முருகன் App
திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ்
மார்க்க சகாய தேவர்
சிறுதேர்ப்பருவம்11 / 11
திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ் · மார்க்க சகாய தேவர்

சிறுதேர்ப்பருவம்

94✓
மாதரிரு விழியாகு மம்புக்கு மதனவேள்
வாளிக்கு நடுவாகியே
மாலாகு மருணகிரி நாதரரு ணைச்சிகரி
வடவாச லிற்பயிலநம்
பாதமலர் பாடுநீ யென்னஅடி யேனுமெப்
படிபாட என்றஅளவில்
பத்திதரு முத்தநகை யத்தியிறை வாவெனப்
பாடென்று சொல்லியியலாற்
பூதலமு மெங்கிளையு மீடேற நாவிற்
பொறித்தவ ருரைத்தகவிதைப்
புத்தமுது பன்னிரு செவிக்குநிறை யக்கொண்டு
போதமு னளித்தருளினாற்
சீதளம லர்ச்சரண முதவுகர னூராளி
சிறுதே ருருட்டியருளே
செயசெயென அமரர்தொழ அசுரர்முடி சிதறுமுனி
சிறுதே ருருட்டியருளே.
95✓
ஓராயி ரம்பேரை வருடத்தி லொருநாளி
லுண்கின்ற கற்கிமுகிதான்
ஒன்றுகுறை யாகியிடு மன்றுநக் கீரர்வர
ஓடிப்பி டித்தவரையும்
காராய குன்றத் தடைத்துரிய நியதிக்
கடன்துறை முடிக்க அகலக்
கருதிமுரு காறவ ருரைத்தருள நீலக்
கலாபமயி லேறியணுகிப்
பேரான குன்றந் திறந்திவுளி முகியைப்
பிளந்துநக் கீரர்தமையும்
பெரியவேல் கொண்டுபுனல் கண்டுகனை மூழ்கிப்
பிரான்முகலி நதியின்மேவச்
சீராய திருவருள் புரிந்தகர னூராளி
சிறுதே ருருட்டியருளே
செயசெயென அமரர்தொழ அசுரர்முடி சிதறுமுனி
சிறுதே ருருட்டியருளே.
96✓
மரகதக் கொடிதவஞ் செய்தகதை யுங்கரி
மாயவன் புரமானதும்
வருகரன ருச்சித்த துஞ்சது முகக்கடவுண்
மாபூசை செய்தவாறும்
ஒருவழித் துணையான தும்பரமர் பரகதிக்
குதவியது மொருபாலனுக்
குச்சியை வளைத்ததுவு முத்தம வசிட்டருக்
கோதியருள் புரியுமுருகா
அரதனக் கடலிலெழு மாயிரங் கதிருடைய
ஆதவர் தமக்கழகதாய்
அலர்தூவி மேன்மே லருக்கிய மளிப்பதென
ஆகாய முகடுமுட்டத்
திரைவிரிந் தெழுபாலி நதிவருங் கரனூர
சிறுதே ருருட்டியருளே
செயசெயென அமரர்தொழ அசுரர்முடி சிதறுமுனி
சிறுதே ருருட்டியருளே.
97✓
வண்டியிரு சுடராக வையகந் தேராக
மாவாக நாலுமறையும்
வானவர்க ளனைவரும் பரிவார மாகமலர்
வாழ்பவன் பாகனாகக்
கொண்டுமலை சிலையாக அரவுநா ணாகமால்
கோலாக வழலாகவாய்
கொலிறகு காலாக வெந்துமுப் புரமெரிகொ
ளுந்தவெய் தவர்குமரனே
அண்டமள வாகுமணி மேடைதனி லேறிமல
ரளகமுகி லசையவழகாய்
ஆரவட மசையவதி பாரமுலை யசையவிடை
யசையமே கலைகளசையச்
செண்டுவிளை யாடிமட மாதர்பயில் கரனூர
சிறுதே ருருட்டியருளே
செயசெயென அமரர்தொழ அசுரர்முடி சிதறுமுனி
சிறுதே ருருட்டியருளே.
98✓
பந்தாடு மடவார்கள் விளையாடு தற்கேறு
பாதசெம் பஞ்சுபதியப்
பரியநித் திலமேடை பவளமா மேடையாய்ப்
பரிதியின் கிரணமெனவே
நந்தா வெறிக்கவது கண்டிதழ்க் கதவுதனை
நளினந் திறக்கவதிலே
நறவொழுகி யோடியிட வயலின் பரப்பெலாம்
நதியின்ப்ர வாகமாக
வந்தார வாரமொடு பாலாறு டன்புகுத
வாழையின் கனிகள்சிதறி
வரமள்ளர் தேனுடன் பால்பழம் புசியுமென
வழிவந்த வர்க்கருளியே
சிந்தா குலம்பொடி படுத்தியருள் கரனூர
சிறுதே ருருட்டியருளே
செயசெயென அமரர்தொழ அசுரர்முடி சிதறுமுனி
சிறுதே ருருட்டியருளே.
99வேறு✓
விழிததும் பியபுனலின் முழுகிவந் தனைபுரியு
மடியார்க ளுக்கமுதமே
வினையெனுங் குவடுபொடி படநடம் பயிலுமொரு
மயில்வாக னக்கடவுளே
பழிசுமந் திடுமசுரர் முடியொடுந் தலைசிதற
வடிவேலெ டுத்தஅரசே
பவமெனுங் கடலில்விழு மெனையுமன்
பெனுமினிய
கரையெற விட்டபுணையே
பொழிகரும் புயலனைய இனியஅம் பிகைமுலைகள்
பொழிபால் குடித்தகளிறே
புதியசெங் கமலமலர் சரவணந் தனின்மருவி
விளையாடி யிட்டவரசே
செழியசெந் தமிழ்குலவு திருவிரிஞ் சையின்முருக
சிறுதே ருருட்டியருளே
சிவசிதம் பரநடன மிடுதிகம் பரர்குமர
சிறுதே ருருட்டியருளே.
100✓
கனககிங் கணிகள்கல கலகலென் றொலிபரவு
மிருதாம ரைச்சரணனே
கடைபடுங் கடலிலெழு மமுதமுண் டவர்பரவு
கருணா கரக்குரிசிலே
மனமுமைம் புலனுமொரு வழிசெலும் படியெனது
மலமா சொழித்தக்குகனே
வளர்சிலம் பிடைபொழியு மழையெனும் படிசொரியு
மதவா ரணற்கிளையனே
தனனதந் தனனவென வளிமுழங் கியகுவளை
மணமாளி கைச்சதுரனே
தபனசெங் கதிருதய முலகறிந் துணரமுரல்
சரணாயு தக்கொடியனே
தினகரன் சசியளவு திருவிரிஞ் சையின்முருக
சிறுதே ருருட்டியருளே
சிவசிதம் பரநடன மிடுதிகம் பரர்குமர
சிறுதே ருருட்டியருளே.
101✓
முதியவம் புயனையொரு குடிலையின் பொருள்வினவி
முடிமீது குட்டுமுனியே
முழுதுமன் பர்களிதய மலர்குளிர்ந் தலரவரு
முதிராத பொற்பரிதியே
கதிபெறும் படியுலகி லுயிரெனும் பயிர்தழைய
அருள்நீ ரொழுக்கு முகிலே
கயிலையம் பிகைமுழுக வதரமஞ் சனமுதவு
மபிஷேக பொற்கலசமே
புதியசெந் தமிழ்மணமு மறையுடன் கலைமணமு
மழியாமா லர்க்குமுதனே
பொதியவந் தண்ணுருகி யுருகிவந் தனைபுரியு
மறுமாமு கக்குழவியே
சிதைவிறண் டலைமருவு திருவிரிஞ் சையின்முருக
சிறுதே ருருட்டியருளே
சிவசிதம் பரநடன மிடுதிகம் பரர்குமர
சிறுதே ருருட்டியருளே.
102✓
உலகமுண் டுலகுதனை யொருபதந் தனிலளவு
செயுநா ரணற்குமருகா
உதயசெங் கதிரனைய சரணபங் கயமெனது
முடிமே லழுத்து முதல்வா
சலதிவெந் தலறியிட வரைபிளந் திடியவடி
யயிலேவி விட்டதலைவா
தவமெனும் பெருமையுள குறியவன் பெறவினிய
தமிழ்நூ லுரைத்தசதுரா
மலையினும் பெரியதன வினியவஞ் சியர்பயிலு
மணிமாளி கைச்சிகரமேல்
மரகதஞ் சிறுபகலி லொளிதயங் கிடவதனை
யிருண்மாலை யுற்றதெனவே
சிலைமதன் சமர்குலவு திருவிரிஞ் சையின்முருக
சிறுதே ருருட்டியருளே
சிவசிதம் பரநடன மிடுதிகம் பரர்குமர
சிறுதே ருருட்டியருளே
103✓
அகநெகிழ்ந் துருகியிரு விழிசலம் பொழியவுன
திருதாள்நு திக்கஅறியேன்
அனுதினங் கலைமறைகள் நெறிநடந் திடல்வழுவி
அதிபாத கத்தைநினைவேன்
இகபரந் தனையறியு மறிவறிந் திடுமுனிவ
ரிடநாடி யுற்றுமருவேன்
எனையுமன் பினர்களுட னடிமைகொண் டருளியெழு
பவவே ரொழிக்குமரசே
மகரகுண் டலமசைய முலைசுமந் திடையசைய
மலைபோலி ருக்குமுலைமேல்
மணிவடங் களுமசைய களபகுங் குமவிரக
மடவார் நிருத்தமிடவாழ்
சிகரமண் டபமருவு திருவிரிஞ் சையின்முருக
சிறுதே ருருட்டியருளே
சிவசிதம் பரநடன மிடுதிகம் பரர்குமர
சிறுதே ருருட்டியருளே.