முருகன் App
திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ்
மார்க்க சகாய தேவர்
சிறுபறைப்பருவம்10 / 11
திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ் · மார்க்க சகாய தேவர்

சிறுபறைப்பருவம்

84✓
சந்தாச லம்பொருவு முலைசுமந் திழையெனத்
தளருமிடை யிந்த்ராணியும்
தடவிகட கரடகவ ளத்தவள வொருநாலு
தந்தவிறன் மாவுமணியும்
ஐந்தாரு வுஞ்சுரபி யும்படைத் திந்திரனு
மம்மனை பெறக்கருணையால்
அங்கைவேல் கோலாக வசுரர்முடி பந்தா
அடித்துவிளை யாடுமரசே
எந்தாயெ னப்பரவு தொண்டர்முடி மீதிலணி
இருபாத மலர்கமழவே
இன்பமட வார்கருங் குழலினுங் காமமுறும்
இளைஞர்தங் கொண்டைகளினும்
செந்தாழை யின்புது மணங்குலவு கரனூர
சிறுபறை முழக்கியருளே
திருமழலை மொழியின்மறை பலபல முழக்குமுனி
சிறுபறை முழக்கியருளே.
85✓
சந்தியினு மந்தியினு முள்ளும் புறம்பினுஞ்
சாகா வரம்பெற்றுமூ
தண்டமுழு துந்தனது பெயர்நிறுவு மிரணியன்
றன்னைநர சிங்கவடிவாய்
வந்துமணி வாசற் படிக்கிடை கிடத்திமணி
மார்புகீண் டொளியுகிரினால்
மணக்குடல் பிடுங்கியுதி ரந்தனை யருந்திய
மாமேக வண்ணன்மருகா
அந்தண ருரைத்தருளு மாகம முழக்கமும்
அமுதமெனு மொழிவனிதைமார்
ஆடலின் முழக்கமும் பாடலின் முழக்கமும்
அடியார்க ளோதியருளும்
செந்தமிழ் முழக்கமுமு ழங்குசுர னூராளி
சிறுபறை முழக்கியருளே
திருமழலை மொழியின்மறை பலபல முழக்குமுனி
சிறுபறை முழக்கியருளே.
86✓
மத்தமத வாரணந் தன்னிழலை மாறென
வளர்ந்துவிசை யிற்பாயமேல்
மண்ணுருவி யரவின்மணி தெரிதரலு மற்றதன்
மருப்பிற் சொரிந்தமுத்தும்
புத்திரவி யுடன்மதிய மொத்தடவி யிருளெலாம்
போகத் துரந்துதிகழப்
பூமகள் முலைக்கணியு மாரவட மெனவருவி
புரளுமலை யாளுமிறைவா
சத்தநிலை வழுவாம லத்தமொரு சற்றுந்
தளர்ந்துவெளி றாமலமுதந்
தழுவுபதி னாறா யிரந்திருப் புகழெனுந்
தமிழ்மாலை சாற்றியுருகிச்
சித்திபெறு மருணகிரி நாதர்புகழ் கரனூர
சிறுபறை முழக்கியருளே
திருமழலை மொழியின்மறை பலபல முழக்குமுனி
சிறுபறை முழக்கியருளே.
87✓
மந்தமா ருதரதமு மந்திமா லைக்களிறு
மாசுக மெனுந்துரகமும்
வளர்மதிக் கவிகையுந் திரைகடற் படகமு
மைக்கோசி லக்காளமும்
கந்தமா மாலையுஞ் சுரிகையும் பெற்றொரு
கரும்பணி சுரும்புசிலைநாண்
கமழுமலர் வாளிகொண் டுலகமே ழும்பொருத
காமமத வேண்மைத்துனா
தந்திவாழ் பழனியங் கிரியினும் வெள்ளிமலை
தன்னிலும் அருணைதனிலும்
சந்ததமு முக்குவளை மலர்மருத் தணியாச்
செருத்தணி திருத்தணியினும்
செந்திமா நகரினும் பயில்குமர கரனூர
சிறுபறை முழக்கியருளே
திருமழலை மொழியின்மறை பலபல முழக்குமுனி
சிறுபறை முழக்கியருளே.
88✓
மலையைப் பிளந்தசுரர் மார்பைப் பிளந்துதிரை
வாரிநீ ருண்டுமகவான்
வாழ்வைப் புரந்தமரர் துன்பந் துரந்துவட
வரைபோல வருதாரகன்
தலையைப் பிளந்துபந் தாடிவே தாளபூ
தங்கள்பசி தன்னைமாற்றிச்
சண்டனணு காமலடி யாரிடர் துணிக்குமொரு
தனிவே லெடுத்தஅரசே
அலையிற் பொலிந்துவரு பாலியினில் வரும்வாளை
ஆயிரம் வலைமீறிலு
றாளைவிழ முட்டிவிளை யாடிவய லோடிமிக
ஆரவா ரித்துமதவேள்
சிலையைத் தடிந்துவந் துலவுகர னூராளி
சிறுபறை முழக்கியருளே
திருமழலை மொழியின்மறை பலபல முழக்குமுனி
சிறுபறை முழக்கியருளே.
89வேறு✓
அதிர்த்திடு குரல்களு நெரித்திடு புருவமு
மழற்பொறி விழிகளுமாய்
அதுக்கிய சிறுபிறை யெயிற்றொளி களுநடை
அதிர்ச்சியு மணியணியாய்
விதிர்த்திடு படைகளு மழைப்புய லுருவமு
மிகுத்துள தலைகளுமாய்
வெளிப்படு மசுரர்கள் சிரக்குவை பலபல
விழப்பொரு மொருசதுரா
பொதுத்தனி வழகுற நடித்தவர் மழுவது
பொறுத்தவர் குறுகலார்வாழ்
புரத்தினை யெரிபட நகைத்தவர் மதனுடல்
புகைத்தவ ரமரர்களால்
முதுக்கொடு விடநுகர் மிடற்றின ரருள்குக
முழக்குக சிறுபறையே
முழுத்தமிழ் தெரிகர புரத்தறு முகமுனி
முழக்குக சிறுபறையே.
90✓
அருக்கனை முறுவலை யுதிர்த்தெழு மதியுட
லரக்கிய வெமனிருதோள்
அறுத்தொரு குயில்கொடி கரித்தலை விழவிழ
வடித்தம ரர்களுடனே
தருக்கொடு மகமது வளர்த்தவன் மணிமுடி
தரித்தவ னகமனையாள்
தரித்திடு குழையற வடித்தடி யவர்வினை
தவிர்த்திடு மவர்துணைவா
நெருப்பெழ விழிகளை விழித்தல கைகள்பல்
நிருத்தம திடுவெழுபார்
நெளித்திட வருநடை படைத்திடு மசுரர்கள்
நிணக்குவை குவைபடவே
முருக்கிய வடியயி லெடுத்தரு ளியகையின்
முழக்குக சிறுபறையே
முழுத்தமிழ் தெரிகர புரத்தறு முகமுனி
முழக்குக சிறுபறையே.
91✓
கருப்புவி லுடையவள் மலர்க்கணை யுடையவள்
கடைக்கணி லருளுடையாள்
கருப்புகு வினையனை யெடுத்தவ ளடியவர்
களித்திட வரமருள்வாள்
அருப்புறு மணிமுலை யுறுத்திட அமலனை
அணைத்தவ ளுலகமெலாம்
அளித்தவ ளுயிர்களை வளர்த்தவள் திரிபுர
மழித்தவள் இடரடையாள்
திருச்சடை மிசைமதி முடித்தவள் பலகலை
தெரித்தவ ளரியறியாள்
சிறப்புள வரமது பெருத்தவ ளிடையது
சிறுத்தவள் நிறையழியாள்
முருக்கித ழமையவ ளளித்தருள் குருபர
முழக்குக சிறுபறையே
முழுத்தமிழ் தெரிகர புரத்தறு முகமுனி
முழக்குக சிறுபறையே.
92✓
இளைத்திடு பவவினை குளித்திடு மடியரை
யெடுத்திடு மொருபுணையாய்
எதிர்த்திடு மசுரர்கள் முடித்தலை யெனுமதி
லிடித்திடு மொருபடையாய்
அளப்பற வயனெழு தெழுத்தெனு மலினம்
அகற்றிடு மொருகலையாய்
அடித்தல நினைபவ ரிரப்பற நவநிதி
யளித்திடு மொருதருவாய்
விளக்கிய வடியயி லிருக்குமி னியவெழில்
விரித்தொளி விடுமுறையாய்
விரைத்தெழு கடுநடை விடைச்சிவ னுமையவள்
விழிக்கணி மதுமலராய்
முளைத்தம ரர்கள்பய மொழித்தரு ளியகையின்
முழக்குக சிறுபறையே
முழுத்தமிழ் தெரிகர புரத்தறு முகமுனி
முழக்குக சிறுபறையே.
93✓
வடித்திடு கணையென மணிக்குழை கறுவிய
மதர்த்திடு மிருவிழியால்
மணத்தொளி பலவிடு மகிற்புகை யிடுமது
மலர்ச்செரு கியகுழலால்
அடிக்கடி விடரறி வினைத்திரு டிகள்கள
வடக்கிய முறுவலினால்
அடற்சிலை மதன்முடி யசைத்திட லதுவென
அசைத்திடு மலைமுலையால்
எடுத்திரு கனதன முனைப்புட னனுதின
மிளைத்திடு கொடியிடையால்
இழுக்குடை மயலினை யளிப்பவர் வசமுறு
மெமக்குள விடர்கெடவே
முடிச்சடை யுடையவ ளளித்தருள் குருபர
முழக்குக சிறுபறையே
முழுத்தமிழ் தெரிகர புரத்தறு முகமுனி
முழக்குக சிறுபறையே.