முருகன் App
வைத்தீசுவரன்கோவில் முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
குமரகுருபர அடிகள்
முத்தப்பருவம்6 / 11
வைத்தீசுவரன்கோவில் முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் · குமரகுருபர அடிகள்

முத்தப்பருவம்

41✓
குருகு நாறு செந்தளிர்க்கைக்
கொடிநுண் நுசுப்பிற் கோட்டிமயக்
குலப்பூங் கொம்பு நறவுழத்த
கொழுந்தா மரையோ டவிழ்ந்த துழாய்ச்
சருகு நாறு முடைத்தலையின்
தாம நாறு திரள்திண்தோள்
தாதை யாருங் கண்டுகண்டு
தடங்கண் களிப்பக் குரவுவிரிந்
தருகு நாறு திருமேனி
அந்தீங் குதலை மழலைகனிந்
தமுதம் ஊறு பசுந்தேறல்
அசும்பு நாறத் தெய்வமண
முருகு நாறுஞ் செங்கனிவாய்
முத்தந் தருக முத்தமே
மும்மைத் தமிழ்தேர் கந்தபுரி
முருகா முத்தந் தருகவே.
42✓
நறவு விரிந்த விரைத்தோட்டு
நளினத் தொட்டில் தடமுலைப்பால்
நல்கி வளர்த்த கைத்தாயர்
நகைவாள் முகத்தும் மார்பகத்தும்
குறுமெல் நடைய சிறுபசுங்கால்
குருதி ததும்ப உதைந்துசில
குறும்பு செயத்தாள் நோமெனமென்
கோல்கொண் டோச்சப் பெரும்புவனம்
நிறுவு மொருநின் பெருந்தன்மை
நினைந்தாய் போலக் கனிந்தமுது
நெக்குப் பசுந்தேன் அசும்புற
நெடுவெண் ணிலவு விரிந்தகுறு
முறுவல் அரும்புஞ் செங்கனிவாய்
முத்தம் தருக முத்தமே
மும்மைத் தமிழ்தேர் கந்தபுரி
முருகா முத்தம் தருகவே.
43✓
பொழியுங் கருணைப் பெருவெள்ளப்
புணரி பெருகி அலையெறியப்
பொங்கி யெழுந்த பெருங்காதற்
புளகம் போர்ப்பப் போதுசெயும்
விழியும் மனமுங் குளிர் தூங்க
விரிநீர்ச் சடிலத் தொருவன்இரு
வீணைக் குதவுந் திருச்செவிகள்
விருந்தாட் டயர விரைகொழித்து
வழியுங் கொழுந்தேன் பிழிந்திட்டு
மதுர அமுது குழைத்தூற்றும்
மழலை ததும்பப் பழமறையை
வடித்துத் தெளித்த வார்த்தையொன்று
மொழியும் பவளச் செங்கனிவாய்
முத்தந் தருக முத்தமே
மும்மைத் தமிழ்தேர் கந்தபுரி
முருகா முத்தந் தருகவே.
44✓
கலைப்பால் நிறைந்த முதுகுறைவிற்
கல்விச் செல்வர் கேள்விநலங்
கனியக் கனிய அமுதூறும்
கடவுள் மறையும் முதற்சங்கத்
தலைப்பா வலர்தீஞ் சுவைக்கனியும்
தண்தேன் நறையும் வடித்தெடுத்த
சாரங் கனிந்தூற் றிருந்தபசுந்
தமிழும் நாறத் தடங்கரைகொல்
அலைப்பாய் புனல்தெண் கடல்வைப்பும்
அகிலாண் டமும்பன் முறையின்றும்
அழகு முதிர முதிராஎன்
அம்மை யமுது சூற்கொண்ட
முலைப்பால் நாறுஞ் செங்கனிவாய்
முத்தம் தருக முத்தமே
மும்மைத் தமிழ்தேர் கந்தபுரி
முருகா முத்தம் தருகவே.
45✓
புயலுண் டிருண்ட கொந்தளமும்
பொன்னங் குழையும் இன்னகையும்
புளகம் பொதிந்த இளமுலையும்
புருவச் சிலையும் போர்த்தடங்கண்
கயலும் கலப மயிலியலும்
கன்னிப் புனத்தோர் பெண்ணமுதின்
காமர் நலனும் பன்னிரண்டு
கண்ணான் முகந்துண் டின்னமுதின்
இயலுஞ் சுவைநல் அவியொடுநீத்
தேக்கற் றிருந்தத் தாக்கணங்கின்
இழுமென் குதலை கனிந்தூறும்
இதழ்த்தேன் சுவைகண் டேமாப்பான்
முயலுங் குமுதக் கனிவாயால்
முத்தந் தருக முத்தமே
மும்மைத் தமிழ்தேர் கந்தபுரி
முருகா முத்தம் தருகவே.
46✓
கோடுபடு கொங்கைக் குவட்டுக் கிளைத்திட்ட
கொடியிடைக் கடைசியர்குழாம்
குரவையிடு துழனியிற் கொண்டல்திரை யத்தாவு
குழவுப் பகட்டுவாளை
சேடுபடு புத்தேள் நிலத்துப் புனிற்றிளஞ்
சேதா வயிற்றுமுட்டச்
சேங்கன் றெனத்தடவு மடிமடை திறந்தூற்று
தீம்பால் சினைக்கற்பகத்
தேடுபடு தடமலர்த் தேனருவி யொடுசொரிந்
தேரியொடு கால்நிரம்ப
இழுதுபடு கழனியுந் தெய்வமண நாறஎன்
றின்சுவை முதிர்ந்துவிளையும்
காடுபடு செந்நெல்பைங் கன்னல்நிகர் புள்ளூர
கனிவாயின் முத்தமருளே
கங்கைக்கும் நெடியவன் தங்கைக்கும் ஒருமகன்
கனிவாயின் முத்தமருளே.
47✓
துளிதூங்கு மழைமுகிற் படலங் கிழிக்கும்
துகிற்கொடிகள் சோலைசெய்யத்
தோரண முகப்பில் தவழ்ந்தேறு கலைமதித்
தோற்றத்தை அறுகான்மடுத்
தளிதூங்கு தேனிறால் இதுதம்மின் வம்மினென்
றழிநறா ஆர்ந்துநிற்கும்
அந்நலார் கைகூப்ப ஆடவர் பிழிந்தூற்றும்
அளவிலப ராதமிதெனா
ஒளிதூங்கு முகமதிக் கொப்பென்கி லேன்விடுதிர்
உயிரொன்று மெனவிடலுமவ்
உடுபதிக் கடவுள்நற வுண்டமற் றவரினும்
உய்ந்தோம் ஒழிந்தோம் எனக்
களிதூங்கு மாடமலி கந்தபுரி வருமுருக
கனிவாயின் முத்தமருளே
கங்கைக்கு நெடியவன் தங்கைக்கும் ஒருமகன்
கனிவாயின் முத்தமருளே.
48✓
பூமரு வுயிர்க்குங் கருங்கொந் தளத்துவிரி
பூந்துகட் படலமுமணம்
பொங்கிய நறும்புகைப் படலமுங் காலமழை
பொழிமுகிற் படலஞ்செயத்
தாமரை முகச்சோதி யெழவெழுஞ் சிறுமுறுவல்
தண்ணிலவு செயவெயில்செயத்
தழல்மணிக் கலன்அகல் நிதம்பமொடு வெம்முலை
தடங்கடலு மலையுஞ்செயத்
தேமரு குழற்கோதை மயிலனீர் கோசிகச்
செம்மலென வேறு புவனம்
செயவும்வல் லீரென மணந்திடை தணந்தவர்சொல்
செஞ்சொற் பசுங்கிளிசொலக்
காமரு மனங்குழைய மாதர்பயில் வேளூர
கனிவாயின் முத்தமருளே
கங்கைக்கும் நெடியவன் தங்கைக்கும் ஒருமகன்
கனிவாயின் முத்தமருளே.
49✓
மதியும் நதியும் அரவும் விரவு
மவுலி யொருவன் முக்கணும்
வனச முகமும் அகமு மலர
மழலை யொழுகு சொற்சொலும்
புதல்வ இமய முதல்வி யருள்செய்
புனித அமரர் கொற்றவன்
புதல்வ தழுவு கொழுந குறவர்
சிறுமி குடிகொள் பொற்புய
கதிரு மதியும் ஒளிர ஒளிரும்
ஒளிய அளிய கற்பகக்
கனியின் இனிய உருவ பருவ
மழையின் உதவு கைத்தல
முதிரும் அறிவில் அறிஞர் உணரும்
முதல்வ தருக முத்தமே
முனிவர் பரவு பருதி புரியின்
முருக தருக முத்தமே.
50✓
வடிவின் அழகும் எழுத அரிய
புயமும் நறிய செச்சையும்
மருமம் விரவு குரவும் அரையின்
மணியும் மணிகொள் கச்சையும்
கடவு மயிலும் அயிலு மொழுகு
கருணை வதன பத்மமும்
கமல விழியும் விழியு மனமும்
எழுதி யெழுதி நித்தலும்
அடிக ளெனவு னடிகள் பணியு
மடியர் அலது மற்றும்வே
றமரர் குழுவும் அகில மறையும்
அரியு மயனு முற்றுநின்
முடியு மடியு முணர அரிய
முதல்வ தருக முத்தமே
முனிவர் பரவு பரிதி புரியின்
முருக தருக முத்தமே.