முருகன் App
திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ்
மார்க்க சகாய தேவர்
தாலப்பருவம்4 / 11
திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ் · மார்க்க சகாய தேவர்

தாலப்பருவம்

24✓
கரியுரி கஞ்சுக மாகப் புலியதன்
கடிகமழ் பட்டாகக்
கனசடை முடிமயிர் முடியா கச்சிவ
கங்கையொர் பங்காகப்
பரிமள மதிகே தகைமட லாகப்
பாம்பிரு குழையாகப்
படுகனல் விழிபொட் டாகச்சூலம்
பாணியில் வாளாகத்
தெரிய விளங்கிய நான்மறை யாகிய
தேசியி லேறிமுனாட்
செட்டி தனக்கு வழித்துணை யாய்வரு
சேவக னுளமகிழத்
தரியல ருடலஞ் சாடிய வேன்முனி
தாலோ தாலேலோ
சரவண பவகர புரியுறை அறுமுக
தாலோ தாலேலோ.
25✓
செங்கையி லிடுவளை கலகல கலெனச்
செம்முலை வடமசையச்
சிலையெனும் நுதன்மட வனிதையர் குடைதரு
தெளிபுனல் நிறைவாவிப்
பங்கய மலரிடை இடையிடு பணிலம்
பவளச் செவ்வானிற்
பலபல முழுமதி நிலவிய வெனதிகழ்
பாலித் திருநாடா
கங்கையும் அரவும் இளஞ்சிறு பிறையுங்
கதிர்விடு கொக்கிறகுங்
கடிகம ழிதழியு மறுகும் எழும்புங்
கனசடை முடிசூடுஞ்
சங்கரர் மகிழ்வொடு தழுவிய பாலக
தாலோ தாலேலோ
சரவண பவகர புரியுறை அறுமுக
தாலோ தாலேலோ.
26✓
களைகளை கடைசியர் முலைகளில் ஒழுகிய
களப நெடுஞ்சேற்றிற்
கனவளை உழவர்கள் உழவென உழுதொளி
கான்றிடு விதையெனவே
விளைவய லிடைவெண் டரளந் தூவிவி
ரிந்தொளிர் தாரகைசூழ்
வேள்குடை யாமதி போலத னூடு
விளங்கிய பானாடா
வளமலை மகளுமை கௌரி புராதனி
மரகத வல்லிகையான்
மார்பி லணைத்தமு தந்தர உண்டு
மகிழ்ந்து வளர்ந்தணியும்
தளையவிழ் நீப முலாவுபு யாசல
தாலோ தாலேலோ
சரவண பவகர புரியுறை அறுமுக
தாலோ தாலேலோ.
27✓
வாவியுள் மேதியி னந்திரை வாரியுள்
மழைசொரி கருமுகில்போல்
வந்து பணிந்திட வாளையொர் கன்றென
மடிமுலை மேன்முட்டத்
தூவிய பான்மல ரோடை நிறைந்தனை
துன்றி வழிந்தோடச்
சோபன மாயுழு மள்ளர்கள் கால்வழி
தோறுமொ துக்கியிடப்
பூவிரை கமழும் பழனத் தலையிற்
புகுதச் சாலியெலாம்
பொன்னிற மாகியெழுந்து வளர்ந்து
பொலிந்தொளி யொடுவானந்
தாவிய பாலிநல் நாடுடை யாதிப
தாலோ தாலேலோ
சரவண பவகர புரியுறை அறுமுக
தாலோ தாலேலோ.
28✓
நிலனெனும் ஒருகுல மடமகள் சிறுபயி
ராயசி றார்களெலாம்
நின்று வருந்தி யிடாமல் முலைப்பால்
நேயமொ டீவதுபோன்
மலைதரு மருவி விரைந்து வரக்குற
வாணரி னங்களெலாம்
மகிழ்வுட னாடுகு றிஞ்சி நிலந்தனில்
வாழ்பசு மாமயிலா
பலபல முனிவர்கள் அடியிணை பரவிப்
பதமுடன் இசைபாடப்
பனிபடு சிறுபிறை ஒளியது மிளிரப்
பகிரதி முடிமீதில்
சலசல வெனநட மிடுமவர் பாலக
தாலோ தாலேலோ
சரவண பவகர புரியுறை அறுமுக
தாலோ தாலேலோ.
29✓
மந்திரம் அறியாய் ஆகமம் அறியாய்
மாமறை நூலறியாய்
வழிபட அறியாய் இன்றுன் பூசை
வழுவா வகைசெயவே
முந்திய காணியை யொற்றிவை என்று
மொழிந்திடு ஞாநியர்தம்
முடிசிறி யோனடி தீண்ட அவன்கை
முன்புதன் முடிதீண்டக்
குந்திய சிறுகால் நோவா ரச்சிவ
கொள்கையர் கொண்டாடக்
கோதறு சீதள நீரபி டேகங்
குறைவற வேபுரியச்
சந்திர மௌலி வளைத்தவர் பாலக
தாலோ தாலேலோ
சரவண பவகர புரியுறை அறுமுக
தாலோ தாலேலோ.
30வேறு✓
செந்தமி ழாமலர் தூவிய வஞ்சமி
லாதத போதனர் சிந்தையொ ராலய
மாகிய சீமானே
செங்கதி ராரமு தூறிய வெண்கதிர்
சூழ்தரு மாமலை செண்டென வேவிளை
யாடிய கோமானே
வெந்தழல் போல்வரு தானவர் செங்கறை
வாரியின் மூழ்கிவெ றுங்குடன் மாலிகை
சூடிய வேலோனே
விஞ்சையர் சேகரர் வாசவன் உம்பர்கள்
மாதவ ரோதிய மென்சிறு வாரிச
மாமிரு தாளோனே
அந்தர மாயுழ லாமலுன் அன்பர்க
ளோடெனை யாளும ருந்துணை யேயமு
தேகனி யேதேனே
அம்புய னாலறி யாமறை யின்பொரு
ளானது காணுமோ வஞ்சன மேயர
சேயடி யார்வாழ்வே
தந்தம தாசல மாமுக வெந்தைக
ணேசரச் கோதர சண்டம யூரகு
ணாசல தாலேலோ
தண்டலை சூழ்கர னூருறை யுங்கும
ராமுரு காசிவ சங்கர னாரருள்
பாலக தாலேலோ.
31✓
அண்டர்க ளூர்குடி யேறவு மண்டிய
சூர்பொடி யாகவு மங்கையி லாழியில்
வேல்விடு மாதூரா
ஐம்புல னாலுழ லாமலும் அந்தக
னார்பிடி யாமலும் அன்றடி யேன்முடி
சூடிய சீர்பாதா
தெண்டிரை வாவியில் வாளையெ ழுந்து
நிலாமதி மேவுசெ ழுங்கமு காடவி
தாவிய பானாடா
செங்கம லாசனி தாழுமை கொங்கையி
லூறிய பாலமு துண்டழ காய்விளை
யாடிய சீராளா
வண்டு முகாரித நாசிகு றிஞ்சிவ
ராளிபூ பாள மகிழ்ந்திசை யாயிவை
ஓதிய தார்மார்பா
மந்தர மோடொரு மால்வரை வெஞ்சமர்
கோலிய தாமென வன்களி றானவை
பாய்மலை வாழ்தேவா
தண்டமி ழோதிய பாவலர் சஞ்சித
வேழ்பவ வேர்களை சண்டம யூரகு
ணாசல தாலேலோ
தண்டலை சூழ்கர னூருறை யுங்கும
ராமுரு காசிவ சங்கர னாரருள்
பாலக தாலேலோ.
32✓
மந்தர மாமுலை மாதர்ம கிழ்ந்துற
வாய்விளை யாடிய மண்டப மேடையின்
மேலொரு தேரோடே
வந்தெழு மாதவ னார்பரி யங்கெழு
வீணையி னோசை மகிழ்ந்திரு வார்குழை
யேறவு நடவாதே
அந்தர மேவிட வாரமு தந்தரு
மாமதி யானத தன்பிற கேவர
வீரிய வேளானோன்
அங்கையில் வாளிகள் தூவிய ருந்தவ
யோகிகண் மீதுந டந்தம ராடிய
பாலிம காநாடா
செந்திரு வேரக மாடர வின்கிரி
ஈசுர மாமலை செங்கழு நீர்மலை
யாடக மூதூரா
செந்தில ணாமலை கூடலு டன்கம
லாலய மேவிய செம்புய மாறுட
னாறுள தாளாளா
சந்திர சேகரி யாயிதி கம்பரி
நாரணி தான்மகிழ் சண்டம யூரகு
ணாசல தாலேலோ
தண்டலை சூழ்கர னூருறை யுங்கும
ராமுரு காசிவ சங்கர னாரருள்
பாலக தாலேலோ
33✓
பங்கய மோவர மோவுரு ஐங்கணை
யோபிணை யோபர வுங்கய லோகடு
வோவடு வோவேலோ
பைங்கமு நீர்மல ரோகரு குங்கட
லோநம னோபல பண்பயில் சேர்சர
மோமத வேள்வாளோ
வெங்கொலை யோகள வோவெனும் வஞ்சிய
ராசையி னாலவர் வெங்கணை யேபுகழ்
வாரொடு கூடாதே
வெண்பொடி பூசியி டாவலு வஞ்சக
மூடர்கண் மேலினி வெண்கவி மாலையெ
னாவது பாடாதே
மங்கல மாகிய நூலறி வுங்குல
மானமும் ஆளவ ரும்பசி யாலடி
யேனிட ராழாதே
வண்கதி ராதவ னார்வெயின் மஞ்சினை
யேநிக ராகிம றைந்திடு வாழ்வெனும்
மாயையில் வீழாதே
சங்கையி லாவினை யேனையுன் அன்பரோ
டாளும னோகர சண்டம யூரகு
ணாசல தாலேலோ
தண்டலை சூழ்கர னூருறை யுங்கும
ராமுரு காசிவ சங்கர னாரருள்
பாலக தாலேலோ.