முருகன் App
திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ்
மார்க்க சகாய தேவர்
வருகைப்பருவம்7 / 11
திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ் · மார்க்க சகாய தேவர்

வருகைப்பருவம்

54✓
செந்தா மரையிற் சிறுசதங்கை சிலம்பக்
குதம்பைக் குழைமின்ன
செம்பொன் னரைஞா ணெகிழ்ந் தொளிரச்
சிகரக்குடுமி யிசைந்தசைய
வந்தா தரவின் மணிவாயான் மழலை
காட்டி மரகதத்தாய்
மடிமீ தேறி முலையுண்டு வளர்ந்து
விரிஞ்சைப் பதிவாழுங்
கந்தா வருக மணங்கமழுங் கடம்பா
வருக வசுரேசர்
காலா வருக பன்னிரண்டு கையா
வருக வழித்துணைவர்
மைந்தா வருக மயிலேறு மன்னா
வருக வடியார்கள்
வாழ்வே வருக தெய்வசிகா மணியே
வருக வருகவே.
55✓
உருகா மனமுஞ் சிவஞான முணரா
வறிவு முனதுபுக
ழோதா நாவு மோதக்கேட் டுவந்தே
யினிய நதிபோலப்
பெருகா விழியு முடையேனைப் பிறவிக்
கடலில் வீழாமற்
பேணி யெடுத்திங் கெனதுள்ளம் பிரியா
விரிஞ்சைப் பதிவாழு
முருகா வருக சதுர்வேத முதல்வா
வருக வினைதீர்க்கு
முனைவா வருக மலராறு முகவா
வருக திருமாலின்
மருகா வருக மயிலேறு மன்னா
வருக வடியார்கள்
வாழ்வே வருக தெய்வசிகா மணியே
வருக வருகவே.
56✓
கண்ணா லுனது திருவடியைக் கண்டா
தரவு பெருகியிரு
கையாற் றொழுதுன் றிருக்கோயில் காலால்
வலஞ்செய் துனதுபுகழ்ப்
பண்ணா லுருகிப் புகழ்ந்துகண்ணீர் பாயா
வெனையுந் தாயாகப்
பரிந்து வளர்க்கும் பெருங்கருணை படைத்து
விரிஞ்சைப் பதிவாழு
மண்ணால் வருக வுலகமுழு தாண்டாய்
வருக கதிதருமெம்
மையா வருக வாறுமுக வப்பா
வருக விளங்குகதிர்
வண்ணா வருக மயிலேறு மன்னா
வருக வடியார்கள்
வாழ்வே வருக தெய்வசிகா மணியே
வருக வருகவே.
57✓
பூந்தா மரையின் மலருழக்கிப் புதுப்பூங்
குவளை நறவருந்திப்
பொய்கைக் கரையி லினிதேறிப் பொழிலிற்
றுயிலு மேதியினங்
காந்தா ரப்பண் ணளிபாடக் கேட்டு
முலையிற் சொரியும்பால்
கரும்புக் கமுகு பெறப்பாயக் கமழும்
விரிஞ்சைப் பதிவாழுஞ்
சேந்தா வருக மரகதத்தின் சிறுவா
வருக குறிஞ்சிநிலத்
தேவா வருக விடரொழிக்குஞ் செல்வா
வருக பசுங்கடம்பின்
மாந்தா தணிந்து மயிலேறு மன்னா
வருக வடியார்கள்
வாழ்வே வருக தெய்வசிகா மணியே
வருக வருகவே.
58✓
தேவே வருக திருவிரிஞ்சைச் சேயே
வருக தெவிட்டாத
தேனே வருக சுவையமுதத் தெளிவே
வருக கதிகொடுக்குங்
கோவே வருக பெருங்கருணைக் கடலே
வருக கலைபொழியுங்
காரே வருக மரகதத்தின் கண்ணே
வருக விண்ணோர்கள்
கோவே வருக பபரியகுணக் குன்றே
வருக வுபதேச
குருவே வருக சிவஞானக் கொழுந்தே
வருக வொருகரத்தின்
மாவே லெடுத்த பரப்பிரம வடிவே
வருக வடியார்கள்
வாழ்வே வருக தெய்வசிகா மணியே
வருக வருகவே.
59வேறு✓
அரிய வடவரையை நிறுவி யெழுமதியை
யடைக லெனவரவு கயிறதா
வமுத மெனமுனிவ ரமர ரரிபிரம
ரசுர ரிவர்கள் கடல்கடையுநா
ளெரியி னுடல்கருக வரியி னுடல்கருக
விரவி யுடல் கருக வுலகெலா
மெரிய வெரிபுகையின் மறைய வளர்திசையி
னிபம தலறிவிழ வரையெலாம்
விரிய வெழுசலதி கமர்கள் படவருணன்
மிகவு மெலியமுகி லுருவுபோல்
விரவி யடர்தலொடு பரவி யெழுகொடிய
விடமு மமுதமென மிசையவே
கரிய மிடறுடைய விமல ரருள்குமர
கரபு ரியின்முருக வருகவே
ககன மெனுமுகடு மதிர நடனமிடு
கலப மயிலிறைவ வருகவே.
60✓
முனிவர் பரவியர கரென வமரர்தொழ
முயலன் முதுகுநெற நெறெனவே
முடியி லிளமதியு நதியு மசையமறை
முரல முழுதுமுடல் புளகமாய்
இனிய வரவுபுலி பணிய வடியர்மன
மிளகி விழிகண்மழை பொழியவே
யிரவி லழகுபெற நடன முடுகியிடு
மிறைவ ரருள்குமர வருகவே
புனித வமுதமெனு நதியில் வருகயல்கள்
புடையி லுழுமுழவர் வெருளவே
புதிய கதலிகனி யுதிர வெழவுழுத
புழுதி தனிலொழுகு மதுவினாற்
கனியு மளறுபடு பழன முடையசிவ
கரபு ரியின்முருக வருகவே
ககன மெனுமுகடு மதிர நடனமிடு
கலப மயிலிறைவ வருகவே.
61✓
பழைய வரவின்முது கொடிய நடனமது
பயில விரணியனை முனியவேழ்
படியை மலரடியி னளவு செயவமரர்
பசிய கலவமுது கடையவான்
மழையை யொருமலையின் மறைவு செயவிடையர்
மனையி லளைதிருடி வலுமையான்
மருது பொரவலகை முலையி னமுதுகொள
வலவன் மகிழ்மருக வருகவே
உழவ ருழுதுபயிர் முழுது மிடநறவ
மொழுகு குவளையெனு மலரின்மேல்
உலவி மதுரவிசை முரலு மளிகள்பெற
உதவி யிடுவதென வயலில்வாழ்
கழையின் விழுதரள மதியி னிலவுதரு
கரபு ரியின்முருக வருகவே
ககன மெனுமுகடு மதிர நடனமிடு
கலப மயிலிறைவ வருகவே.
62✓
அரையில் வடமசைய அழகு பெறுகுடுமி
யசைய வுமைமகிழ வருகவே
யலர்கொள் சரணவணி கலக லெனமழலை
யமுத மொழுகியிட வருகவே
இரையு முததியது சுவற அயிலைவிடு
மிளமை யிடுகுமரன் வருகவே
இனிய கவிதைகொடு நினது புகழ்பரவி
யெமது வினைகள்கெட வருகவே
வரைகொ ளரவமுயன் முசுவொ டிருளிமரை
வருடை கரடிகலை கவரிமான்
வழுவை யுழுவையரி மறவர் குறவ..தின
மருவு மலைகிழவ வருகவே
கரையி னதியினலை பொருது தரளமெறி
கரபு ரியின்முருக வருகவே
ககன மெனுமுகடு மதிர நடனமிடு
கலப மயிலிறைவ வருகவே.
63✓
அனகை யருள்பொழியும் விமலை யழகொழுகும்
அமலை யருள்குமர வருகவே
அசுரர் மகுடமணி சிதற வயில்விசிறும்
அறுமு கவவருக வருகவே
பனக மவுலியரன் மகிழ மறையிறுதி
பகரு மணியதர வருகவே
பரவி யெழுமுனிவர் பணியு மொளியுடைய
பவள விருசரண வருகவே
மனமு மொருமைபெற விழிக ளருவியென
வழிய வுளமுருக வருகவே
மறலி தொடர்புகெட வெனையு னடியரொடு
மருவி யிடவருள வருகவே
கனக மதிலருண கிரண மெனநிலவு
கரபு ரியின்முருக வருகவே
ககன மெனுமுகடு மதிர நடனமிடு
கலப மயிலிறைவ வருகவே.