வைத்தீசுவரன்கோவில் முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
குமரகுருபர அடிகள்
தாலப்பருவம்4 / 11
வைத்தீசுவரன்கோவில் முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் · குமரகுருபர அடிகள்
தாலப்பருவம்
21✓
பில்கும் பசுந்தேன் அசும்பிருந்த
பின்தாழ் அளகத் தரமகளிர்
பேதைக் குறும்பு விளையாடும்
பேரா யத்துச் சிறுமருங்குற்
கொல்குங் கொடிபோய் நுடங்கியிட
ஓங்கும் பளிக்கு நிலாமுற்றத்
துயர்தூ ளிகையின் மரகதத்தின்
ஒளிகால் வீசத் தெளிவிசும்பிற்
பல்குஞ் சுரபி தரங்கநெடும்
பாகீ ரதியின் கரைகிளைத்த
பசும்புல் லெனச்செந் நாவளைக்கும்
பைம்பொன் தலங்கள் பலகோடி
மல்குஞ் செல்வக் கந்தபுரி
வாழ்வே தாலோ தாலேலோ
மலையாள் வயிறு வாய்த்தமுழு
மணியே தாலோ தாலேலோ.
22✓
தொடுக்குந் தொடைவெண் துகிற்கொடிகள்
தொடுநீர்ப் பரவை முகம்புழுங்கத்
தோன்றும் பரிதி மணித்திண்தேர்
தூண்டுங் கலின வாம்பரியை
முடுக்குஞ் சுடர்ப்பொன் தவத்திழைத்த
முழுநீ லத்தி னொழுகொளியின்
முழுகுங் கடவுள் மால்யானை
முகிலில் தோன்ற அகலிடநின்
றடுக்குங் களிறென் றரமகளிர்
ஐயுற் றிடத்தன் வெளிறுமுடம்
பளறு படிந்த தெனக்கங்கை
யாற்றுப் பசும்பொன் அசும்புபுனல்
மடுக்குஞ் செல்வக் கந்தபுரி
வாழ்வே தாலோ தாலேலோ
மலையாள் வயிறு வாய்த்தமுழு
மணியே தாலோ தாலேலோ.
23✓
தீற்றுஞ் சுதைவெண் ணிலவெறிப்பத்
திரள்மா மணிகள் வெயில்விரிக்குஞ்
செம்பொன் தலத்துப் பேரமர்க்கட்
சிறியார் நறிய அகிற்புகையிட்
டாற்றுங் குழற்காட் டினைப்புயலென்
றாடு மயில்கண் டம்பவளத்
தரும்பு நகையைச் சகோரப்புள்
அருந்த விரிந்த முழுநகைவிண்
டேற்று நிலவுக் கிந்துசிலை
யொளிர்மா ளிகையுஞ் சூளிகையும்
உருகிப் பெருகுங் கலுழிவெள்ளம்
உவரோ டுவரிக் கடற்புலவு
மாற்றுங் கடவுட் கந்தபுரி
வாழ்வே தாலோ தாலேலோ
மலையாள் வயிறு வாய்த்தமுழு
மணியே தாலோ தாலேலோ.
24✓
கிளைக்குஞ் சகரர் தொட்டபெருங்
கிடங்கென் றிடங்கர் மாஇயங்குங்
கீழ்நீ ரழுவக் குண்டகழிக்
கெழுமு புனல்தெண் டிரைமேய்ந்து
திளைக்குங் கமஞ்சூல் நெடும்புயலைச்
சிறுகட் பெருங்கைப் பகடென்றோர்
செங்கட் களிறு பிளிறநிமிர்
திகிரி கிரியென் றிவர்ந்துடலம்
இளைக்கும் படிவிண் தொடநிவந்த
எழிற்பொற் புரிசை விண்டுபதத்
தேறும் ஏணி பொன்தருவுக்
கிடுவே லியுமா யேழுலகும்
வளைக்குங் கடவுட் கந்தபுரி
வாழ்வே தாலோ தாலேலோ
மலையாள் வயிறு வாய்த்தமுழு
மணியே தாலோ தாலேலோ.
25✓
சோலைப் புறமுப் புடைக்கனிகள்
தூக்கு முடத்தெங் கிமையவர்தந்
தோன்றல் திருவோ லக்கத்துத்
தோகை மயிலின் நடங்குயிற்றும்
ஏலக் கருங்கொந் தளஅளகத்
திளமா தருக்கு முதிர்வேனில்
இளைப்பாற் றுதற்குத் தாற்றொடுஞ்செவ்
விளநீர் கொடுப்ப ஈற்றுளைந்த
காலப் புயலின் முகந்துடைக்குங்
கமுகு பழுக்காய்ப் பவளமுடன்
கதிர்முத் திட்டுச் செழும்பாளைக்
கற்றைக் கவரி புடையிரட்டும்
மாலைப் பழனப் பரிதிபுரி
வாழ்வே தாலோ தாலேலோ
மலையாள் வயிறு வாய்த்தமுழு
மணியே தாலோ தாலேலோ.
26வேறு✓
மாலி மயத்து மடப்பிடி பெற்று
வளர்த்த இளங்களிறே
மழவிடை யேதிரு மாமடி கட்கென
வைத்த கவுத்துவமே
மூல மெனக்குல நான்மறை யோலிடு
முழுமுத லேமூவா
முக்கட் கனிகனி யுஞ்சுவை யேதனி
முத்திக் கொருவித்தே
காலை யிளங்கதி ருக்கெதிர் முதிருங்
கதிர்செம் பவளமுடன்
கதிர்முத் திட்டுவ ணங்கக் கன்னல்கொல்
கமுகுகொ லெனவளரும்
சாலி வயல்தமிழ் வேளு ரடிகேள்
தாலோ தாலேலோ
சங்கத் தமிழின் தலைமைப் புலவா
தாலோ தாலேலோ.
27✓
கருமுகி லுக்கரி தாம்அடி வாரம்
கண்டிரு பறவைகள்தம்
கண்களி பொங்கவொர் பறவை முடித்தலை
காணா துட்குவரப்
பொருபுன லருவித் தலையின் மிசைத்தவழ்
புதுமதி நிலவொழுகப்
புள்ளுநிற்பொலி வெள்ளி மலைக்கண்
பொன்மலை யைக்குவவுக்
குருமணி வயிரப் புயமெனும் எட்டுக்
குவடுஞ் சுவடுபடக்
குத்திப் பொருமிரு கோடு படைத்ததொர்
கூந்தற் பிடிபெற்றுத்
தருமொரு தொந்தித் தந்திக் கிளையாய்
தாலோ தாலேலோ
சங்கத் தமிழின் தலைமைப் புலவா
தாலோ தாலேலோ.
28✓
உண்ணெகிழ் தொண்ட ருளத்திருள் சிந்திட்
ஒளிவிடு முழுமணியே
உயர்மறை நூற்கலை முடிவின் முடிந்திடும்
ஒழுகொளி மரகதமே
விண்ணொடு மண்ணை விழுங்கி அருட்கதிர்
விரியும் இளஞ்சுடரே
மெய்ப்புலன் மேய்ந்து சமைந்ததொர் வீட்டை
விளக்கும் விளக்கொளியே
புண்ணிய நாறுமொர் பெண்கனி கனியும்
புனித நறுங்கனியே
புள்ளு ரெனவெம துள்ளத் தடநிறை
புத்தமு தக்கடலே
தண்ணொளி பொங்கிய கருணா நிதியே
தாலோ தாலேலோ
சங்கத் தமிழின் தலைமைப் புலவா
தாலோ தாலேலோ.
29வேறு✓
தோலாத முத்தமிழ் நாவா மூவா மாவாமச்
சூர்வேர் அறத்தொடு வேலா நூலா நூலோதும்
சீலாம லைக்கொடி பாலா கீலா மேலாகும்
தேவாதி பற்கொரு தேவா ஓவா தேகூவும்
காலாயுதக்கொடி வீறா ஏறா வேறேறும்
காபாலி பெற்றகு மாரா வீரா பேராளா
சேலார்வ யற்குரு கூரா தாலோ தாலேலோ
சேனாப திப்பெரு மாளே தாலோ தாலேலோ.
30✓
ஊனாயு யிர்க்குயிர் ஆனாய் தாலோ தாலேலோ
ஓதாது ணர்ந்திடு போதா தாலோ தாலேலோ
ஆனாஅ ருட்கனு பானா தாலோ தாலேலோ
ஆயாத சொற்சொலு பாயா தாலோ தாலேலோ
நானாயெ னக்கரி தானாய் தாலோ தாலேலோ
நாதாதி கட்கனு பூதா தாலோ தாலேலோ
தேனார்பொ ழிற்குரு கூரா தாலோ தாலேலோ
சேனாப திப்பெரு மாளே தாலோ தாலேலோ.