திருவிலவஞ்சி முருகன் பிள்ளைத்தமிழ்
கவிராச பண்டாரத்தையா
வாரானைப்பருவம்7 / 11
திருவிலவஞ்சி முருகன் பிள்ளைத்தமிழ் · கவிராச பண்டாரத்தையா
வாரானைப்பருவம்
52✓
கண்டாய் இல்லைப் போலும்இது
கரத்துக்கிசைந்த குறுந்தொடிநின்
காதுக்கிசைந்த மாணிக்கக்
கதிர்ப்பூங் குழைமற்றிதுகாற்காம்
தண்டா ரகைபோல் மணிகிடந்த
சதங்கை வடமற் றிதுநினக்குத்
தரவேண் டாவோ வந்தால்இத்
தனையும் புனையும் தரம்ஆமே
விண்டாரணங்கள் வழுத்தரிய
விழுத்தாள் இணையும் அருள்பழுத்த
வெண்மு ரலுமூ விருமுகமும்
விளங்கப் புகுந்தென் மனக்கோயில்
கொண்டாய் வருக தமிழ்இலஞ்சிக்
குமரப் பெருமான் வருகவே
குடுமிச் சுடர்வேற் படைஉடைய
கோமான் வருக வருகவே.
53✓
ஆர்க்குங் கனகத் தாள்பந்தத்
தழுத்தும் வயிரச் சுட்டிகிடந்
தசைந்தே இசைந்த மலர்க்கடம்பத்
தலங்கற் குடுமி ஓடுமலங்கச்
சேர்க்குங் குரல்வாய்ச் சிறுசதங்கை
சில்என் றலம்பப் பொலஞ் சிலம்பு
சிலம்பச் சிலம்பிற் சிங்கத்தின்
சிறுகன் றென்னச் சிற்றடியார்
பார்க்குந் தவம்போல் நடைபழகிப்
பழகு மடவார் தளிர்க்கைவிரல்
பாய்ந்து பிடித்து நடந்தினைத்துப்
பனிவேர் வரும்பிச் செவிலிமுகம்
கூர்க்குங் குறிப்பும் குறுநகையும்
குழைவும் அறிந்தேம் வருகவே
குடுமிச் சுடர்வேற் படைஉடைய
கோமான் வருக வருகவே.
54✓
அமளிக் கலவிக் கொடும்போரில்
அவிழ்ந்த குழலும் இடைநெரிந்த
அங்கச் சரியும் செங்குமுத
அதரச் சிவப்பும் கருங்குவளைச்
சமரக் கடைக்கண் சிவப்பும்இடை
சரிந்த உடையும் தளர்நடையும்
தழுவுங் கொழுநர் தடம்புயம்பூ
தரலே பனசந் தனச்சாந்தம்
திமிரத் திமிரத் திமிர்ந்தசெப்பில்
சின்னப் பிறைப்போர் கிடந்தநக
சின்னங் களுமாய்த் துயில்எழுந்தார்
செப்பா மொழியைச் சேடியர்க்குக்
குமரிக் கிளிகள் புகழ்இலஞ்சிக்
குமரப் பெருமான் வருகவே
குடுமிச் சுடர்வேற் படையுடைய
கோமான் வருக வருகவே.
55✓
அடிமை வழிக்கோர் ஆள்எனக்கொண்
டருட்பால் புகட்டி மருட்பிறவி
அறுக்கும் படிவந் தெழுத்தறிவித்
தஞ்சா றேழெட்டெனும் பருவத்
துடைமைப் படுத்தி அஞ்செழுத்தும்
உபதே சித்தென் உயிர்க்குயிராய்
உணர்வுக் குணர்வாய்ப் பயின்றறியும்
உருவிற் குருவாய் உடன்கலந்து
மடமை தவிர்த்து வழிபாடு
திருத்தி மழலைத் திறம்திருத்தி
மதுரக் கவிநா வரத்திருத்தி
வலியப் பிடிசோ றமுதருத்திக்
குடுமி திருத்தி எனைவளர்த்த
குருவே வருக வருகவே
குடுமிச் சுடர்வேற் படை உடைய
கோமான் வருக வருகவே.
56✓
புறம்சுற் றியதெண் திரைஆழிப்
புவனப் பரப்பெலாந்தெரிந்து
பொருள்தேர்ந் தருள்தேர்ந் தவர்க்குதவார்
புதையல் இருக்கும் இடம்தேடி
மறம்சுற் றியவேற் குறுநிலமா
மன்னர் புகுந்து துன்னுவபொன்
வாரிப் பெருங்கா வடிசேர்த்து
வழங்கா நெறிபோம் வழக்கேபோல்
அறம்கற் றறியார் குலவேடர்
அருங்கோட் டடுக்கற் புறத்துவைத்த
ஆய்பூஞ் சிறகர் ஈஇஅகற்றி
அளிதேன் கவர்ந்து கொடுபோதும்
குறிஞ்சிக் கிழவா தமிழ்இலஞ்சிக்
குமரா வருக வருகவே
குடுமிச் சுடர்வேற் படைஉடைய
கோமான் வருக வருகவே.
57✓
அப்பன் வருக எனைஆண்ட
ஐயன் வருக அமர்உலகுக்
கதிபன் வருக கயிலாயத்
தரச குமரன் வருக எங்கள்
வைப்பன் வருக குழல்மொழித்தாய்
மைந்தன் வருக கலவமயில்
மகிழ்வோ டேறித் தேவர்தொழ
வருவான் வருக அறநெறிக்குத்
துப்பன் வருக மெய்ஞ்ஞானத்
துறைவன் வருக புலம்புகுதும்
தொடியன் வருக மணிச்சுடிகைத்
தோளான் வருக துலங்குமனக்
கொப்பன் வருக மாணிக்கக்
குழையன் வருக வருகவே
குடுமிச் சுடர்வேற் படையுடைய
கோமான் வருக வருகவே.
58✓
தேந்துணர் அலங்கல்முடி இமையவர் குழாம்தொழச்
சிங்கா சனத்திருக்கும்
தேவேந்திரன் வரக் குமாரத்தி கணவனைத்
தேடித் திகைத்திருப் பக்
காந்தள்அம் சாரலில் கடிபுனம் காக்குமான்
கண்ணிக்கோர் கண்ணிவைத் துக்
களிறுதரு புணர்வினால் புணர்தந்து பின்வரும்
களநாடி யுள்மயங் கி
ஏந்திளங் கொங்கைமார் இடைவினவி உடைவினவி
என்போக்கி நின்றுடன் போக்
கிடையீடு கைவந் தரத்தொடு நிறுத்தெயினர்
ஏற்றபடி ஆற்றுவது வைக்
கூந்தல்அம் பிடியுடன் புதுமணக் கோலமும்
கொண்டுவந் தவன்வருக வே
கும்பமுனி தஞ்சம்என நம்புதென் இலஞ்சிவரு
குமரநா யகன்வருக வே.
59✓
ஒத்தசிவ பத்தர்பரி சுத்தர்இத யத்தினின்
றுதயஞ்செய் பானுவருக
உத்தேச லட்சண பரிட்சையின் அகப்படா
ஒளியின் ஒளி உருவன் வருக
அத்துவா வைத்துடக் கறநின்று சோதித்
தரந்தைதீர்த் தவன்வருக வந்து
அறிவதொருகுறிதன்ன தருளில்அறி வித்தென்னை
ஆட்கொண்ட குரவன் வருக
பத்திவலை யிற்படும் பரமஓதி மம்வருக
பழையவா தனை அகற்றும்
பரம்பர மாதீத பரமுத்தி நல்குவர
பாரிசா தம்வருக நின்
கொத்தடியர் கூட்டத்தில் என்னையும் இருத்திக்
குறித்தபெரு மான்வருக வே
கும்பமுனி தஞ்சம்என நம்புதென் இலஞ்சிவரு
குமரநா யகன்வரு கவே.
60✓
அநிர்வசன மாயப் பெருஞ்சலதி ஆடும்அடி
யேங்கள்உனை அடைய மாட்டேம்
அடிகளும் அனைத்தும்உடை யவனும்உடை
மைப்பொருளும் ஆதலால் அடியரேமும்
தனதுபொரு ளுடைமையில் தீராமை தேறிஒரு
தண்அளி சுரக்க வருக
தற்காக்க வருககை தரவருக வற்றாத
தண்கருணை வெள்ளம் வருக
வனசரிதி வருகவர பாரிசா தம்வருக
வளர்சுரபி வருக சிந்தா
மணிவருக எனதிருகண் மணிவருக என்ஐயன்
வருகஎன் அப்பன் வருக
குனிசிலைப் புருவத் திருந்திழை அருந்தவக்
குழவிஇள மதிவருக வே
கும்பமுனி தஞ்சம்என நம்புதென் இலஞ்சிவரு
குமரநா யகன்வருக வே.
61✓
ஏறாத உச்சியில் இருக்கும் பசுந்தேனை
இருமுடவன் ஒருதனி கிடந்
தேக்கற்றும் அங்காந்தும் நின்நிலையும் எந்நிலையும்
இன்னிலை எனக்கிடந் தேற்
காறாத சிந்தா குலப்புன்மை தனையுமே
ஆற்றிஒரு படிதேற்று வித்
தானாந்த சலதிநீர் ஆட்டிப் பராஅமுதம்
ஊட்டித்தன் அளவைகாட்டி
மாறாத சீவாநு பூதி அருள் சீவானு
பூதிகமும் ஆக மன்னும்
மன்னுபசு கரணமும் சிவகரண மாக்கி அருள்
மறையின் பெரும்பொரு ளையும்
கூறாது கூறிஎன் மனப்பெருங் கோயிலில்
குடிகாண் டவன்வருக வே
கும்பமுனி தஞ்சம்என நம்புதென் இலஞ்சிவரு
குமரநா யகன்வருக வே.
62✓
செங்கையில் இலங்குயில் இலங்கிய குறுந்தொடி புலம்பஒளிர்
திகழும்வெயில் இருள் பருகவே
செஞ்சரண பங்கய சிலம்பொலி முகந்தடியர்
செனனசா கரம் ஒழியவே
அங்கரை வடங்களொடு கொம்புமணி யுங்குலவ
அருணமே கலைஇசைய வே
அங்கதபு யங்களில்வி ளங்குபனி ரண்டிரவி
அனையவார் குழையசைய வே
கங்குல்பகல் இன்றிமலர் கண்கள் பனி ரண்டும்எழு
கருணைவா ரிதிசெறிய வே
கங்கைமக ளுஞ்சயில மங்கைஅர சுந்தமது
கயல்கள் போல் விழிகுளிர வே
கொங்குகமழ் தென்கயிலை முன்றினில் நடந்துவரு
குழவிவா ரணம்வருக வே
கும்பமுனி தஞ்சம்என நம்புதென்இ லஞ்சிவரு
குமரநா யகன்வருக வே.