வைத்தீசுவரன்கோவில் முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
குமரகுருபர அடிகள்
சிறுதேர்ப்பருவம்11 / 11
வைத்தீசுவரன்கோவில் முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் · குமரகுருபர அடிகள்
சிறுதேர்ப்பருவம்
91✓
போரோடு படைதுறந் துடல்திறந் தோடுசெம்
புனலோட ஓடிநிமிரும்
புணரிப் பெருந்தானை அவுணப் படைத்தலைவர்
பூதப் படைத்தலைவர்முன்
தாரோ டவிழ்ந்திட்ட குஞ்சிக் கிமைத்திட்ட
தழல்விழிக் கெதிர்செலாத
தாளுக்கு வாள்சோர் தடக்கைக்கு நாமநும்
தாலிக்கு வேலிகொள்ளனாப்
பீரோடு கொங்கைக்கண் நீரோடு வெள்ளருவி
பெருகக் கடைக்கணிற்கும்
பெய்வளை யவர்க்கோத அவர்விழிகள் தொறுமிளம்
பேதையர்கள் கண்தொறுமெனத்
தேரோடும் ஒருபெருஞ் சிலையோடும் நின்றவன்
சிறுதேர் உருட்டியருளே
திருவளர வளர்கந்த புரிவளர் இளங்குமர
சிறுதேர் உருட்டியருளே.
92✓
கம்பக் களிற்றுக் கடற்றானை வீரர்கட்
கடையிற் கடைக்கனல்எழக்
கண்தொட்டுணுஞ்சில மருட்பேய் கரிந்தெழு
கடுங்குருதி வெள்ளமூழ்கித்
தும்பைத் தலைச்செம் மயிர்ச்சிகை யினைச்சுடு
கனற்சிகை யெனப்பதைப்பச்
சூட்டிறைச் சிக்குச் சிணுங்குங் குறட்பேய்க்கொர்
சூர்ப்பேய் கொழுந்தசைகள்கோத்து
அம்பிற் சுடத்தான் கவந்தமொடு தொந்தமிட்
டாடும் பறந்தலைநிலத்
தானைப் பிணக்குன்றும் அவுணப் பிணக்காடும்
அளறுபட் டொழியநின்றோர்
செம்பொன் தடந்தேர் உருட்டிவரு சேவகன்
சிறுதேர் உருட்டியருளே
திருவளர வளர்கந்த புரிவளர் இளங்குமர
சிறுதேர் உருட்டியருளே.
93✓
வண்டேறு செந்நிறப் பங்கித் தலைக்கமல
வனமுழு குருதியாற்று
மால்யானை கையெடுத் தார்த்துநீந் தப்புணரி
மகரமீன் எனநினைந்து
கொண்டேகு சிறுகுடர் பெருவலை யெடுத்தெறி
குறட்பேய் நெடுஞ்சினமுறக்
குறுநரி பிடித்தீர்ப்ப அலறுவதும் வீரர்தொடு
கொலைநேமி அவுணருயிரை
உண்டேகு வதுமொருவன் விடவோ லிடுங்கரிக்
குதவவரு திகிரிஏய்க்கும்
ஒல்லென் பறந்தலை மறந்தலைக் கொண்டசூர்
உய்த்திட்ட இந்த்ரஞாலத்
திண்தேரை உருளாது நிற்கப் பணித்தவன்
சிறுதேர் உருட்டியருளே
திருவளர வளர்கந்த புரிவளர் இளங்குமர
சிறுதேர் உருட்டியருளே.
94✓
பைங்கட் சிறைக்கால் கடைக்கால் செயக்கிரிகள்
விரிசிறை படைத்தெழுவபோற்
படருந்தன் வேகத்தின் ஒக்கப் பறக்கப்
பறந்தலைச் செந்தலையறும்
வெங்கண் தயித்தியர் உடற்குறை தலைக்குறை
விரைந்துயி ரினைத்தொடர்ந்து
மீச்செல்லு மாச்செல் லெனச்செலப் பூமாரி
விண்தூர்ப்ப தெனஉடுஉகப்
பொங்கற் கடற்குட்டம் அட்டதிக் குந்தமிற்
போர்செயப் பார்கவிழுமெம்
பொறியுடற் சேடன் படந்தூக்கி ஆர்க்கும்
புகைப்படலம் வடவாமுகச்
செங்கட் பசுந்தோகை வாம்புரி உகைத்தவன்
சிறுதேர் உருட்டியருளே
திருவளர வளர்கந்த புரிவளர் இளங்குமர
சிறுதேர் உருட்டியருளே.
95✓
நெய்வைத்த கூந்தற் பிடிக்குதவ நாற்கோட்டு
நிகளத் தடங்குன்றுவான்
நிமிரும் கதிர்க்குலைச் செந்நெலைப் பாகுபடு
நெட்டிலைக் கன்னல்கொள்எனாக்
கைவைத் திடப்பரி முகஞ்செய்து வெய்யோன்
கடும்பரியை நட்புக்கொளும்
கழனிவிரி காவிரித் திருநாட கற்பகக்
காட்டிற் பிறந்துபிரியா
மெய்வைத்த காதன்மை அரமகளிர் பேராய
வெள்ளந் திளைத்தாடிஓர்
மெல்நடைக் கேக்கற்ற பிடிபின் பிடிக்கமுலை
வேழங்கள் உடனுலாவும்
தெய்வப் பிடிக்குக் கிடைத்ததொரு மழகளிறு
சிறுதேர் உருட்டியருளே
திருவளர வளர்கந்த புரிவளர் இளங்குமர
சிறுதேர் உருட்டியருளே.
96✓
பற்றுவிற் காமன் கொடிப்படைக் கூரெலாம்
படைவீடு கயல்கள்தாவும்
பழனங்க ளோ அத்ர சாலைபூஞ் சோலைப்
பரப்பெலாங் காற்றேறொடும்
கொற்றவங் கங்குற் கடாயானை யுங்கட்டு
கூடமே யெனினுமருதக்
கோமகன் குடிகொண்ட சோணாட சேணாடு
குங்குமங் கொட்டுதிண்டோள்
பொற்றடம் குன்றினிரு கொங்கைப் பொருப்புமொரு
பூங்குழற் காடும்வெயில்கால்
புனைமணிக் கலைஅல்குல் மாக்கடலும் ஏந்தியொர்
புனத்தின்கண் மிகநுடங்கும்
சிற்றிடைக் கொல்குமென் கொடிபடர நின்றவன்
சிறுதேர் உருட்டியருளே
திருவளர வளர்கந்த புரிவளர் இளங்குமர
சிறுதேர் உருட்டியருளே.
97✓
கோல்பாய் பசும்புண் அசும்புகும் பத்தடங்
குன்றுகவுள் மடைதிறந்து
கொட்டுநெட் டருவியொடு தேனருவி யுந்திரை
கொழித்துடன் கோப்பமேதிப்
பால்பாய் பெருக்கா றுவட்டெழுதல் தன்துணைப்
பாவைய ரொடுங்குறுகும் அப்
பாகீ ரதிக்குநிகர் தண்டுறை தொறுந்திசைப்
பாலர்மேற் படையெடுத்து
வேல்பாய் நெடுங்கட் கடற்றானை யொடுமொருவன்
மேற்செல்ல நாற்றிசையிலும்
வெற்றிக் கயற்கொடி யெடுத்ததென எடுத்தெறியும்
வெண்திரை கிழித்துவெடிபோம்
சேல்பாய் தடம்பணை உடுத்தகா விரிநாட
சிறுதேர் உருட்டியருளே
திருவளர வளர்கந்த புரிவளர் இளங்குமர
சிறுதேர் உருட்டியருளே.
98✓
மீத்தந்த மாகத்து மேகத்தி னோடுமுடு
மீன்இரியல் போகஉகளும்
வெடிவாளை மதியக ருடைத்துற்று தெள்ளமுத
வெள்ளருவி யாற்பசுந்தண்
காத்தந்த சண்பகப் பூவேரி மாரிசெய்
காவேரி ஆயிரமுகக்
கங்கையா கச்செய்து மீட்டுநாற் கோட்டுவெங்
களிறுபிளி றத்தாவிவான்
பூத்தந்த கற்பகக் காட்டினை உழக்கிவிரி
பொற்றா தெழுப்பிமற்றப்
பூந்துகட் படலத்தி னால்தெய்வ நதியையும்
பொன்னிநதி யாகச்செயும்
தேத்தந்த தண்பணை உடுத்ததீம் புனல்நாட
சிறுதேர் உருட்டியருளே
திருவளர வளர்கந்த புரிவளர் இளங்குமர
சிறுதேர் உருட்டியருளே.
99✓
கள்ளவிழ் நறுங்கொடிகள் கமுகிற் படர்ந்துபூங்
கற்பகத் தும்படர்தலால்
காமன் பெருஞ்செல்வம் அன்னவர்கள் குழுமியக்
கமுகின் கழுத்தில்யாத்த
ஒள்ளொளிய செம்மணிப் பொன்னூசல் பன்முறை
உதைந்தாட ஆடுந்தொறும்
ஒண்கமு கொடுந்துணர்ப் பைங்கற் பகக்காடும்
ஒக்கஅசை யத்தலையசைத்
தள்ளிலை அலங்கல்வேல் எம்பிரா னைப்பாடி
ஆடுகின் றாரெனத்தாம்
அலர்மாரி பொழிவபோல் அங்கற் பகத்தெய்வம்
அம்பொன்மலர் மாரிதூர்க்கும்
தெள்ளுதமிழ் விரிபுனற் காவிரித் திருநாட
சிறுதேர் உருட்டியருளே
திருவளர வளர்கந்த புரிவளர் இளங்குமர
சிறுதேர் உருட்டியருளே.
100✓
வாராட்டு தடமுலைப் பாலொழுகி வழிவதென
மணிமுறுவல் நிலவுகாலும்
மழலைவாய் முத்துண்டும் உச்சிமோந் துந்திரு
மடித்தலத் தினில்இருத்திப்
பாராட்டி யுந்தமது கண்மணிப் பாவைநின்
படிவமா கக்காட்டியிப்
பாலரொடும் விளையா டெனப்பணித் துந்தங்கள்
பார்வைகளி யாடச்செயும்
தாராட்டு மதிமுடித் தீராத வினைதீர்த்த
தம்பிரா னுந்தம்பிரான்
தழலுருவில் ஒருபாதி குளிரஒரு புறநின்ற
தையனா யகியும்வைத்துச்
சீராட்டி விளையாடு சேனா பதிக்கடவுள்
சிறுதேர் உருட்டியருளே
திருவளர வளர்கந்த புரிவளர் இளங்குமர
சிறுதேர் உருட்டியருளே.