முருகன் App
வைத்தீசுவரன்கோவில் முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
குமரகுருபர அடிகள்
சிற்றிற்பருவம்9 / 11
வைத்தீசுவரன்கோவில் முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் · குமரகுருபர அடிகள்

சிற்றிற்பருவம்

71✓
குறுமென் னடையும் நெடுவெணிலாக்
கோட்டு நகையும் வாள்தடங்கண்
குளிரமுகந்துண் டொளிர்சுட்டிக்
குஞ்சி திருத்தி நறுங்குதலை
முறுகு நறைத்தேன் கனிபவள
முத்துண் டுச்சி மோந்துகொண்டுன்
முகமுந் துடைத்து விளையாட
முன்றிற் புறத்துப் பொன்ததும்பி
இறுகும் புளகக் கும்பமுலை
எம்பி ராட்டிவிடுத்ததுமற்
றிளையார் மறுக மறுகுதொறும்
இடுக்கண் செயற்கோ எந்தாய் நின்
சிறுகிண் கிணிச்செஞ் சீறடியாற்
சிறியேம் சிற்றில் சிதையேலே
செந்நெற் பழனப் புள்ளூரா
சிறியேம் சிற்றில் சிதையேலே.
72✓
கொழுநாண் மலர்க்கற் பகமும்நறைக்
குரவு நாறு நறுங்குஞ்சிக்
கோமான் மகனே நங்கள்குலக்
கொழுந்தே யென்று குறையிரந்து
தொழுவா னவர்தம் முடிசூட்டும்
சோதி முடியில் துகளெழநின்
துணைத்தாள் வண்டல் துறைப்புழுதித்
தூளி படினும் படுகசுடர்க்
கழுவா மணியும் நிலவுவிரி
கதிர்நித் திலமும் உமையம்மை
கண்ணில் உறுத்த அடிகேள்நின்
காலில் உறுத்தல் கடனன்றால்
செழுநான் மறையின் பெருஞ்செல்வச்
செருக்கே சிற்றில் சிதையேலே
செந்நெற் பழனப் புள்ளூரா
சிறியேம் சிற்றில் சிதையேலே.
73✓
வழிக்குப் புறம்பா யாம் இழைத்த
வண்டல் மனையெவ் வசுரேசன்
வான்கூட் டுண்பான் நடுக்கடலில்
வகுத்த நகரன் றிகழாமே
கொழிக்கும் சிறுமுற் றிலில்வாரிக்
கொடுவந் தடியேம் மனைமுன்றிற்
குவியா நின்ற மணிக்குவைஅக்
குருகு பெயர்க் குன் றமும்அன்றாற்
சுழிக்குண் டகழி வாய்மடுப்பச்
சுடர்வால் வளைத்தெண் திரைக்கரத்தாற்
சுரபி சொரிபால் மடையடைத்த
சோற்றி னோடுங் கலந்துராட்டிச்
செழிக்குந் தடங்கா விரிநாடா
சிறியேம் சிற்றில் சிதையேலே
செந்நெற் பழனப் புள்ளூரா
சிறியேம் சிற்றில் சிதையேலே.
74✓
மூரிக் களிறோ மழவிடையோ
முடுகிற் றெனப்பார்த் துழிஉனது
முகத்தின் அழகெம் வடிக்கண்ணால்
மொண்டுண் டனம்யாம் எனவுமிகப்
பாரித் தோங்கிப் பூரித்த
பைம்பொற் புயத்தைக் கண்ணேறு
பட்டேம் எனவும் அடிகள்பகை
பாராட் டுவதோர் பண்பன்றால்
வேரிக் கொழுந்தாற் றிளம்பாளை
விரிபூங் கமுகும் பால்பாயும்
வேழக் கரும்பும் இருட்பிழம்பை
விழுங்கிக் கக்குஞ் சுடர்ப்பருதித்
தேருக் கெழில்செய் சோணாடா
சிறியேம் சிற்றில் சிதையேலே
செந்நெற் பழனப் புள்ளூரா
சிறியேம் சிற்றில் சிதையேலே.
75✓
பொன்னம் கொடிபோல் நுடங்குமிடைப்
புத்தேள் மகளிர் விளையாடப்
புனைமா ளிகையும் சூளிகையும்
புதுக்கிக் கொடுத்தாய் பொதுஞானம்
மெய்ந்நின் றவர்உள் விழிப்பாவை
விளையாட் டயர அழியாத
வீடுங் கொடுத்தாய் எம்மனையும்
விடுத்துச் சென்றால் மிகையுண்டோ
பின்னும் திரைத்தீம் புனற்கங்கைப்
பேராற் றூற்று நறைக்கோட்டுப்
பெருங்கற் பகத்தின் கழுத்தொடியப்
பிறழும் வாளைப் பகடுதைத்த
தென்னம் பழம்வீழ் சோணாடா
சிறியேம் சிற்றில் சிதையேலே
செந்நெற் பழனப் புள்ளூரா
சிறியேம் சிற்றில் சிதையேலே.
76✓
கானக் குறப்பெண் குடியிருந்த
கன்னிப் புனத்துத் தினைமாவும்
கமழ்தேன் தெளிவும் உண்டுசுவை
கண்டா யென்றேம் அதுவல்லால்
மீனத் தடங்கண் அவள்மிச்சில்
மிசைந்திட் டதுவும் நசைமிக்கு
விரைத்தீங் குமுதத் தமுதடிகள்
விருந்தா டியதும் விண்டோமோ
கூனற் பிறையின் கோடுரிஞ்சும்
கொடிமா டத்து வெயில்விரிக்கும்
குருமா மணியால் சுரநதியிற்
கொழுந்தா மரைகள் முறுக்குடைந்து
தேனக் கலரும் சோணாடா
சிறியேம் சிற்றில் சிதையேலே
செந்நெற் பழனப் புள்ளூரா
சிறியேம் சிற்றில் சிதையேலே.
77✓
பிள்ளை மதிச்செஞ் சடைச்செருகும்
பெருமா னார்க்கும் உலகேழும்
பெற்ற தாய்க்கும் நீ அருமைப்
பிள்ளை யெனிலெம் பேராய
வெள்ளம் அமைத்த சிறுசோறு
வேண்டின் இடுகேம் அலதெளியேம்
விளையா டிடத்துச் சிறுகுறும்பு
விளைத்தாற் பொறுக்க விதியுண்டோ
கள்ள விழிச்சூர் அரமகளிர்
காமன் கொடியேற் றெனவியப்பக்
கற்ப தருவிற் படர்ந்தேறு
காமர் கொடிச்செங் கயல்பாயும்
தெள்ளு புனற்கா விரிநாடா
சிறியேம் சிற்றில் சிதையேலே
செந்நெற் பழனப் புள்ளூரா
சிறியேம் சிற்றில் சிதையேலே.
78✓
மடல்வாய் அவிழ்ந்த குழற்பேதை
யொருத்தி திருத்தும் பகிரண்ட
மணற்சிற் றிலையோர் கணத்தின்கண்
மட்டித் தாடு மைந்தன் அருள்
விடலாய் தமியேம் சிற்றில்முற்றும்
விளையாட் டாக ஒருநீயும்
வீட்டா நிற்பத் தொடங்கினையால்
வித்தும் முளையும் வேறன்றே
கடமா மருப்பும் சுடர்மணியும்
கதிர்நித் திலமும் மகளிர்முலைக்
களபத் தொடுகுங் குமச்சேறும்
கரைத்து விடுத்தக் கடற்குட்டம்
திடராச் செயுங்கா விரிநாடா
சிறியேம் சிற்றில் சிதையேலே
செந்நெற் பழனப் புள்ளூரா
சிறியேம் சிற்றில் சிதையேலே.
79✓
வாமாண் கலைப்பேர் அகல் அல்குல்
மடமான் நோக்கின் அரமகளிர்
மகிழ்பூத் திருப்பப் புத்தேட்கு
வந்த இடுக்கண் மாற்றினையால்
கோமான் நினக்கப் பெருந்தேவர்
குலமே யன்றி அடியேமும்
குற்றே வலுக்காம் அகம்படிமைக்
குடியாக் கொண்டாற் குறையுண்டோ
காய்மாண் குலைச்செவ் விளநீரைக்
கடவுட்சாதி மடநல்லார்
கதிர்ப்பூண் முலையென் றேக்கறப்பைங்
கமுகு நகைவால் முத்தரும்பும்
தேமாம் பொழில்தீம் புனல்நாடா
சிறியேம் சிற்றில் சிதையேலே
செந்நெற் பழனப் புள்ளூரா
சிறியேம் சிற்றில் சிதையேலே.
80✓
கருவீற் றிருந்த பெருங்கருணை
கடைக்கண் பொழிய வீற்றிருக்கும்
கடவுள் நீயே பகிரண்டம்
கண்டா யெனின்வண் டடைகிடப்ப
மருவீற் றிருந்த குழல்மகளிர்
வண்டல் துறைக்கு மணற்சிற்றில்
மனைகோ லுவது மற்றடிகேள்
வகுக்கும் தொழிற்கு மாறன்றே
குருவீற் றிருந்த மணிமாடக்
கொடிமா நகரம் தொறுமலர்ந்த
கொழுந்தா மரைப்பூங் கோயிலிற்பல்
கோடி உருவங் கொண்டுசெழுந்
திருவீற் றிருந்த சோணாடா
சிறியேம் சிற்றில் சிதையேலே
செந்நெற் பழனப் புள்ளூரா
சிறியேம் சிற்றில் சிதையேலே.