திருவிலவஞ்சி முருகன் பிள்ளைத்தமிழ்
கவிராச பண்டாரத்தையா
சிற்றிற்பருவம்9 / 11
திருவிலவஞ்சி முருகன் பிள்ளைத்தமிழ் · கவிராச பண்டாரத்தையா
சிற்றிற்பருவம்
73✓
மருக்காற் புன்னைப் புதுநிழல்வெண்
மணற்கால் மருங்கு நிலவெறிப்ப
மாடம் சமைத்துக் குடிபுகுந்து
மணிக்கால் இப்பி அடுப்பேற்றிக்
குருக்கால் செம்பொற் சிறுகளகால்
கொழிக்குந் தளந்தேன் உலைப்பெய்து
குடவால் வளைவெண் குழிசிபொங்கக்
குழற்கால் ஆம்பல் நெருப்பமைத்து
முருக்கால் வெல்ல முடியாவாய்
முகிழ்த்துக் கவிழ்த்துக் கிடந்தூதி
முகம்வேர்த் தனம்நீ குறும்பிழைத்தால்
முற்றும் தரமோ முக்காலும்
திருக்கால் பிடித்துக் கும்பிட்டேம்
சிறியேம் சிற்றில் சிதையேலே
தேவே இலஞ்சிச் சினவேலோய்
சிறியேம் சிற்றில் சிதையேலே.
74✓
அம்பொற் சிறுவீட் டணிகாண
அன்னை வருவாள் பின்னையும்என்
ஆவி அனைய தோழியருண்
டவரும் வருவார் அன்னையரைக்
கும்பிட் டிறைஞ்சித் தோழியரைக்
கூடித் தழுவிக் கொண்டன்னை
கொணர்ந்த வரிசை அத்தனையும்
கைக்கொண் டெமது குலமனையின்
சம்பத் தவர்க்குக் காட்டிஉள்ளம்
தழைக்கும் படிக்கு விருந்தளித்துத்
தமியேங் களுமுண் டிளைப்பாறும்
தனையும் சதியேல் சதியேல்உன்
செம்பொன் றிருத்தாள் சென்னிவைத்தேம்
சிறியேம் சிற்றில் சிதையேலே
தேவே இலஞ்சிச் சினவேலோய்
சிறியேம் சிற்றில் சிதையேலே.
75✓
கங்கைத் திருத்தாய் திருத்தனமும்
கவுரி குழல்வாய் மொழித்தாய்தன்
கதிர்ப்பூண் முலையும் கார்த்திகைத்தாய்
கனகா சலப்ப யோதரமும்
தங்கக குடம்போல் மணிக்குடம்போல்
தரளக் குடம்போல் குடியாப்பால்
ததும்பத் ததும்பப் பிதிரோடத்
தாரோ டசையுந் திருஅரைஞாண்
பொங்கச் செறித்த மணிநெகிழ்ந்து
புலம்பப் புலம்பிற் சிறுபண்டி
புலரப் புலர விளையாடல்
புகுந்தாய் பயந்தார் பொறுப்பாரோ
திங்கட் சடையான் கண்மணியே
சிறியேம் சிற்றில் சிதையேலே
தேவே இலஞ்சிச் சினவேலோய்
சிறியேம் சிற்றில் சிதையேலே.
76✓
முந்திப் பிறந்த இளங்களிற்று
முகத்தெம் பெருமான் கணத்தினுக்கு
முன்னே சிறுதே ருடன்போந்து
முதிரா முகிழ்மென் முலைஎம்பால்
புந்திக் களிப்பால் விளையாடப்
புகுந்து புழுதி யாட்டயராப்
பொன்அம் சிலம்பர் அடிமுடியில்
புனைந்தே மழலைக் கிரங்கிவரம்
தந்திப் பொழுதெம் மறுகடைந்தான்
தளங்கொண் டிலங்கோ மகன்தயும்
தண்டைத் திருத்தாள் வணங்கும்எம்பால்
தயவு புரியுந் தன்மைத்தால்
சிந்தித் திடில்அன் றொன்றறியேம்
சிறியேம் சிற்றில் சிதையேலே
தேவே இலஞ்சிச் சினவேலோய்
சிறியேம் சிற்றில் சிதையேலே.
77✓
நச்சு மரம்தான் ஆனாலும்
நட்ட மரம்காண் தொன்றுதொட்டு
நாங்கள் அடிமை நீங்கள்எம்மை
நடத்தும் தலைமைப் பெருமான்காண்
வைச்சு மரம்தண் ணீர்வார்த்து
வளர்ப்போர் குறைக்க நினைப்பாரோ
மற்றோர் குறைவந் துற்றாலும்
மாற்றிப் புரக்க வழக்கன்றோ
கச்சை முனிந்து முகம்கறுத்துக்
கனத்துச் சினத்துக் கடக்களிற்றின்
கதிர்வாள் மருப்பை முனைமடக்கிக்
கதிர்க்குங் கதிர்ப்பூண் முலைக்குறத்தி
செச்சை செறிக்குந் திருமார்பா
சிறியேம் சிற்றில் சிதையேலே
தேவே இலஞ்சிச் சினவேலோய்
சிறியேம் சிற்றில் சிதையேலே.
78வேறு✓
அறல்பாய்ந் திட்ட மணல்ஊடே
அடியேம் கட்டு சிறுவீடே
குறைதீர்ந் திட்ட பணியோடே
குடிபூந் திட்ட குறைபாடோ
இறைவாங் கச்சம் மதியாய்நீ
இடைபோந் தெற்றி விடலாமோ
திறலோன் சித்ர சபைவேலோய்
சிறியேம் சிற்றில் சிதையேலே
செறிதேன் செச்சை மலர்மார்பா
சிறியேம் சிற்றில் சிதையேலே.
79✓
வரப்பட் டவர்எண் மரில்நால்வர்
மாற்றம் குறியாக் கொத்தடியார்
மற்றோர் நால்வர் யாங்கள்புது
மழலைத் திறத்தெம் வழிஅடியார்
தரப்பட் டவரா தலினொருத்தர்
தகையார் என்னும் வகைதேறித்
தடந்தேர் மறுகில் விளையாடல்
சமைந்தேம் சமைத்த சிறுவீடு
பொரப்பட் டெழுந்து போர்அவுணர்
புழைமா ளிகையும் சூரபன்மா
பொன் மாளிகையும் கொடிமதிபூம்
பொலந்தேர் மறுகும் வீரமயேந்
திரப்பட்டணமும் அன்றுகண்டாய்
சிறியேம் சிற்றில் சிதையேலே
தேவே இலஞ்சிச் சினவேலோய்
சிறியேம் சிற்றில் சிதையேலே.
80✓
எந்தை இடப்பால் இருந்துலகுச்
கெம்பி ராட்டி அறம்புரக்கும்
இலங்கு கயிலா யப்பொருப்பும்
இளங்கோ மகன்நீ இனிதுருக்கும்
கந்த மாமா தனப்பொருப்பும்
காண்கிற் புரமன் றதனால் நீ
காலால் அமைத்த பணிஎல்லாம்
கையாற் செய்யக் கடவோம்யாம்
முந்தி இமவான் திருப்புதல்வி
முதல்வி வருஞான் றிருபுடையும்
மொய்பூங் கவரி காளாஞ்சி
முதலாய் ஏந்திப் புகுந்தவழி
சிந்தித் திரங்க வேண்டாவோ
சிறியேம் சிற்றில் சிதையேலே
தேவே இலஞ்சிச் சினவேலோய்
சிறியேஞ் சிற்றில் சிதையேலே.
81✓
வார்க்குன் றிரண்டு சுமந்தொசியு
மருங்குற் கருங்கோ வளர்மகளிர்
மணிநீர் ஆடுஞ் சுனைக்கயல் போய்
மாமன் குறும்பு விளைத்தான்முன்
கூர்க்கும் பலிக்கன் றுழன்றுசென்று
குலமா தவத்துக் கன்னியர்பால்
குறும்பு புரிந்தான் திருத்தாதை
குனிக்குங் கருப்புச் சிலையுடன்சென்
றார்க்குந் திருமைத் துனன்ஒருவன்
ஆசைக் கொழுநர் தமைப் பிரிந்த
அணங்க னார்பாற் குறும்பிழைப்பான்
அல்லும் பகலும் அடிகள்யாம்
சேர்க்கும் சிறுவண்டலிற் குறும்போ
சிறியேம் சிற்றில் சிதையேலே
தேவே இலஞ்சிச் சினவேலோய்
சிறியேஞ் சிற்றில் சிதையேலே.
82✓
பைஎந் தியபன் மணிஅல்குல்
பட்டத் தரசி மாருடன்நீ
பரிக்கும் தவிசின் பக்கம்நின்று
பணிசெய் கிற்பேம் பூங்கவரி
கைஎந் திநிற்பேம் காளாஞ்சிக்
கழற்கால் திருப்பா துகைஎடுப்பேம்
காலம் கருதித் திருஅந்திக்
காப்பும் எடுப்பேம் கருத்தாலும்
பொய்யேம் பிறிதோர் கடவுளரைப்
பொருள்ளன் றுணரேம் அருள்பழுத்த
பொன்னங் கிரியே உன்இரண்டு
பொற்றாட் பணிக்குங் குற்றேவல்
செய்யேங் கள்ளனக் குறியேல்நீ
சிறியேம் சிற்றில் சிதையேலே
தேவே இலஞ்சிச் சினவேலோய்
சிறியேம் சிற்றில் சிதையேலே.
83✓
அலம்போந்து பல்பிறவி ஆழியில்தாழ்ந் துள்ளக்
கலம்பாழ் படாதுகரை காட்டுமீ காமா
இலம்பாடு தீர்ந்தொழிய எம்மனோர் ஏத்தும்
சிலம்பார் அடிபுனைந்தேம் சிற்றில் சிதையேலே.