முருகன் App
திருவிலவஞ்சி முருகன் பிள்ளைத்தமிழ்
கவிராச பண்டாரத்தையா
தாலப்பருவம்4 / 11
திருவிலவஞ்சி முருகன் பிள்ளைத்தமிழ் · கவிராச பண்டாரத்தையா

தாலப்பருவம்

21✓
கடவுட் புலம்போய்க் கற்பகத்தின்
காவோ டிகலி உயரியபைங்
கமஞ்சூற் கமுகின் மிடறுவிண்ட
கற்றைத் துணர்ப்பூ விரிக்கவரி
துடைவைப் புதுப்பூந் தொடைஅழகார்
சுரமா மகளிர் பணிமாறும்
துணைப்பூங் கவரி உடன்பயின்று
சுடர்வெண் தரளம் இடைகலந்த
முடவுப் பிறைநான் கெனமுளைத்த
முனைவாள் மருப்புப் பொருப்புகைத்து
முற்றும் பவனிக் குலிசபதி
மொய்ம்பிற் சிறுகால் முகந்தெறியும்
அடவிப் பொதும்பர் செறி இலஞ்சிக்
கரசே தாலோ தாலேலோ
ஆறு முகத் தெம் பெருமானே
ஐயா தாலோ தாலேலோ.
22✓
பொலங்கற் பகத்தின் சினைபூத்த
பொன்னந் துணர்ப்பூந் தாதுபடி
புனிதச் சுரும்பர் முகடுரிஞ்சும்
புயல்காற் றரும்பின் மிசைபூத்த
கலங்கற் பசுந்தேன் உவட்டெறிபூங்
கனியின் சிறப்புக் கடைக்கணித்துக்
கனகா டவினன் றுவந் தடுக்கக்
கடுக்கைப் புறவம் தோன்றுதலும்
விலங்கற் கரிதாய்ப் புகுந்தயலே
வேரிப் புதுச்சண் பகச்சோலை
விழையா மருதப் பேட்டளியை
வேட்டங் கணையும் இலஞ்சிவெற்றி
அலங்கற் குடுமி இலங்கிலைவேல்
அரசே தாலோ தாலேலோ
ஆறுமுகத்தெம் பெருமானே
ஐயா தாலோ தாலேலோ.
23✓
கள்ளத் தடங்கண் கடைசியர்கைக்
கருங்காப் பிடறிக் களைபறித்த
கற்றைக் கழுநீர்ப் பொதிசரித்துக்
கமுகின் பழுக்காய்க் குலைசிதறி
முள்ளுப் பொதிந்த குடக்கனியை
முடத்தேம் பலவ முகந்துடைத்து
மொய்பூந் தேமாங் கனிஉகுத்து
முழுக்காய்க் கதலிக் குலைசாடி
வெள்ளைப் பெடைஓ திமங்கிடந்த
வேலிப்புறத்திற் பழுத்தஎலு
மிச்சங் கனிபந் தடித்துவெடி
வாளைப் பகடு விளையாடும்
அள்ளற் பழனத் தமிழ்இலஞ்சிக்
கரசே தாலோ தாலேலோ
ஆறுமுகத்தெம் பெருமானே
ஐயா தாலோ தாலேலோ.
24✓
என்பார்ப் பதித்தாய் ஏக்கறநின்
திருக்கார்த் திகைத்தாய் ஒருங்கேவந்
தேந்து முலைப்பால் அமுதூட்டி
இலைப்பாற் கிடத்த மலைப்பின்றி
முன்பா விலையில் ஒருகொழுந்து
முகில்போற் கிடந்து தனிவளர்ந்த
முளரித் தடங்கண் மாதுலன்போல்
முழங்குஞ் செழுநீர்ச் சரவணத்துப்
பொன்போல் துயின்றாய் குயின்றமணிப்
பூந்தொட் டிலில்யான் தாலாட்டிப்
பொன்னங் குறங்கு தடவவும்கண்
பொருந்தாய் போலும் இருந்தாயால்
அன்பாய்த் தென்பார் புகழ்இலஞ்சிக்
கதிபா தாலோ தாலேலோ
ஆறுமுகத்தெம் பெருமானே
ஐயா தாலோ தாலேலோ.
25✓
முடக்குங் கருங்கைச் செடித்தாடி
முடைவாய் இடையர் கடைகாலின்
முன்ஊன் றியகோல் மிசைத்துயில
முட்டுஞ் சுவைப்பால் முலைச்சுரபி
மடக்குங் குளகின் நசைக்கயல்போய்
வயற்பூஞ் சாலிக் கதிர்மேய்ந்து
மடற்பூ விரியாப் பசுங்கமுகை
வண்ணக் கரும்பென் றெண்ணிஉண்டு
குடக்கம் பிடறிக் கவைக்குளம்புக்
குறுங்கால் பெயர்த்து நறுங்காஞ்சிக்
குளிர்நீள் ஆற்றின் இளம்புனிற்றுக்
குழக்கன் றூட்டிக் குழல்ஒலிகேட்
டடக்குந் தமரோ டமர்இலஞ்சிக்
கரசே தாலோ தாலேலோ
ஆறு முகத்தெம் பெருமானே
ஐயா தாலோ தாலேலோ.
26✓
விடற் கரிய பாயலின்மேல்
வெறுப்பாய் முளைக்கும் விழிக்கணையோ
வேற்பூங் கணையாய்க் கொடிப்புருவ
வில்லே கொல்லுங் கொடுஞ்சிலையா
ஊடற் பெரும்பா சறைப்பூசல்
உடற்றுங் கடல்நெள் அமுதனையார்
உருக்குஞ் சமுக வெளிஅகத்தும்
ஊதுங் கருங்கோ கிலக்காளம்
சூடற் கரிய திறல்விருது
சூட்டுந் தடஞ்சோலையின்புறத்தும்
தொடங்கும் இருள்மா மருள்மாலை
தோன்றா முன்னம் தெருத்தொறும்பந்
தாடற் சிலைவேள் பயில் இலஞ்சிக்
கரசே தாலோ தாலேலோ
ஆறு முகத்தெம் பெருமானே
ஐயா தாலோ தாலேலோ.
27✓
இருவிக் குடுமித் திரிகூடத்
திணர்ப்பூஞ் சாரற் புறத்தும்நென்
இலஞ்சித் திருக்கோ யிலின் அகத்தும்
இருந்த படியே திருந்தொளியாய்
மருவிப் பிரியா வள்ளியுடன்
வடிவேல் செங்கை வலன்ஏந்தி
மயிலின் புறத்துக் கயிலாய
மலைபோல் உயர்ந்த மலைஅகத்தும்
குருவிற் சிறந்த கும்பமுனி
கும்பிட் டிறைஞ்ச நின்றநிலை
கூட்டிப் பணியுந் தண்பொருநைக்
குமரா பாவ நாசம்என்னும்
அருவிக் குடுமித் தடாகபுலத்
தமர்ந்தாய் தாலோ தாலேலோ
ஆறு முகத்தெம் பெருமானே
ஐயா தாலோ தாலேலோ.
28✓
இதம்உறும் ஐம்பத் தொருவன் னங்கள்
இலங்கு மணிக்கோவை
எழுதரு முதுமறை நான்கு வடத்தும்
இசைத்த பெரும்ப்ரணவப்
புதுமாணிக்கத் தொட்டிலின் மானத
பூசைத் தனிஅடியார்
பொய்யா மெய்உணர் வணையா டையின்மிசை
பொன்போல் வளர்கின்றாய்;
மதுமலர் பூத்த பொலங்கொம் பனையார்
வகைவகை தாலாட்டு
மட்டார் மலர்ப்பூந் தொட்டி லினங்கள்
மழைக்கண் நெடுங்காவித்
ததைமலர் அணையினும் ஒருதுயில் புரிவாய்
தாலோ தாலேலோ
சம்பத் துதவும் இலஞ்சிக் குருபர
தாலோ தாலேலோ.
29✓
சிங்கம் முழங்குந் தடவரை முடியிற்
செழுமணி கெழுமுல்லைச்
செறிதயிர் கடையும் இடைச்சியர் செங்கைச்
செந்தா மரைமலரில்
பொங்க முழங்கு மணித்தேர் வீதி
புனைகொடி மணிமாடப்
பொன்நகர் மருத வரைப்பு நிறைந்த
புறம்பணை யின்பாலில்
வங்கம் முழங்கு கருங்கடல் நெய்தல்
மருங்கின் ஒருங்கேவெண்
மதியமும் அமுதத் திவலையும் மான
மணித்திரள் வீசுவதூர்
சங்கம் முழங்குந் தமிழ்நா டுடையாய்
தாலோ தாலேலோ
சம்பத் துதவும் இலஞ்சிக் குருபர
தாலோ தாலேலோ.
30✓
வங்கக் கடலும் நடுங்கப் பொருதெழு
மாசூர் மாசூர்மா
மங்கப் பொருதனை பைங்கற் பகநிழல்
வானோர் ஏனோரும்
அங்கட் புவனியும் வெங்கட் கொடியவ
ராலே வாடாமே
அன்றிற் பெயரிய குன்றைப் பொருமதி
வீரா போரூரா
எங்கட் குடையவர் திங்கட் சடையினர்
பாலா நூல்ஆய்வோர்
என்றப் பழமறை அன்றைக் குளதமிழ்
ஏழேழ் பாவாணர்
சங்கப் புலமை தருஞ்சொற் புரவல
தாலோ தாலேலோ
சம்பத் துதவும் இலஞ்சிக் குருபர
தாலோ தாலேலோ.
31✓
இந்திரன் பாவைபெறும் இளையவள்
பாகா ஏகா ஓகாரா
இங்கிதம் பேசு குறமகண்மண
வாளா வேளூர் வேளாளா
உந்தியங் கோகனக முகில்மரு
கோனே கோனே வேலோனே
ஒன்றிரண் டெனஉரை பகரும்என்
நாவாய் ஓவா மீகாமா
மந்தரம் போல்வளர் பனிருபுய
பாரா மாலா கேயூரா
வண்டுகொண் டாடு சுனைமருவு
பிரானூர் வானோர் போரேறே
சந்தனம் தோயுமுலை உமையவள்
பாலா தாலோ தாலேலோ
தண்டையும் காலும் அழகிய
பெருமாள் தாலோ தாலேலோ.