முருகன் App
திருவிலவஞ்சி முருகன் பிள்ளைத்தமிழ்
கவிராச பண்டாரத்தையா
முத்தப்பருவம்6 / 11
திருவிலவஞ்சி முருகன் பிள்ளைத்தமிழ் · கவிராச பண்டாரத்தையா

முத்தப்பருவம்

42✓
நெகிழா வரிவண் டினமுரலா
நிரலா இருந்து விருந்தருந்தும்
நெய்தற் கருங்கா னலந்துறைவெண்
நிலவுக் குடவால் வளைமுத்தும்
திகழ்ஆர் கலியின் கொழும்பவளச்
செழுங்கா டடர்ந்து படர்ந்தேறித்
தெற்றும் பணைமா மருதவயற்
செங்கட் கரும்பிற் செறிமுத்தும்
இகழாப் புறவத் திழிகான்யாற்
றிறங்கும் இபக்கோட் டிழிமுத்தும்
இலஞ்சிக் குறிஞ்சிக் கிளைமுத்தும்
ஏந்தேம் நின்பால் இரந்தேமால்
முகிழா மலர்ப்பூங் கடம்பாநீ
முத்தம் தருக முத்தமே
முருகா குமரா முத்தையா
முத்தம் தருக முத்தமே.
43✓
கடவுட் பொருநைக் கடற்றுறையும்
கன்னித் துறையும் பொன்னிநதிக்
கடலந் துறையும் பொங்குபுனற்
கங்கைத் துறையும் தங்குசுழி
தடவுங் குடவால் வளைமுத்தம்
சலாகைப் பருவத் தடைபட்டாம்
சலாபத் திகளாம் சமுதாயத்
தரவாம் போதி தணவாமல்
குடமுட் கனியின் சுளைபிதிர்ந்து
கொழுந்தேன் ஒழுகிச் செழுந்தேமாங்
குலவுக் கனியைச் சுழித்தரம்பைக்
குலத்தைப் பழித்து மணங்கொழிக்கும்
முடவுப்பலவின் முளைத்தவன்சேய்
முத்தம் தருக முத்தமே
முருகா குமரா முத்தையா
முத்தம் தருக முத்தமே.
44✓
சத்தம் இருந்த முதுமறையோன்
தண்அம் கயிலைத் தடம்சாரல்
தடங்கோட் டிடபம் தனைத்தாழ்ந்து
தனக்கென் றன்னம் இரந்திட்டான்
அத்தம் இருந்த சுடர்ஆழிப்
பெருமான் அன்று மாவலிபால்
ஆழிப்புவனம் இரந்திட்டான்
அருமா தவத்துக் கன்னியர்தம்
சித்தம் இரந்தான் எம்பெருமான்
சிறியேம் இரத்தல் பிழையாமே
தெய்வத் தமிழ்தேர் தென்இலஞ்சிச்
சைவக் கொழுந்தே தீங்கனிவாய்
முத்தம் இரந்தேம் நின்பாலாய்
முத்தம் தருக முத்தமே
முருகா குமரா முத்தையா
முத்தம் தருக முத்தமே.
45✓
தென்னர் இலஞ்சிப் பெருமான்நின்
திருத்தா மரைக்கைக் கொடைக்குடைந்து
செல்லும் செல்லும் திருத்தாதைத்
திருமா மறுகக் குடைந்தசங்கு
மன்னர் மறைகள் முறையிடுநின்
மலர்த்தாட் குடைந்த கமலமுநின்
மதுரம் துளிக்கும் சிறுகுதலை
மழலைக் குடைந்த வான்கரும்பும்
மின்னிற் குடைநுண் இடைக்குறப்பெண்
வெருவப் புகுந்துன் வேற்குடைந்த
வேழப் பொருப்பும் தருமுத்தம்
விழைந்தால் கிடைக்கும் வேண்டகிலேம்
முன்னர்க் குருமா முனிபணிசேய்
முத்தம் தருக முத்தமே
முருகா குமரா முத்தையா
முத்தம் தருக முத்தமே.
46✓
செக்கச் சிவந்த செழுங்கமலச்
சிமிழ்வாய் திறந்த திருமுத்தும்
செந்நெற் படப்பை செறியிலஞ்சிக்
கன்னற்றிரளில் திரள்முத்தும்
எக்கர்படுகர் இழிகான்யாற்
றிறங்கும் இபக்கோட் டிமிழ்முத்தும்
எங்கோன் இருக்கும் திரிகூடத்
தேமாப் புறத்திற் கிளைமுத்தும்
மைக்குள் குளிக்கும் படிகுளிக்கும்
மலைவாணர் சலா பத்துமுத்தும்
வந்தாற் குறப்பெண் நகை உறைக்கு
வைத்து மதுரத் துளிதுளும்ப
முக்கட் கனிக்கும் இனிக்குநின்வாய்
முத்தம் தருக முத்தமே
முருகா குமரா முத்தையா
முத்தம் தருக முத்தமே.
47✓
கழிபிறப்பும் தொலைய நிற்கும்
கவிஞர்சித்தம் பெருகவே
கயிலைவெற்பும் பொதிகைவெற்பும்
கடவுள்வெற்பும் தகையவே
தழுவு பொற்குங் குமமுலைக்கண்
தனிசுவைக்கும் பவளவாய்
தனைமுகக்கும் செவி லிகைக்கும்
தளிர்அடிக்கும் தகையவே
பொழி மதத்தன் புகர்முகத்தன்
புடையில் நிர்த்தம் புரியவே
புனல்முடிக்குங் கடவுள்அப்பன்
புதுநகைக்கும் குறுகவே
குழல்மொழிப்பெண் கையிலிருக்கும்
குழவிமுத்தம் தருகவே
குறுமுனிக்கன் றருள்சுரக்கும்
குமரன் முத்தம் தருகவே.
48✓
கழை சுழிக்கும் கயமு கத்தெம்
கடவு ளைக்கண் டடவிசூழ்
கடிபுனத்தன் றொருகு றப்பெண்
கரம்நெரித்தஞ் சினவளாய்த்
தழைஉ டுத்தங் கயல்வ ரச்சந்
தனம ணக்கும் தனகடாம்
தழுவி முத்தம் தருகெனத்தந்
துருகி நிற்கும் தலைவநீ
பொழிம தச்செண் பகவ னத்தெம்
புனிதன் முத்தும் பொழுதெலாம்
புயவ ரைக்கண் பதிய வைக்கும்
புதும லர்ச்செஞ் சரணன்றீ
கொழித மிழ்த்தென் புவிபு ரக்கும்
குரிசில் முத்தம் தருகவே
குறுமு னிக்கன் றருள்சு ரக்குங்
குமரன் முத்தம் தருகவே.
49✓
கன்னலங் காடுதன் மொய்த்தவெண் முத்தம்
கருப்பாலை புக்கரை படும்
கழனித் தடஞ்சாலி வெண்முத் தெருத்தின்
கவைக்கால் மிதித்துடைபடும்
துன்னலஞ் சுடர்மூத் திபக்கோட்டில் உண்டது
துரக்குபு மடங்கல் ஏறு
துத்திக் குருத்தொடு பிடுங்கச் சிதர்படும்
துளைகொள்நாள் முளரி முத்தம்
பன்னலங் காட்டினும் பாய்ந்தளறு படுநெடும்
பரவைக் கழிக்கானல் வாய்ப்
பணிலமுத் தெல்லாம் புலால்படுந் தெய்வ
பதிக்கெலாம் பழையபதி ஆம்
தென்இலஞ் சிப்பதித் தேவசேனாபதி
திருப்பவள முத்தம்அரு ளே
சேணோங்கு மாடத்ரி கூடச் சிலம்பன்
திருப்பவள முத்தம் அருளே.
50✓
வானோங்கு முப்புடைப் பைங்காய்க் குலைத்தெங்கின்
மடல்வீழ்ந்து நெற்றுவீழ்ந்து
வாள்அர வுடன்திங்கள் முரிபட்டு வீழ்ந்ததென
மருதமுரு டடறிமது ரக்
கான்ஓங்கு வெள்ளிமுறி கல்என் றொலித்தலும்
கருவிரல்வெள் உதிர்வளைக்காற்
காய்த்திட்ட செம்பிட்ட நெடியவற் கூன்புறக்
களியுடற் குளிகட் குறும்
பேன்ஓங்கு சிறுநரைப் புன்தலைக் கடுவன்
பிணாவிழ்ந்த தென்றுபத றிப்
பேதுற் றிமைத்திமைத் தலமருதல் கண்ணுறீஇப்
பிணாவந் திணங்குபு தழீஇத்
தேன்ஓங்கு மணம்உயர் இலஞ்சிவள நாடன்
திருப்பவள முத்தம்அரு ளே
சேண்ஓங்கு மாடத்ரி கூடச் சிலம்பன்
திருப்பவள முத்தம்அரு ளே.
51✓
கைப்பவள மாணிக்கக் கடகம் சிலம்பு பொற்
காறைகை வங்கி காப்பு
கனககொந் தளஓலை வெண்முத்து மாலிகை
கலந்தொளி நெருங்கிடமருங்
மெய்ப்பவள ருந்தனக் குன்றும் குழற்காடும்
ஏந்திழை நலார் கிளைஞர்
இனியமடல் எழுதுதென் காசிக்கு முத்தமிழ்
இலஞ்சிப் பதிக்கும்எங் கோன்
வைப்பவள ருஞ்சுப்ர மணிய புரத்திற்கும்
வளர்ஆறு முகநகர்க் கும்
மருதத் தடஞ்சாலி சூழ்பிரான் ஊருக்கு
மன்னுபொன் உலகம் என் று
செம்பவளம் ஓங்குநன் னகர்க்கும்ஒரு வேந்தன்
திருப்பவள முத்தம் அருளே
சேண்ஓங்கு மாடத்ரி கூடச் சிலம்பன்
திருப்பவள முத்தம்அரு ளே.