முருகன் App
வைத்தீசுவரன்கோவில் முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
குமரகுருபர அடிகள்
சப்பாணிப்பருவம்5 / 11
வைத்தீசுவரன்கோவில் முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் · குமரகுருபர அடிகள்

சப்பாணிப்பருவம்

31✓
முடங்குந் திரைப்பரவை வயிறுளைந் தீன்றநறு
முளரிப் பிராட்டி வைத்து
முத்தாடு பச்சைப் பசுங்கிள்ளை யெனமழலை
முதிருமென் குதலைகற்பத்
தொடங்குங் குறப்பாவை கற்றைக் குழற்ககில்
தூமமொடு தாமம்இட்டுச்
சுடிகை நுதல் வெயர்வுந் துடைத்தொழுகு கத்தூரி
தூரியங் கொண்டுதீட்டிக்
குடங்கைக் கடங்கா நெடுங்கட் கடைக்கழகு
கூரஅஞ் சனமெழுதிமென்
கொங்கைத் தடத்துப் பசுங்களபம் அப்பியவள்
குற்றேவல் முற்றுமாற்றித்
தடங்குங் குமைப்புயங் கொட்டிநட மிட்டவன்
சப்பாணி கொட்டியருளே
தையல்நா யகிமருவு தெய்வநா யகன்மதலை
சப்பாணி கொட்டியருளே.
32✓
மழைக்கொந் தளக்கலப மயிலிளஞ் சாயல்நெடு
மதரரிக் கெண்டையுண்கண்
மான்கன்றை அமருலகு வாழப் பிறந்திடு
மடப்பிடியை வானவில்லைக்
குழைக்குந் தடக்கைத் திருத்தாதை நீரொடு
கொடுப்பக் குடங்கையேற்றுக்
கொழுமலர் மணங்கமழ் மணப்பந்தர் நிற்பவக்
கொம்புமின் கொடியின்ஒல்கி
இழைக்கும் பசும்பொன் தசும்பென விசும்புபொன்
இளமுலை முகங்கோட்டிநின்
றெய்யாமை நோக்கும் படைக்கட் கடைக்கணோக்
கின்னமுத முற்றவின்பம்
தழைக்கும் பெருங்காதல் வெள்ளந் திளைத்தவன்
சப்பாணி கொட்டியருளே
தையல்நா யகிமருவு தெய்வநா யகன்மதலை
சப்பாணி கொட்டியருளே.
33✓
உண்ணிலா உவகைத் தடங்கடல் படிந்திட்ட
உம்பருஞ் செங்களம்பட்
டொண்பருதி யுடல்கிழித் தோடுங் கடற்றானை
ஒளிறுவா ளவுணர்குழுவும்
தெண்ணிலா மதிநுதல் தெய்வப் பிணக்கள்வாய்த்
தேனமுது மமுதவாரித்
தெள்ளமுதும் உடனிருந் துண்ணப் பணித்திட்ட
செங்கைவேல் பைம்புனத்துப்
பண்ணுலா மழலைப் பசுங்கிளவி யெயினர்பொற்
பாவைவிழி வேலொடொப்புப்
பார்க்குந் தொறுந்தலை கவிழ்த்துநின் றவள்திருப்
பவளத்து முத்தரும்பும்
தண்ணிலா வுக்கொண் சகோரமென நின்றவன்
சப்பாணி கொட்டியருளே
தையல்நா யகிமருவு தெய்வநா யகன்மதலை
சப்பாணி கொட்டியருளே.
34✓
மடநடைத் தெய்வக் குறப்பாவை திருவுருவின்
மயிலிளஞ் சாயலுநிலா
மணிவடம் அறப்புடைத் திறுமார்ந்த கனதன
வனப்புங் குறித்துநோக்கி
இடுகிடைப் பாவிக் கினிப்பிழைப் பில்லைகொல்
எனத்திரு உளங்குழைந்தாங்
கேந்திளங் கொங்கையை இணைப்புயத் தேந்திநின்
றெல்லா உறுப்புநிற்கக்
குடமுலைக் கேயிவள் குடிப்பிறப் புக்கியை
குணங்கிடைத் ததுகொலென்றக்
கோதைநெடு நாணெய்த அவயவங்கட்குள
குணாகுணந் தனிதெரிக்கும்
தடமலர்க் கைத்தலஞ் சேந்தொளி துளும்பவொரு
சப்பாணி கொட்டியருளே
தையல்நா யகிமருவு தெய்வநா யகன்மதலை
சப்பாணி கொட்டியருளே.
35✓
விண்ணெண் கடற்புவன முடவுப் படத்தேந்து
வேந்துபொலி பாந்தள்வைப்பும்
விரிநீர் வரைப்புமெழில் விஞ்சையர் இருப்புமுகை
விண்டுநறை விரிமுண்டகக்
கண்ணன் திருப்பதமு நான்முகக் கடவுள் பூங்
கஞ்சமுங் குலிசப்பிரான்
கற்பகக் காவுநின் தொண்டர்கள் தொழும்புக்கொர்
காணியா வைத்துமற்றத்
திண்ணென் தடக்கைவெஞ் சிலைவேடர் குடிகொண்ட
சீறூரும் ஊரூர்தொறும்
செந்தினைப் புனமுடு தண்சாரல் பிறவுமாம்
சீதனக் காணிபெற்றத்
தண்ணென் குறிஞ்சித் தலந்தலை யளிப்பவன்
சப்பாணி கொட்டியருளே
தையல்நா யகிமருவு தெய்வநா யகன்மதலை
சப்பாணி கொட்டியருளே.
36வேறு✓
கடலைச் சுவற வடித்தும் இடித்துக்
கனவரை துகள்கண்டும்
கடிதில் திரிய வகுப்பதை யொப்பக்
காரவு ணக்கடலின்
உடலிற் பெருகிய குருதிக் கடல்பினா
ஓங்கலொ டோங்கவமைத்
தொட்டிய ஒட்டல ரிற்பிற கிட்டவர்
ஒழியப் பிறரையெல்லாம்
தடவுத் தாழியின் மத்தெறி தயிரின்
தத்துதி ரப்புனலில்
தசைகுடர் நிணமொடு மூளை குழம்பச்
சமர்விளை யாடல்செயும்
குடுமிச் சுடர்முடி வேலைத் தொட்டவ
கொட்டுக சப்பாணி
கொழிதமிழ் வேத புரிக்கும ரேசன்
கொட்டுக சப்பாணி.
37✓
சமரிற் பட்டவர் வெட்டிய பூதத்
தலைவர்கள் நிற்பமுதல்
தாமரை நாயகன் வயிறு கிழித்துத்
தந்தொழில் தலைநின்றாங்
கமரிற் குரிய மடக்கொடி யாரை
அலைத்தனர் பற்றியெயிற்
றவுண ரெனத்தமை யுணரார் கணவர்கள்
ஆர்ப்பில் வெடித்தபெருங்
கமரிற் குருதி பிலத்தை நிரப்பிடு
களமெதிர் கண்டினியக்
காரவு ணக்கடல் சூரொடு மாளக்
கடிதில் தடிதியடற்
குமரக் கடவு ளெனப்பணி வேலவ
கொட்டுக சப்பாணி
கொழிதமிழ் வேத புரிக்கும ரேசன்
கொட்டுக சப்பாணி.
38✓
அற்ற உடற்குறை இற்ற முடித்தலை
அங்கைத் தலம்வைத்திட்
டாடு பறந்தலை யோடுதி ரப்புனல்
ஆறு கடத்துகெனும்
சிற்றல கைக்கொரு பேரல கைப்பெண்
தேரழி யக்கழியும்
திகிரிப் பரிசில் விடப்படு சுழியில்
தெருமரல் மட்பகஞூன்
பற்றிய திரிகை திரித்து விடத்திரி
பரிசென வுஞ்சுழலும்
பம்பர மெனவும் வரும்படி அவுணர்
படக்கள வேள்விசெயாக்
கொற்ற மகட்புண ருஞ்சுடர் வேலவ
கொட்டுக சப்பாணி
கொழிதமிழ் வேத புரிக்கும ரேசன்
கொட்டுக சப்பாணி.
39வேறு✓
வளரிள வனமுலை மலைமக
ளுக்கொர்த வப்பேறே
மறிதிரை பொரநிமிர் கருணைகொ
ழித்தபெ ருக்காறே
அளியுமி னமுதெழு வெளியினில்
வைத்தசு வைத்தேனே
அறமுது தவமொடு வளரவ
ளர்த்திடு நற்றாயே
களிமயில் கடவிவி ணடையமு
டுக்கிய புத்தேளே
கலைமறை யெனுமுரல் வரியளி
மொய்த்தம லர்க்காவே
தெளிதமிழ் பழகிய மதவலி
கொட்டுக சப்பாணி
தினகர புரிவரு தனிமுதல்
கொட்டுக சப்பாணி.
40✓
கனியொடு சுவையமு தொழுகிய
சொற்பயில் தத்தாய்வேள்
கணையொடு பிணையென வுலவு
கடைக்கண் மடப்பாவாய்
நனைமலர் பொதுளிய எழிலித
ழைத்தகு ழற்கோதாய்
நளிர்புன மிசைவளர் கலபம்வி
ரித்தம யிற்பேடே
எனவொரு குறமக ளடிமுடி
வைத்தனை முத்தேவாம்
இறைவரு முறைமுறை பணியஇ
ருக்குமு தற்றேவே
சினவிடை யவரருள் மழவிடை
கொட்டுக சப்பாணி
தினகர புரிவரு தனிமுதல்
கொட்டுக சப்பாணி.