முருகன் App
திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ்
மார்க்க சகாய தேவர்
சிற்றிற்பருவம்9 / 11
திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ் · மார்க்க சகாய தேவர்

சிற்றிற்பருவம்

74✓
வேதன் முடியிற் படுங்கமலம்
விண்ணோர் சிரத்தி லணிபதுமம்
விசய மயின்மே லெழுமுளரி
விமலர் புயஞ்சேர் திருக்கஞ்சம்
சாத மொழிக்கு மம்புயமெந்
தலைமே லிருக்கும் புதுநளினம்
தண்டை சதங்கை கிங்கிணிசேர்
சலசம் புவியிற் படலாமோ
காதம் புதிய மணங்கமழுங்
கடம்பா முருகா கதிர்வேலா
கந்தா குமரா பெருங்கருணைக்
கண்ணா வண்ணா கதியருளை
யாதண் களப மணிமார்பா
அடியேஞ் சிற்றி லழியேலே
அரசே விரிஞ்சைப் பதிவாழ்வே
அடியேஞ் சிற்றி லழியேலே.
75✓
வங்கத் தரங்கக் கடலன்று
மாயக் கிரவுஞ்ச கிரியன்று
வானத் துயரு மாவன்று
மருவா ருறையும் பதியன்று
துங்கத் தசுரர் முடியன்று
தொலையா வமரர் சிறையன்று
துரகக் கொடுமா முகியன்று
தொழுவார் பிறவித் துயரன்று
சங்கத் தவனு மலரோனுந்
தவளா சலத்தில் வருவோனும்
சரணஞ் சரண மெனும்பதிய
தண்டை முழங்குஞ் சிறுதாளால்
அங்கைக் கதிர்வே லுடையோனே
அடியேஞ் சிற்றி லழியேலே
அரசே விரிஞ்சைப் பதிவாழ்வே
அடியேஞ் சிற்றி லழியேலே.
76✓
பூத்தே யுலகம் புரப்பாளைப்
பொய்யர் தமக்குக் கரப்பாளைப்
பொழியுங் கருணை விழியாளைப்
பொற்புங் கற்பு மழியாளைக்
கூத்தை யுடையா னிடத்தாளைக்
குவிமா முலைமேல் வடத்தாளைக்
குறையா வெண்ணெண் கலையாளைக்
குளிர்சே ரிமய மலையாளை
மாத்தே வருக்குந் தெளியாளை
வணங்கு மடியார்க் கெளியாளை
வரையைச் சிலையா வளைத்தாளை
மறைக்கு முதலாய் முளைத்தாளை
ஆத்தே ஆத்தே யெனுங் குமரா
அடியேஞ் சிற்றி லழியேலே
அரசே விரிஞ்சைப் பதிவாழ்வே
அடியேஞ் சிற்றி லழியேலே.
77✓
பொய்யா வுளத்தி லிருப்பாரைப்
பொலியுங் கயிலைப் பொருப்பாரைப்
பொருமா கரியை யுரிப்பாரைப்
புரமூன் றெரிய வெரிப்பாரைக்
கையார் மறிமான் மழுவாரைக்
கமலா லயன்மால் தொழுவாரைக்
கனக சபையில் நடிப்பாரைக்
கங்கை முடியின் முடிப்பாரை
மையார் மலத்தை யொழிப்பாரை
மதவே ளெரிய விழிப்பாரை
மறலி நடுங்கப் பொருவாரை
வழிக்குத் துணையா வருவாரை
ஐயா வையா வெனுங் குமரா
அடியேஞ் சிற்றி லழியேலே
அரசே விரிஞ்சைப் பதிவாழ்வே
அடியேஞ் சிற்றி லழியேலே.
78✓
இம்மா நிலத்தை யளந்தானை
இகன்மா மருதம் பிளந்தானை
இலங்கா புரியைக் கெடுத்தானை
இமையோர்க் கமிர்தங் கொடுத்தானைக்
கைம்மா விடுக்கண் களைந்தானைக்
ககன மளவா வளர்ந்தானைக்
கன்றால் விளவை யெறிந்தானைக்
கருதா ருளத்திற் பிரிந்தானை
மைம்மா சுணத்தில் நடித்தானை
வருபா ரதத்தை முடித்தானை
வைய மனைத்தும் அயின்றானை
வடத்தி னிலையில் துயின்றானை
அம்மா னம்மா னெனுங் குமரா
அடியேஞ் சிற்றி லழியேலே
அரசே விரிஞ்சைப் பதிவாழ்வே
அடியேஞ் சிற்றி லழியேலே.
79வேறு✓
பசுமை மலர்த்தட நளின மளித்திரள்
படிவ வனற்சொரி கரிபோலே
பதும நிறத்தினை யறுபத முற்றுடல்
பவள மெனத்திகழ் வயலூடே
கசியு மதுப்பொழி குவளை களைச்சில
களைக ளெனக்களை மடமானார்
கரகம லத்தினில் வளையொலி சித்தசர்
கலைக ளுரைத்தருள் கரனூரா
நிசியி னிருட்கண மெனுமுரு வத்தொடு
நிலவி னெயிற்றொடு முயர்வான்மேல்
நிலவிய செக்கரை யனைய மயிர்த்தலை
நிரையொடு முக்கிர முடனேசூழ்
அசுரரை வெட்டிய வயிலுள கைத்தல
அடியவர் சிற்றிலை யழியேலே
அழகொழு கப்புழு கொழுகிய பொற்புய
அடியவர் சிற்றிலை யழியேலே.
80✓
முதல்வ ரிணைப்பத மலர்கொ டரக்கிய
முனிவைநி னைத்தின மலையாதே
மொழிதி யெனக்கழல் செறியு மலர்ப்பத
முளரி தனைப்பணி குதல்போலே
கதிர்மணி யிட்டிழை கனகம திற்றிகழ்
கனவிட பத்தினை யடியூடே
ககனமு கட்டினி லிருளைய கற்றிய
கலைமதி யுற்றெழு கரனூரா
ததிபரு கச்சுதர் மலரி லிருப்பவர்
சனக ரகத்தியர் புலவோர்மா
தவர்கள் வசிட்டரொ டடியர் துதித்திரு
சரணம் விருப்பொடு தொழுவேதான்
அதிமது ரத்துடன் மறைசொலு முத்தம
அடியவர் சிற்றிலை யழியேலே
அழகொழு கப்புழு கொழுகிய பொற்புய
அடியவர் சிற்றிலை யழியேலே.
81✓
மழையுரு வத்திரு வுருவு படைத்தவன்
மலரவ னுற்றிடு மிடமோவார்
மதலை தனக்குயர் முடியை வளைத்தருள்
வரதர் வழிக்கொரு துணையாவோர்
கழல்தொழு தற்கவர் வருபொழு துற்றிடு
களையக லப்பயி லுதல்போலே
கரிய மணிக்கிர ணமுமதி லிற்கன
கமுமரு வித்திகழ் கரனூரா
பழநி திருத்தணி யருணை யிடைக்கழி
பழமுதிர் பொற்கிரி யலைவாயோர்
பணிமலை சற்குரு மலையொடு பற்பல
பனிமலை யுச்சியி லுறைவோனே
அழலொளி கக்கிய அயிலுள கைத்தல
அடியவர் சிற்றிலை யழியேலே
அழகொழு கப்புழு கொழுகிய பொற்புய
அடியவர் சிற்றிலை யழியேலே.
82✓
இரவி ரதத்துள புரவி கடத்தளி
யிடவுயர் பொற்றிரு மதின்மேலே
எழுதிய சித்திர விடப மணிக்கொடி
இமையவர் கற்பக மலரூடே
பொரவத னிற்பரி மளநற வத்துளி
புயலுல கத்தருள் மழைபோலே
பொழிய வயற்றிகழ் பயிர்கள் தழைத்தெழு
புகழை விளக்கிய கரனூரா
வரமரு ளித்தன தடியவ ருச்சியின்
மலரடி வைத்ததி மதமாறா
மருவலர் முப்புர மெரிய நகைத்தடன்
மதனை யெரித்தவவ் வரையாளும்
அரன்மகி ழப்பொரு ளுரைசெயு முத்தம
அடியவர் சிற்றிலை யழியேலே
அழகொழு கப்புழு கொழுகிய பொற்புய
அடியவர் சிற்றிலை யழியேலே.
83✓
மழலை தனிற்சிவ மறைகள் முழக்கியு
மணியை முழக்கியு மணிவாயால்
வயிரை முழக்கியு மொரகுழல் பற்றியு
மகிழ்பறை கொட்டியு மணியாலே
இழைய மலர்ப்பத நடன மியற்றியும்
இசைகள் பயிற்றியு மகிழ்நானா
இரத மெனக்குல வரையை நடத்தியும்
இறைவர் களிப்பது பெறவேழ்பார்
முழுது மடிக்கடி யுலவியு மைக்குல
முதலை நடத்தியு மருவார்மேல்
பனியு மருப்பிரு பிறைநிகர் கைக்கய
முனியை நடத்தியும் விளையாடி
அழகிய பொற்கர புரியுறை யுத்தம
அடியவர் சிற்றிலை யழியேலே
அழகொழு கப்புழு கொழுகிய பொற்புய
அடியவர் சிற்றிலை யழியேலே.