வைத்தீசுவரன்கோவில் முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
குமரகுருபர அடிகள்
வருகைப்பருவம்7 / 11
வைத்தீசுவரன்கோவில் முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் · குமரகுருபர அடிகள்
வருகைப்பருவம்
51✓
செம்பொற் கருங்கழல் அரிக்குரற் கிண்கிணி
சிலம்பொடு கலின்கலினெனத்
திருவரையில் அரைமணி கிணிண்கிணிண் எனப்பொலந்
திண்தோளின் வளைகலிப்ப
அம்பொற் பகட்டுமார் பிற்சன்ன வீரமும்
ஆரமும் திருவில்வீச
அணிமகர குண்டலம் பரிதிமண் டலமென்ன
அலர்கதிர்க் கற்றைசுற்றப்
பைம்பொற் சுடர்ச்சுட்டி கட்டுசு ழியுமுடன்
பட்டமொளி விட்டெறிப்பப்
பங்கய மலர்ந்ததிரு முகமண் டலந்தொறும்
பனிமுறுவல் நிலவரும்பக்
கும்பப் படாமுலை மலைப்புதல்வி செல்வக்
குமாரநா யகன்வருகவே
முரவுகமழ் தருகந்த புரியிலருள் குடிகொண்ட
குமரகுரு பரன்வருகவே.
52✓
மழவுமுதிர் கனிவாய்ப் பசுந்தேறல் வெண்துகில்
மடித்தலம் நனைப்ப அம்மை
மணிவயிறு குளிரத் தவழ்ந்தேறி எம்பிரான்
மார்பினிற் குரவையாடி
முழவுமுதிர் துடியினிற் சிறுபறை முழக்கியனல்
மோலிநீர் பெய்தவித்து
முளைமதியை நெளியரவின் வாய்மடுத் திளமானின்
முதுபசிக் கறுகருத்தி
விழவுமுதிர் செம்மேனி வெண்நீறு தூளெழ
மிகப்புழுதி யாட்டயர்ந்து
விரிசடைக் காட்டினின் திருவிழிகள் சேப்பமுழு
வெள்ளநீர்த் துளையம் ஆடிக்
குழவுமுதிர் செவ்விப் பெருங்களி வரச்சிறு
குறும்புசெய் தவன் வருகவே
குரவுகமழ் தருகந்த புரியில்அருள் குடிகொண்ட
குமரகுரு பரன்வருகவே.
53✓
இருளற இமைக்குநின் திருவுருவின் அலர்சோதி
இளஞாயி றெனமுகையவிழ்ந்
தேடுவிரி தாமரைக் காடுமுகிழ் நகைநில
வெறிப்ப அலர் குமுதவனமும்
கரைபுரள அலைமோது கடலைக் கலக்குமழ
களிறென உழக்கியொருநின்
கண்மலர்கள் செகமலர்க ளாகமோ கப்பெருங்
கலவியங் கடலின் மூழ்கும்
வெருளின்மட நோக்கின்நீரரமகளிர் உடனாடும்
விளையாட் டெனத்திரைபொரும்
வெள்ளநீர்ச் சரவணப் பொய்கையந் துறையினீள்
வீரர்கள் எனுங்கோளரிக்
குரளைக ளொடும்புனல் குடைந்துவிளை யாடிய
குமாரநா யகன் வருகவே
குரவுகமழ் தருகந்த புரியிலருள் குடிகொண்ட
குமரகுரு பரன்வருகவே.
54✓
கட்டுண்ட படர்சடைக் காட்டெம் பிரான்வைத்த
கலைமதியொ டையநீஅக்
கவுரிதிரு முடியில்நித் திலமிட் டிழைத்திட்ட
கதிரிளம் பிறையிணைப்பத்
தெட்டுண்ட போல்முழுத் திங்களென் றேக்கறும்
செழுமணிச் சூட்டுமோட்டுச்
செம்பாம்பு பைவிரித் தாடுதலும் ஓடிநின்
சிறுநறுங் குஞ்சிக்கிடும்
மட்டுண்ட பைங்குலைக் காந்தளென் றணையவம்
மாசுணம் வெருண்டோடலும்
மணிமுடியின் நகுதலையை மற்றெமை நகைத்தியான்
மலரவன் றலைநீமுனம்
குட்டுண்ட தறியாய்கொல் எனஇத ழதுக்கும்
குமாரநா யகன் வருகவே
குரவுகமழ் தருகந்த புரியிலருள் குடிகொண்ட
குமரகுரு பரன்வருகவே.
55✓
அங்கைத் தலத்தம்மை செங்கண் புதைத்தற்
கடங்காமை யாலெம்பிரான்
அலர்விழிகள் பொத்தலும் இருட்படல மூடவுள்
அஞ்சிநின் றேங்கஏங்கிச்
செங்கைத் தலங்கொண் டெடுத்தணைப் பாட்கும்
திருத்தாதை யார்க்கும்முத்தம்
திருமுகமொ ராறும் கொடுப்பக் கதுப்பில்
தெறித்துமுத் தந்தருகெனும்
கங்கைக்கு நல்கா தெழுந்தலறி யோடலும்
கண்ணீர் துடைத்தெடுத்துக்
கால்மலரு நீவித்தன் மார்புற அணைக்குமக்
கவுமாரி அருள்மாரியில்
கொங்கைக் குடங்கொட்டு பாலருவி யாடும்
குமாரநா யகன் வருகவே
குரவுகமழ் தருகந்த புரியிலருள் குடிகொண்ட
குமரகுரு பரன்வருகவே.
56வேறு✓
பைந்தண் கமல வட்டஅணைப்
பாவை அனையார் பூவிரியும்
பசுமென் குழற்கூட் டகிற்புகையின்
படல மூட முடைநறவின்
கந்தம் பொதிந்த செந்துவர்வாய்க்
கடைசி மகளிர் செந்நெலைப்பைங்
கன்னல் எனவும் கன்னலைப்பூங்
கமுகம் எனவும் கடைக்கூடாத்
தந்தம் கருத்துக் கமைந்தபடி
சாற்றிச் சாற்றி முழுமாயச்
சலதி மூழ்கித் தடுமாறும்
சமயத் தவர்போல் தலைமயங்கும்
அந்தண் பழனக் கந்தபுரிக்
கரசே வருக வருகவே
அருளா னந்தக் கடற்பிறந்த
அமுதே வருக வருகவே.
57✓
வள்ளைக் குழையில் தாவடி போம்
மடமா னோக்கிற் கடைசியர்கண்
மாலைக் குழல்வண் டோலமிட
மடுவில் வெடிபோம் வரிவாளை
பள்ளத் திருள்தூங் கழுவுநீர்ப்
பரப்பென் றகல்வான் மிசைத்தாவப்
பாகீ ரதித்தீம் புனல்கிடைத்த
பரிசு வீட்டின் பயன்துய்க்கும்
உள்ளக் கருத்தாற் பிறிதொன்றை
உண்மைப் பொருளென் றுள்ளவுந்தம்
உணர்வில் தெய்வங் கடைக்கூட்ட
உறுதி கிடைத்த படிபோலும்
அள்ளற் பழனப் புள்ளூருக்
கரசே வருக வருகவே
அருளா னந்தக் கடற்பிறந்த
அமுதே வருக வருகவே.
58✓
நஞ்சில் தோய்த்துக் கொலைதீற்றும்
நயன வேலும் கரும்புருவ
நாமச் சிலையும் அகலல்குல்
நகுபொன் தேரும் இகல்கடந்து
வஞ்சிக் கொடிநுண் இடைசாய்த்து
மதர்த்துக் களித்த மால்களிறும்
மற்றும் படைகள் பற்பலவும்
வகுத்துக் கொண்டு மடலவிழ்ந்த
கஞ்சத் தவிசில் திருவன்னார்
கடலந் தானக் கைநிமிரக்
காமன் படைவீ டெனப்பொலியும்
காட்சி யானும் அப்பெயரிட்டு
அஞ்சொல் தமிழோர் புகழ்வெளூர்க்
கரசே வருக வருகவே
அருளா னந்தக் கடற்பிறந்த
அமுதே வருக வருகவே.
59வேறு✓
உலகு குளிர எமது மதியில்
ஒழுகும் அமுத கிரணமே
உருகும் அடியார் இதய நெகிழ
உணர்வி லெழுந லுதயமே
கலையும் நிறையும் அறிவும் முதிர
முதிரு மதுர நறவமே
கழுவு துகளர் முழுக நெடிய
கருணை பெருகு சலதியே
அலகில் புவன முடியும் வெளியில்
அளியும் ஒளியின் நிலையமே
அறிவுள் அறிவை அறியு மவரும்
அறிய அரிய பிரமமே
மலையின் மகள்கண் மணியை யனைய
மதலை வருக வருகவே
வளமை தழுவு பருதி புரியின்
மருவு குமரன் வருகவே.
60✓
இழுமென் அருவி சொரியும்இமய
முதல்வி புதல்வன் வருகவே
இயலு நடையும் வடிவு மழகு
மெழுத அரியன் வருகவே
ஒழுகு கருணை முழுகு கமல
வதனன் வருக வருகவே
ஒருவன் இருவ ரொடுகை தொழுநல்
உபய சரணன் வருகவே
விழுது விடுவெ ணிலவு பொழியும்
நகையன் வருக வருகவே
விளரி பயிலும் அளியும் ஞிமிறும்
விரவு குரவன் வருகவே
மழலை முதிர முதிரு மதுர
வசனன் வருக வருகவே
வளமை தழுவு பருதி புரியின்
மருவு குமரன் வருகவே.