முருகன் App
வைத்தீசுவரன்கோவில் முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
குமரகுருபர அடிகள்
காப்புப்பருவம்2 / 11
வைத்தீசுவரன்கோவில் முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் · குமரகுருபர அடிகள்

காப்புப்பருவம்

திருமால்✓
பூமேவு கற்பகப் பொங்கரில் செங்கட்
புலோமசை வளர்த்தகும்பப்
புணர்முலைக் களியானை விளையாடு பன்னிரு
பொருப்பனை விருப்பனைத்தும்
கோமேவு சாரற் குறச்சிறுமி மேல்வைத்த
குழகனைக் கழகந்தொறும்
கொத்துமுத் தமிழ்மொய்த்த கந்தபுரி முத்துக்
குமாரனைத் தனிபுரக்க
தேமேவு கடவுட் பொலங்கிரி திசைக்கரிகள்
திகிரிகிரி குலகிரியொடும்
திரியத் திரித்துமத் தெறியத் தடங்கடல்
தெண்டிரை முகட்டுதித்த
பாமேவு மதுரம் பழுத்தமுதம் ஒழுகும்
பசுங்குதலை மழலையஞ்சொல்
பங்கயச் செல்வியிரு கொங்கைக் குவட்டுவளர்
பச்சைப் பசுங்கொண்டலே.
2வைத்திய நாதர் (சந்த விருத்தம்)✓
ஒருபு றத்துமர கதம்இ மைப்பவொளிர்
மாமேரு மற்றொரு மேருவைச் சாய்த்தென
உலக ளக்கநிமிர் வடபொ ருப்பையொரு
தோளால்வ ளைத்தபி னாகியைத் தீக்கனல்
உமிழு முக்குடுமி அயில்தி ரித்துவரு
வாய்வாள்ம ழுப்படை வீரனைப் பார்த்தனொ
டுடலு மற்றொழிலின் அறவி ளைத்துமெதிர்
ஓடாது டற்றுநி ராதனைக் கூக்குரல்
விரிக டற்புடவி முழுது ணச்சமையும்
ஓர்காளை கட்குப்ர தாபனைக் கார்க்கடு
விடமெ டுத்திரிய திருமி டற்றிலிகு
காமாரி யைக்கவு மாரியைப் போற்றிரு
விழிமுன் நிற்கும்வடி வழகு டைக்கடவுள்
மாமோகி னிக்கும ணாளனைச் சூக்கும
வெளியி னிற்பரம நடந விற்றுதிறல்
வேளுர்வ யித்திய நாதனைப் போற்றுதும்
குரவு செச்சையொடு நறவு யிர்ப்பவிரி
தேனாறு வட்டெழு மார்பனைப் பேய்த்திரள்
குரவை யிட்டவுணர் தடிசு வைத்தஇழர்
கூர்வேல்வி டுத்தகு மாரனைப் பார்ப்பதி
குமர னைச்சமரில் உருமு கக்குளிறு
காலா யுதக்கொடி யாளனைக் கோட்டிய
குறுந கைக்குமனம் உருக வெற்புவர்த
மானோ டுமற்பொரு தோளனைத் தாக்கிய
திரண்ம ருப்பினமர் பொருத னிக்கடவுள்
மால்யானை யைப்புணர் காளையைச் சாற்றிய
செழும றைப்பொருளி னுரைவி ரித்துமெனும்
வேதாமு டித்தலை மோதுகைக் காய்ப்பொடு
திருவ டித்துணையென் முடிப தித்தவடு
ஆறாத மெய்ப்புகழ் ஆளியைப் பூட்டிய
சிறைவி டுத்தமரர் குறைமு டித்துதவு
சேனாப திப்பெரு மாள்தனைக் காக்கவே.
3தையனாயகியம்மை✓
வேறு
குழைஅ டர்ந்துவடி கணைது ரந்துசெறி
குமிழ்ம றிந்தவிழி நவ்வியைக் கோட்டொடு
குவடெ றிந்தமுத கலசம் வென்றதட
முலைசு மந்தமலை வல்லியைச் சேற்றொளிர்
குமுதம் விண்டசுவை அமுத முண்டினிய
கொழுநர் கொஞ்சுசிறு கிள்ளையைத் தாட்டுணை
குறுகு தொண்டர்பிழை அறம றந்துபிறர்
குணமி கழ்ந்ததக வில்லியைச் சேட்செலும்
எழுபெ ரும்புவன முழுதொ ருங்குதவும்
இறைவி யென்றுமறை கையெடுத் தார்க்கவும்
இடைநு டங்குமட நடையி ளங்குமரி
எனஇ ருந்தகன கள்வியைப் பூத்தஎன்
இதய புண்டரிக மலரில் எந்தையொடும்
இனிதமர்ந்தவொரு செல்வியைப் பாற்றுதும்
இருவர் கண்கள்து வரிய செஞ்சுடரின்
இடம ருங்குடைய தையலைப் போற்றுதும்
முழுது ணர்ந்தும்உணர் வரிய தொன்றையொரு
மொழியின் விண்டசிறு பிள்ளையைச் சூர்ப்பெயர்
முதுப ழம்பகையை அறவெ றிந்தவுணர்
முதல்த டிந்ததனி வில்லியைப் பாட்டளி
முரல விண்டதரு நிழல்தொ ழும்புகுடி
புகவ ழங்குகொடை வள்ளலைப் போற்றடி
முடியு மின்றிவெறு வெளிக டந்துமறை
முடிவி னின்றுநிறை செல்வனைக் காத்தொறும்
மழலை வண்டுதட மலர்குடைந்துபுது
மதுவ ருந்திநறு மல்லிகைச் சேக்கையின்
வடிப சுந்தமிழின் இசைப யின்றபெடை
யொடுது யின்றினிய செவ்வழிப் பாட்டினை
வருவி பஞ்சியயில் தரும தங்கர்தெரு
மரமு ரன்றுநெடு வைகறைப் போய்ச்செழு
மலரி லஞ்சிதொறும் உலவு கந்தபுரி
மருவு கந்தனையெம் ஐயனைக் காக்கவே.
4கற்பக விநாயகக்கடவுள்✓
கடாம்உமிழ் கைக்கதக் கிம்புரிக் கோட்டொரு
கராசலம் இட்டமெய்க் கஞ்சுகிக் கேற்பவொர்
படாமணி மத்தகத் தந்தியைத் தீர்த்தர்கள்
பராவரு கற்பகக் கன்றினைப் போற்றுதும்
வடாதுபொ ருப்பினில் துன்றுபுத் தேட்கெதிர்
மனோலயம் உற்றமெய்ப் பண்பினைக் காட்டிய
சடானன னைத்தலைச் சங்கம்வைத் தாற்றிய
சடாயுபு ரத்தருட் கந்தனைக் காக்கவே.
5பிரமதேவர்✓
(ஆசிரிய விருத்தம்)
பைங்காய்க் கமுகு செம்பழுக்காய்ப்
பவளம் உதிர்ப்பக் கதிர்ச்செந்நெல்
பனிதுத் துகுக்குஞ் சோணாட்டின்
பரிசு பாடி ஞிமி றிரப்பக்
கொங்கார்த் திறைக்கு நறைக்காந்தள்
குறிஞ்சி மலரோ டணிந்தநறுங்
குஞ்சிப் பெருமாள் வேதபுரிக்
குமரப் பெருமாள் தனைக்காக்க
செங்காற் கருங்கண் பைந்தொடியார்
சிற்றாய்ப் பாடிப் பெருங்குடியில்
தீம்பால் திருடிக் கட்டுண்டு
திரியா வண்ணம் திருத்தாதைக்கு
அங்காப் படங்கப் பால்தயிர்நெய்
அருந்தேன் கடலோ டிருந்துண்ண
அகிலம் படைத்துத் தனக்கேற
அன்னம் படைத்த பெருமாளே.
6தேவேந்திரன்✓
வேறு
கானாறு கற்பகக் காவுமூ வுலகும்அக்
காவென நிழற்றும்ஒற்றைக்
கவிகையுங் குணதிசைக் காவலும் பிறவும்உள
காணியுங் காணியாக
வானாறு கோட்டிமய மலைவயிறு வாய்த்ததலை
மகளுக்கும் மணமகற்கும்
மருமகளை உரியதன் திருமக ளெனப்பெற்ற
மாமடிக ளைத்துதிப்பாம்
பானாறு செந்நெற் பசுங்கதிர் கறித்துமென்
பைங்குவளை வாய்குதட்டும்
பணைமருப் பெருமைமடு மடிமடை திறந்ததீம்
பாலாறு பங்கயச்செந்
தேனாறு டன்கடவுள் வானா றெனப்பெருகு
சித்தாமிர் தஞ்சிவபிரான்
சீர்த்திப்ர தாபநிகர் தினகர புரித்தேவ
தேவனைக் காக்கஎன்றே.
7திருமகள்✓
வேறு
மானிறக் கடவுள்திரு மறுமார்பில் நறவிரி
வனத்துழாய்க் காடுமுடி
மாயிருள் வழங்குதன் திருமாளி கைக்கந்தன்
மணிவிளக் கிட்டுமுட்டாட்
கானிறைக் குங்கமல வீட்டுக்கு நெட்டிதழ்க்
கதவந் திறந்தளித்தும்
காதன்மை காட்டுங் கவுத்துவத் துடன்வந்த
கன்னிகையை அஞ்சலிப்பாம்
மீனிறப் புணரியை விழுங்குங் கடற்றானை
வெள்ளமொடு கள்ளமனமும்
மெய்யுமிரு ளத்திரளும் அவுணக் கருங்கங்குல்
விடியக் கடுங்குரல்விடும்
தீநிறக் குடுமிவெண் சேவலை உயர்த்துவண்
சிறையயிற் பரிநடாத்துஞ்
சேவகப் பெருமாளை வேதபுரி வரும்இளஞ்
சேயைப் புரக்கவென்றே.
8கலைமகள்✓
துறைபட்ட மறையவன் செந்நாப் படிந்துதன்
சுதைநிறஞ் சிதைவுறாமே
தொன்மறை கனிந்தூறும் அன்பல்நீ றூறலில்
தூத்துகில் நனைப்புறாமே
நறைபட்ட வெண்டோட்டு நளினப் பொகுட்டெமது
நன்னெஞ் செனக்குடிபுகும்
ஞானப் பிராட்டியைச் சொற்கடல் தெள்ளமுதை
நாத்தழும் பத்துதிப்பாம்
சிறைபட்ட தண்துறைச் சித்தாமிர் தப்பெருந்
தீர்த்தந் திளைத்தாடிய
செஞ்சுடர்க் கடவுளும் வெண்சுடர்க் கடவுளில்
தெள்ளமுத மயமாகலான்
உறைபட்ட சுதைநிலவொ டிளவெயிலும் அளவளாய்
உண்ணச்ச கோரம்வெஃகும்
ஓங்கெயிற் பரிதிபுரி முருகனைச் சண்முகத்
தொருவனைக் காக்கஎன்றே.
9சத்தமாதர்கள்✓
(சந்த விருத்தம்)
பயில்தரு முதுமறை நூலைத் தெரித்தவள்
பகைதொரு புரமெரி மூளச் சிரித்தவள்
பனிவரை பகநெடு வேலைப் பணித்தவள்
படுகடல் புகையெழ வார்விற் குனித்தவள்
எயிறுகொ டுழுதெழு பாரைப் பெயர்த்தவள்
எறிதரு குலிசம்வி டாமற் றரித்தவள்
இடுபலி கொளுமொர்க பாலக் கரத்தினள்
எனும்இவர் எழுவர்கள் தாளைப் பழிச்சுதும்
கயல்திரி சரவண வாவிக்கரைக்குரை
கழலொடு பரிபுரம் ஒலிட் டிடக்கட
களிறொடு களிறெதிர் மோதத் திசைத்திசை
கடுநடை யுளதகர் ஏறச் சமர்த்தனை
முயல்தரு கறையொடு தேய்வுற் றிளைத்தொரு
முழுமதி குறைமதி யாகத் துகிற்கொடி
முகில்தொடு தடமதில் வேதப் பதித்தனி
முதல்வனை அறுமுக வேளைப் புரக்கவே.
10முப்பத்துமுக்கோடி தேவர்கள்✓
வேறு
முறுக்குடை நறைச்சத தளத்திரு மலர்த்தவிசு
சொர்க்கத் தலத்தோடு சேடசய னத்தையும்
முடித்தலை யடித்தலை பதித்தெதிர் துதித்தவர்த
மக்குக் கொடுத்தானை மாதிரமொ ரெட்டையும்
இறைப்பொழு தினிற்பொடி படுத்தருள் கொடுக்கவல
சத்திக் கரத்தானை ஊதியமெ னத்தனை
இருப்பினு நடப்பினு நினைப்பவர் இருக்களமர்
சித்தத் திருப்பானை ஆறிருபு யத்தனை
வெறுப்பொடு விருப்பினை அறுத்தவ ருளத்துமலர்
பத்மப் பதத்தானை வேதபுரி யிற்சின
விடைக்கொடி வலத்தினும் மடக்கொடி யிடத்துமுள
முக்கட் டிருத்தாதை யார்பணி குருக்களை
மறைக்கிழ வனைத்தலை புடைத்துல கனைத்தினையும்
ஒக்கப் படைத்தானை மூவிரு முகத்தனை
மருத்துவர் வசுக்கதிர் உருத்திரர் எனப்பொலியு
முப்பத்து முக்கோடி தேவர்கள் புரக்கவே