வைத்தீசுவரன்கோவில் முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
குமரகுருபர அடிகள்
செங்கீரைப்பருவம்3 / 11
வைத்தீசுவரன்கோவில் முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் · குமரகுருபர அடிகள்
செங்கீரைப்பருவம்
11ஆசிரிய விருத்தம்✓
இருக்கோ லிடும்பரி புரக்கோல மும்நுதல்இல்
இட்டபொட் டுஞ்சுட்டியும்
எரிமணிப் பட்டமுங் கட்டுபொன் அரைஞாணும்
இளஞாயி றுதயஞ்செயும்
உருக்கோல முஞ்சூழி யக்கொண்டை யும்முச்சி
உச்சியும் வாளிமுத்தும்
ஒள்ளொளி ததும்புங் குதம்பையுங் கண்டுகண்
டோடரிக் கண்களிக்கும்
மருக்கோல நீலக் குழற்றைய லாட்கரு
மருந்தாய் இருந்ததெய்வ
மகக்கோல மேமுதிர் கிழக்கோல மாய்க்குற
மடந்தைமுன் நடந்துமற்றத்
திருக்கோலம் உடனொரு மணக்கோல மானவன்
செங்கீரை ஆடியருளே
செத்துப் பிறக்கின்ற தெய்வங்கள் மணவாள
செங்கீரை ஆடியருளே
12✓
கும்பாதி காரியம் எனத்தமை நிமித்தமாக்
கொண்டஅகி லாண்டங்களின்
குழுவுக்கு மற்றுத்தம் இருவர்குறி யுந்தலைக்
கூடினுந் தான்தனக்கச்
சொம்பாதி அன்மைக் கனைத்துந்தன் மயமெனுஞ்
சுருதிகரி யாவைத்தும்அச்
சுருதிக்கும் எரிசுடர்ப் பருதிக்கும் இரவிகுலத்
தோன்றற்கும் இளவலுக்கும்
சம்பாதி யொடுநற் சடாயுவுக் கும்பெருந்
தவமுனிவர் எழுவருக்கும்
தண்அளி சுரந்திட்ட தீராத வினைதீர்த்த
தம்பிரான் திருமேனியிற்
செம்பாதி யுங்கொண்ட தையனா யகிகுமர
செங்கீரை ஆடியருளே
செத்துப் பிறக்கின்ற தெய்வங்கள் மணவாள
செங்கீரை ஆடியருளே.
13✓
கைக்கெட்டும் எட்டுக் களிற்றைப் பிடித்தக்
களிற்றோடு முட்டவிட்டுக்
ககனவட் டத்தினொடு பருதிவட் டத்தைவளை
திகிரிவட் டத்திலிட்டு
முக்கட் டிருத்தாதை கோதண்டம் எனவைத்த
வேதண்ட மாதண்டமா
மூதண்ட கூடந்த்ரி கூடத் தொடுஞ்சாடி
மூரிக் கடாசலம் அவண்
மெய்க்கிட்ட சட்டைக்கு நேரிட் டிடப்பட்ட
மேகபட லத்துமொண்டு
மேல்கட லினைப்பெருங் கீழ்கடல் புகப்பெய்து
விளையாட்டு வீரர்களொடும்
திக்கெட்டும் விளையாடு சேனாபதிக்கடவுள்
செங்கீரை ஆடியருளே
செத்துப் பிறக்கின்ற தெய்வங்கள் மணவாள
செங்கீரை ஆடியருளே.
14✓
மைவிழிச் செங்கமல வல்லிக்கு நேமியான்
மணிமார்பு வாணிக்குநான்
மறைமுதலி செந்நாத் தடந்தைய லாளொடும்
வயித்தியக் கடவுளார்க்கு
மெய்விரிக் குந்தொண்டர் உள்ளத் தடத்தினொடு
வேதச் சிரங்கடுப்ப
வேதபுரி கந்தபுரி புள்ளூ ரெனப்பொலியும்
வேளூர திசைதிசைதொறும்
கைவகுத் தரமகளிர் குரவையாட் டயர்பெருங்
கயிலைத் தடம்சாரலும்
கனகா சலத்தும்வளர் இமையா சலத்தும்உயர்
கந்தமா தனவெற்பெனத்
தெய்வதப் பிடியொடும் விளையாடு மழகளிறு
செங்கீரை ஆடியருளே
செத்துப் பிறக்கின்ற தெய்வங்கள் மணவாள
செங்கீரை ஆடியருளே.
15✓
மீனேறு குண்டகழி தீவாய் மடுத்ததனி
வில்லியார் இளவலோடும்
விதிமுறை வணங்கச் சடாயுபுரி யில்கருணை
வெள்ளமென வீற்றிருக்கும்
ஆனே றுயர்த்திட்ட ஐயற்கும் அம்மைக்கும்
அருமருந் தாகிநின்ற
ஆதிப் பிரானென்று மும்முதற் கடவுளும்
அடித்தொழும் பாற்றமற்றக்
கூனேறு மதிநுதல் தெய்வக் குறப்பெண்
குறிப்பறிந் தருகணைந்துன்
குற்றேவல் செய்யக் கடைக்கண் பணிக்கெனக்
குறையிரந் தவள்தொண்டைவாய்த்
தேனூறு கிளவிக்கு வாய்ஊறி நின்றவன்
செங்கீரை ஆடியருளே
செத்துப் பிறக்கின்ற தெய்வங்கள் மணவாள
செங்கீரை ஆடியருளே.
16வேறு✓
செம்பொன் அடிச்சிறு கிண்கிணி யோடு
சிலம்பு கலந்தாடத்
திருவரை அரைஞாண் அரைமணி யொடுமொளி
திகழரை வடம்ஆடப்
பைம்பொன் அசும்பிய தொந்தியொ டுஞ்சிறு
பண்டி சரிந்தாடப்
பட்ட நுதற்பொலி பொட்டொடு வட்டச்
சுட்டி பதிந்தாடக்
கம்பி விதம்பொதி குண்டல முங்குழை
காதும் அசைந்தாடக்
கட்டிய சூழியும் உச்சியும் முச்சிக்
கதிர்முத் தொடும் ஆட
அம்பவ ழத்திரு மேனியும் ஆடிட
ஆடுக செங்கீரை
ஆதி வயித்திய நாத புரிக்குகன்
ஆடுக செங்கீரை.
17✓
குழையொடு குழையெதிர் மோதிக் காதணி
குண்டல வெயில்வீசக்
குமுத இதழ்க்கனி வாயமு தூறிய
குறுநகை நிலவூர
முழுவயி ரப்புய வலயமும் முன்கை
முதாரியும் ஒளிகால
முத்தம் அரும்பி யெனக்குறு வேர்வு
முகத்தி லரும்பியிடப்
புழுதி அளைந்த பசுந்திரு மேனிப்
பொங்கொளி பொங்கியெழப்
புண்டரி கங்கண் மலர்ந்த விழிக்கடை
பொழிஅருள் கரைபுரள
அழகு கனிந்து முதிர்ந்த இளங்கனி
ஆடுக செங்கீரை
ஆதி வயித்திய நாத புரிக்குகன்
ஆடுக செங்கீரை.
18✓
விரல்சுவை யுண்டு கனிந்தமு தூறிய
மெல்இதழ் புலராமே
விம்மிப் பொருமி விழுந்தழு தலறிஉன்
மென்குரல் கம்மாமே
கரைவுறும் அஞ்சன நுண்துளி சிந்திக்
கண்மலர் சிவவாமே
கலுழ்கலு ழிப்புன லருவி படிந்துடல்
கருவடி வுண்ணாமே
உருவ மணிச்சிறு தொட்டில் உதைத்துநின்
ஒண்பதம் நோவாமே
ஒருதாள் உந்தி எழுந்திரு கையும்
ஒருங்கு பதித்துநிமிர்ந்
தருள்பொழி திருமுகம் அசைய அசைந்தினி
தாடுக செங்கீரை
ஆதி வயித்திய நாத புரிக்குகன்
ஆடுக செங்கீரை.
19வேறு✓
கும்பம தக்களி யானைஇ ரண்டே ஒன்றேமைக்
கொண்டல்வி ழிக்கயன்மீனும்இ ரண்டே கொண்டேகிச்
சம்பர னைப்பொரு சேவகன் வந்தான் வந்தான்முற்
சண்டைகொ ளற்கென நேர்வரு பெண்பால் அன்பாயே
அம்பவ ளக்கொடி யேவளர் கொம்பே யென்றேநீ
அன்றுபு னத்துயிர் சோர்வது கண்டே முன்போதுங்
கம்பம தத்தர்ச கோதர செங்கோ செங்கீரை
கந்தபு ரிக்கருணாநிதி செங்கோ செங்கீரை.
20✓
திங்களநு தற்றிரு மாதொடு நின்றே மன்றாடும்
செங்கண்வி டைக்கொடி யோனருள் கன்றே ஒன்றேயாய்
எங்களு ளத்தெழு தூறுக ரும்பே அன்பாளர்க்
கின்பம ளிக்குமெய்ஞ் ஞானம ருந்தே எந்தாயின்
கொங்கலர் மைக்குழல் வாழ்பொறி வண்டே வண்டுதும்
கொந்தள கக்குற மான்வளர் குன்றே என்றோதும்
கங்கைம கட்கொரு கான்முளை செங்கோ செங்கீரை
கந்த புரிக்கரு ணாநிதி செங்கோ செங்கீரை.