வைத்தீசுவரன்கோவில் முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
குமரகுருபர அடிகள்
அம்புலிப்பருவம்8 / 11
வைத்தீசுவரன்கோவில் முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் · குமரகுருபர அடிகள்
அம்புலிப்பருவம்
61✓
மண்டலம் போற்றுருவம் அமுதமய மாய்மழு
மதிக்கடவு ளெனவருதலால்
வானாறு தலைமடுக் கப்பொங்கும் ஆனந்த
மாக்கடல் இடைத்தோன்றலால்
தண்டலில் கொடிச்சிவாய்க் குமுதம்விள் ளக்கரத்
தாமரை முகிழ்த்திடுதலால்
சகலபுவ னத்திலும் உயிர்ப்பயிர் தழைப்பநல்
தண்ணளி சுரந்திடுதலால்
துண்டமதி நதியொடு பொதிந்தவே ணிப்பரஞ்
சோதிகட் பொறியாதலால்
தோன்றலிவன் நின்னையொத் துளனால் நினக்குமொரு
துணையிவன் போலில்லைகாண்
அண்டரண் டத்தொடகி லாண்டம் படைத்தவனொ
டம்புலீ ஆடவாவே
அழகுபொலி கந்தபுரி தழையவரு கந்தனுடன்
அம்புலீ ஆடவாவே.
62✓
சொற்றரு பெரும்புலவர் கலையமுது கொளவிருந்
தோகைமேல் கொண்டருளினாய்
தோற்றிமுன் பொங்கிமலை போலஅலை மோதுமச்
சோதிவே லையுமுகந்தாய்
குற்றமில் குணத்தைக் குறித்தஇர வலர்முகம்
கோடா தளித்தல் செய்தாய்
கோகனக நாயகன் வரக்கூ விடுங்குக்
குடங்கொடிய தாகவைத்தாய்
உற்றிடும் இதழ்க்குமுதம் விண்டுதண் தேனொழுக
ஒளிநிலா நகைமுகிழ்த்தாய்
உன்செய்கை யெம்பிரான் தன்செய்கை போலுமால்
உனையுமிவ னொவ்வாதிரான்
அற்பொதி களத்தவன் அளித்தகும ரேசனுடன்
அம்புலீ ஆடவாவே
அழகுபொலி கந்தபுரி தழையவரு கந்தனுடன்
அம்புலீ ஆடவாவே.
63✓
கங்கைமுடி யடிகட்கொர் கண்ணா யிருத்தியக்
கண்ணினுள் மணியிவன்காண்
கலைகள்சில நிறைதிபின் குறைதியிவ னென்றுமொண்
கலைமுழுதும் நிறையநின்றான்
எங்குமிர வோனெனத் திரிதியிவன் அடியவர்
எவர்க்கும்இர வினையொழித்தான்
இருநிலத் தங்குரிக் கும்பயிர் வளர்த்தியிவன்
எவ்வுயிரும் வாழச்செய்தான்
பொங்கமுதம் அமுதா சனர்க்குதவி னாயிவன்
புத்திமுத் தியுமளித்தான்
புவனம் படைத்த இவன் நின்னின் மிக்கானெனப்
புகல்வதோர் பொருளன்றுகாண்
அங்கண்மறை யோலிட் டரற்றநின் றவனுடன்
அம்புலீ ஆடவாவே
அழகுபொலி கந்தபுரி தழையவரு கந்தனுடன்
அம்புலீ ஆடவாவே.
64✓
பாயிருட் போதத் திருட்டன்றி அகவிருட்
படலங் கிழிப்பதுணராய்
பனிவிசும் பிற்பொலிவ தொன்றலாற் புவனப்
பரப்பெலாம் பொலிவதோராய்
சேயிதழ்க் குமுதந் திறப்பதல் லாலுளத்
திருமலர் திறக்க அறியாய்
சிறைவிரி சகோரப்பு ளன்றியெவ் வுயிரும்
திளைத்தின்பம் ஆரச்செயாய்
நீயிவற் கொப்பன்மை செப்புவதென் இப்பரிசில்
நின்பெருந் தவமென் சொல்கேன்
நெடியவன் முதல்தேவர் குறுகிநிற் பவுமுனை
நினைத்தழைத் தருளினன்காண்
ஆயிர மறைக்குமொரு பொருளா யிருப்பவனொ
டம்புலீ ஆடவாவே
அழகுபொலி கந்தபுரி தழையவரு கந்தனுடன்
அம்புலீ ஆடவாவே.
65✓
தருமன்னு பொன்னுலகும் மண்ணுலகு மொக்கத்
தலைத்தலை மயங்கத்தொகும்
சந்நிதி யடைந்தவர்கள் பையுள்நோய் முற்றும்
தவிர்ந்தக மகிழ்ந்துதவிராக்
கருமன்னும் ஊழிப் பெரும்பிணியு மாற்றிடுதல்
கண்டனை இருத்தியால்நின்
கயரோக முடன்முயற் கரையுந் துடைத்திடக்
கருதிடுதி யேலெம்பிரான்
திருமுன்னர் அள்ளியிடு வெண்சாந்தும் மற்றைத்
திருச்சாந்தும் நிற்கவற்றாச்
சித்தாமிர்த் தத்தடத் தீர்த்தத் துறைக்குறுந்
திவலையொன் றேஅமையுமால்
அருவென்ன உருவென்ன அன்றென்ன நின்றவனொ
டம்பிலீ ஆடவாவே
அழகுபொலி கந்தபுரி தழையவரு கந்தனுடன்
அம்புலீ ஆடவாவே.
66✓
ஒழியாத புவனத் துயிர்க்குயிர தாய்நிற்ப
தொருதெய்வம் உண்டெனவெடுத்
துரையால் உணர்த்துவதை யொழியஎவ ரெவர்க்கும்
ஊன்கண் உளக்கண்ணதாம்
விழியாக முன்னின்று தண்ணளி சுரந்தவர்கள்
வேண்டிய வரங்கொடுப்பான்
மெய்கண்ட தெய்வம்இத் தெய்வமல் லாற்புவியில்
வேறில்லை யென்றுணர்தியாற்
பொழியாத புயல்தங்கு புவனமுந் திசைமுகப்
புத்தேள் பெரும்புவனமும்
பொன்னுலகும் மண்ணுலகும் எவ்வுலகு வேண்டினும்
பொருளன் றிவற்குமற்ற
அழியாத வீடும் தரக்கடவன் இவனுடன்
அம்புலீ ஆடவாவே
அழகுபொலி கந்தபுரி தழையவரு கந்தனுடன்
அம்புலீ ஆடவாவே.
67✓
நெட்டுடற் பைங்கட் கரும்பேய்கள் செம்மயிர்
நிரைத்தூணம் வீக்கிஆர்த்து
நிற்குங் குறட்பூத மொன்றினை விடுத்துடலின்
நெடியபழு என்புநெரியக்
கட்டெனப் பிடியெனக் கொடிறுடைத் தடியெனக்
கணநாதர் கடுகமுடுகிக்
கடல்வாய் திறந்தெனப் பிலவாய் திறந்தலறு
காட்சிநீ காணாயலை
மட்டுடைத் தூறுந் தடங்கமலன் முதலியோர்
வாய்புதைத் தஞ்சிநிற்ப
வருகென் றழைத்திடவும் வாரா திருத்தியால்
மற்றிவன் முனிந்தாலுனக்
கட்டதிக் கினிலுமொரு திக்கிலையெம் ஐயனுடன்
அம்புலீ ஆடவாவே
அழகுபொலி கந்தபுரி தழையவரு கந்தனுடன்
அம்புலீ ஆடவாவே.
68✓
குன்றைத் திறந்திட்ட குடுமிவேல் சூர்உயிர்
குடித்திட விடுத்துநின்றான்
குண்டிகைக் கள்வனைக் குடுமித் தலைப்பசுங்
குருதிபொங் கப்புடைத்தான்
இன்றைக் குழந்தையென் றெண்ணாது குலிசன்முதல்
எண்மரும் பிறருமொருஞான்
றெதிர்நின்றுடற்றியவர் பட்டபா டறியா
திருத்தியலை அதுகிடக்க
முன்றக்கன் வேள்விக் களங்கொலைக் களமென்ன
முடிவமரர் மொத்துண்டநாள்
முழுமதிக் கடவுள்நீ அவமதிப் புண்டதை
மொழிந்திடக் கடவதன்றால்
அன்றைக் கணக்கின்றும் வந்திருக் கின்றதினி
அம்புலீ ஆடவாவே
அழகுபொலி கந்தபுரி தழையவரு கந்தனுடன்
அம்புலீ ஆடவாவே.
69✓
தள்ளும் பவக்கடல் உழக்கும்எனை முத்தித்
தடங்கரை விடுப்பவனுனைத்
தலையளிப் பான்வர வழைப்பவும் வராவிடில்
தண்ணளி சுரந்துகருணை
வெள்ளம் கொழிக்கும் கடைக்கண் சிவப்பஇவன்
வெகுளாது விடினும் அமுது
விழிசிவப் பக்காணில் இரவிபகை சாய்த்தஇள
வீரன் பொறுப்பான் அலன்
கள்ளம் பழுத்தகட் கடைசியர் சிறார்திரைக்
காவிரித் தண்துறைதொறும்
கதிர்நித் திலங்குவி மணற்குன்ற மேறியக்
கலைமதிக் கலசவமுதை
அள்ளும் தடம்பணைச் சோணாடன் இவனுடன்
அம்புலீ ஆடவாவே
அழகுபொலி கந்தபுரி தழையவரு கந்தனுடன்
அம்புலீ ஆடவாவே.
70✓
தன்னொத்த தெய்வச் சிறாருமில வீரரும்
தாள்நிழற் கீழ்நிற்பஇச்
சகதண்ட மண்டல அடுக்கிழியு நாள் அமரர்
தமைஅழக் காண்பவன்இவன்
நின்னைப் பொருட்படுத் தொருவிரற் றலைசுட்டி
நீள்கழற் றாள்உதைந்து
நெடுமலர்க் கண்பிசைந் தழுதழு தழைத்தனன்
நினக்கிதில் வியப்பில்லைகாண்
பின்னல் திரைச்சுர நதித்தண் துறைத்தேவர்
பேதைக் குழாங்களென்னப்
பெருகுந் தடம்புனற் காவிரிப் பூவிரி
பெருந்தண் துறைச்சிறைவிரித்
தன்னக் குழாந்திளைத் தாடுசோ ணாடனுடன்
அம்புலீ ஆடவாவே
அழகுபொலி கந்தபுரி தழையவரு கந்தனுடன்
அம்புலீ ஆடவாவே.