிலஞ் சிப்பதிப் பன்னிருகை மேகமே
சிறுபறை முழக்கிஅருளே.
85✓
குலைக்காந்தள் அங்கைக் குறுந்தொடி புறங்கொளக்
கொவ்வைமணி வாய்துடிப்பக்
கூர்வேற் கருங்கண் பொருந்திமை சிவப்புறக்
கொடிநெடும் புருவம்ஏ றத்
தலைக்காதல் வந்தநாள் எத்தனை விருப்பம்அத்
தனைவெறுப் புந்துலங் கித்
தண்நிலா அமுதொழுகு சந்த்ரமண் டலமுகம்
தபனமண் டலம்நிகர்ப்ப
முலைக்காம்பில் முத்தம் கொடுத்தெரியும் மடநலார்
முதியபுல விப்புலவி யால்
மொய்பா சறைக்களத் தாடவர் அகப்பட்ட
எத்திசை முகத்தும்அமை யச்
சிலைக்கா மரங்கள் முழக்குவவ லூரனே
சிறுபறை முழக்கிஅரு ளே
தென்இலஞ் சிப்பதிப் பன்னிருகை மேகமே
சிறுபறை முழக்கிஅரு ளே.
86✓
கந்தர முழக்கமும் கந்தரத் திடைபுக்க
கண்டர்வப் பெருமுழக் கும்
கதிர்இளம் திங்கள்அம் கண்ணியனை முன்னிக்
கடிந்தோர் இயற்றுவேள் வி
மந்தர முழக்கமும் சுனைஆடு கன்னியர்
வளம்கெழு முழக்கங்களும்
மடப்பிடி நடைச்சிறு கொடிச்சியர் குழாம்கூடி
மன்றல்அங் குன்றம்எதிர் கூம்
சுந்தர முழக்கமும் வெறியாட்டு முருகியம்
துவைப்படு முழக்கங்களும்
தும்பிக்கை நீர்தூம் துருத்தியென் றருவித்
தடாகம் துதைந்த குளிரும்
சிந்துர முழக்கமும் தீராத தமிழ்வெற்ப
சிறுபறை முழக்கிஅரு ளே
தென்இலஞ் சிப்பதிப் பன்னிருகை மேகமே
சிறுபறை முழக்கிஅரு ளே.
87✓
சாவதும் திரியப் பிறப்பதும் தொடராது
தண்அளி சுரந்தபெரு மான்
சயிலத் தடஞ்சாரல் புக்குநின்றேக்கறும்
சமயத்தில் வந்துதோன் றி
ஏவதும் கொண்டுட்பு லம்புவதும் நனிதீர்மின்
என்னும் குறிப்புமொழி தந்
தேந்தும் குறுந்தொடி அரற்றவெற் றிப்பறை
எறிதனின் இச்சூர னைக்
காவதம் பலகோடி ஓடினும் ஒறுப்பன்
கருங்கழற கச்சுவீக்கிக்
கைவேலும் ஏந்தினன் காண்மின்கள் என்றுபல
கடவுளர்பொன் மலர்மழையொ டும்
தேவதுந் துபிஒரு புறத்தினின் முழக்கநீ
சிறுபறை முழக்கிஅரு ளே
தென்இலஞ் சிப்பதிப் பன்னிருகை மேகமே
சிறுபறை முழக்கிஅரு ளே.
88✓
வெண்கண் சிவந்துடல் குறுக்கிவயி றெக்கிநெடு
வெடிவால் முறுக்கி நோக்கி
விண்ணாடு நமனாள் வெரூஉக்கொள வெகுண்டண்ட
கோளமும் வெடிப்ப உதறிப்
பங்கம் படுக்குமதக் களிறலறி வீழ்ந்துழப்
பப்பாய்ந் தடித்து டைத்துப்
பருமத் தகம்பிளந் தீர்கோட்டு வெண்தரள
பந்திசிந் தித்தெ றிப்பப்
பொங்குங் கடற்குருதி புழைபடுங் கைமடைப்
புகர்முகர் துறைமடுத் தோர்
பொற்றையிற் சுற்றும் குலிங்கம்குறிக்கொளப்
போந்துகடை வாய்தடவி வெண்
சிங்கம் தியங்கும்வரை செல்வமுத லாளியே
சிறுபறை முழக்கி அருளே
தென்இலஞ் சிப்பதிப் பன்னிருகை மேகமே
சிறுபறை முழக்கி அருளே.
89✓
முறுகிக் கதிர்க்கும் செருத்தற் பகட்டெருமை
மோட்டுவெங் கோட்டுநுதி யால்
முள்வேலி கோலிக் குறுங்கால் நறுங்குவளை
முருகுசித றப்பெ யர்த்துக்
குறுகிக் கருப்பங் குருத்தைக் கறித்துக்
குதட்டிக் குதட்டி மேய்ந்து
கொழுமலர்த் தேன்ஊற விரவிவரு புனலுண்டு
குறுநடை பயின்று மறுகி
மறுகிற் புகுந்துபணை மருதநிழ லில்தூங்கி
மாங்கனி படைப்ப வாங்கி
வாங்கிச் சுழிப்புறத் துண்ணன் றெழுந்துதன்
மழக்கன்றி னுக்கி ரங்கிச்
சிறுகக் கனைத்துவரு தென்ஆரி நன்னாட
சிறுபறை முழக்கி அருளே
தென்இலஞ் சிப்பதிப் பன்னிருகை மேகமே
சிறுபறை முழக்கி அருளே.
90✓
கைத்தலை வைத்த விருப்புடன் அற்பர்
கடைத்தலை தொறும் உழல்வோர்
கற்றச ரக்கை விலைச்செயும் அற்ப
கவித்துவம் இழிவெனவே
யிற்றலை பத்ம பதத்தை வழுத்தும்
எனக்கருள் புரிகுவைநீ
எய்த்தவ ருக்கும் இளைத்தவ ருக்கும்
இரக்கம துடையவன்நீ
நத்தலை சித்ரந தித்தலை நிற்கும்
நடைப்பிடி தருமகன்நீ
நச்சர வத்தில் நடித்தருள் பச்சைமு
கிற்கொரு மருமகன்நீ
முத்தலை யத்ரன் அளித்தருள் புத்திரன்
முழக்குக சிறுபறையே
முக்குடு மிக்கிரி யிற்கும ரப்பன்
முழக்குக சிறுபறையே.
91✓
அகத்தினில் நினைப்பவர் பிறப்பையும் இறப்பையும்
அகற்றிடும் அருள் மலையே
அகத்தியன் வழுத்திட இலக்கண இலக்கியம்
அமைத்தருள் குருபரனே
பகைத்திறம் ஒடுக்கிஎன் மனத்திடை அருட்கதிர்
பரப்பிய படர்ஒளியே
படைப்பவன் முடித்தலை புடைத்துல கினைத்தனி
படைத்திடும் இறையவனே
நிகழ்த்திய படிக்கித சுகத்தினில் எனத்தொழில்
நிரப்பிய நிருமலனே
நினைப்பொடு மறப்புவி கற்பவி கற்பமும்
நிறுத்திடு நியதிஉளாய்
முகிழ்த்தபு னகைச்சிறு குறத்தியொ டிருப்பவன்
முழக்குக சிறுபறையே
முதற்பிறை நுதற்குழல் மொழிக்கொரு மழக்குக
முழக்குக சிறுபறையே.
92✓
இதயமணி முத்தம்நிறை சததள மலர்த்தவிசின்
இடைஒரு கிழத்தியயில் வாள்
எறிகடல் முகட்டில்எழு தினகர ரவிப்பிரபை
யிற்காட்சி நற்ப்ரபையும் ஆய்
உதயகிரி அத்தமன கிரிகள்என மிக்குயரும்
உபயபுய வெற்பின்மிசை போய்
ஒளிர்பணில சக்ரநில வொருபுடை எறிப்பவெயில்
ஒருபுடை எறிப்பமலர் மேல்
மதலைஎழும் அச்சுழியில் எழுபுவி படைப்பவரும்
மரகத மணிக்குவடு போல்
வரிஅர வணைக்குள்விழி வளரும் ஒரு
பச்சைமுகில்
மருமகன் ஒருத்திகுற மான்
திதலைமுலை யிற்களப மெழுகிடு திருக்கைக்கொடு
சிறுபறை முழக்கி அருளே
திரிகுடுமி வெற்புடைய குழல்மொழி திருக்குமர
சிறுபறை முழக்கி அருளே.
93✓
இடைச்சியர் புனைதுகில் எடுத்தொரு தருவினில்
இருப்பவன் மருமகனே
இருட்டறை உழும்இள முளைக்கும ரியும் என
இலக்கினில் வருபவனே
படைப்பவர் தொகுதிகள் படைப்பவன் எனும்இறை
பழிச்சிய பழையவனே
பகுத்திடு பல்கலை தொகுத்திடு நிலைபெறு
பரப்ரம் ஒளிஉருவே
உடைத்தெழு மதசலம் உவட்டெழு கயமுக
ஒருத்தர்பின் வருபவனே
உருத்திர பசுபதி எனத்தொழு மறையவர்
உளத்திலும் உறைபவனே
முடித்தலை இமையவர் கெடித்தலம் உரியவ
முழக்குக சிறுபறையே
முடப்பல வடியினில் முளைத்தவன் மழவிடை
முழக்குக சிறுபறையே.