கம்பை முருகன் பிள்ளைத்தமிழ்
அலங்காரம்
அம்புலிப்பருவம்9 / 12
கம்பை முருகன் பிள்ளைத்தமிழ் · அலங்காரம்
அம்புலிப்பருவம்
61✓
தேனார்க டுக்கையணி செஞ்சடைத் தாதையின்
றிகழ்விழியின் வளர்வ தாலோ
தீக்கடவுண் மைந்தனென வந்ததோர்ந் தோகலைகள்
சேரும்வடி வங்கு றித்தோ
வானாட ருக்கமுத முதவுவது நோக்கியோ
மாலையுங் காலை யுந்தான்
மலைமேவு வாழ்க்கைக்கண் டோவுலகெ லாமுய்ய
வண்ணிழல்செய் சீர்மை கொண்டோ
மானார்க ளாயகார்கார்த் திகைவிசா கமுமன்பு
மருவவரு வதுநா டியோ
வடிவேற்கு மாரனுந் தன்னைநிகர் நண்பனென
மற்றுனை யழைக்க லுற்றா
னானாலு நின்செல்வ மென்செல்வ மாதலா
லம்புலீ யாட வாவே
யம்புயத டங்குலவு கம்பைவளர் கந்தனுட
னம்புலீ யாட வாவே.
62✓
கனகமலை நித்தன்மரு கோனிவனு நீயுமோ
கனகமலை நித்தன் மருகோன்
கயவல்லி கண்மன்ற லோனிவனு நீயுமோ
கயவல்லி கண்மன் றலோன்
பனகமிசை யுறவிருந் தோனிவனு நீயுமோ
பனகமிசை யுறவி ருந்தோன்
பருவத்து வந்தமெய் யோனிவனு நீயுமோ
பருவத்து வந்த மெய்யோன்
வனகலா தாரிசே யோனிவனு நீயுமோ
வனகலா தாரி சேயோன்
வரதவ பயக்கரத் தோனிவனு நீயுமோ
வரதவ பயக்க ரத்தோ
னனகனிவ னுக்குநீ சொல்லொத்தி பொருளல்லை
யம்புலீ யாட வாவே
யம்புய தடங்குலவு கம்பைவளர் கந்தனுட
னம்புலீ யாட வாவே.
63✓
வெம்பரிதி கொளவீந்த கலைகள்பின் கவர்தியிவன்
வேண்டியீந் தனகவர் வுறான்
மேவுகுன் றொன்றிரண் டுண்டூனக் கிவனுக்கு
விளையாட வெண்ணில் குன்றாந்
தம்பமாய்க் கடைகடலி னொந்தசைந் தாயிவன்
றன்னிலையி லணுவு மசையான்
றாயின்வா யலறவரு வாயிவன் றாயர்க
டழைத்துவாய் வாழ்த்த வருவா
னம்பன்முக் கண்ணினொரு கண்ணாயி ருத்தியிவன்
ஞானக்கண் மணியா யினா
னாடிநின் னினுமதிக னிவனென்று யாநின்று
நவில்வதொரு பொருளன் றுகா
ணாம்பொன்மலை நங்கையரு மந்ததிரு மைந்தனுட
னம்புலீ யாட வாவே
யம்புய தடங்குலவு கம்பைவளர் கந்தனுட
னம்புலீ யாட வாவே.
64✓
மைம்முக விராநினைவி டாவவ்வி ராவிவனை
வாழ்த்துபவ ரையும டைவுறா
வானிரவி யைக்கண்டு கூசுதியவ் விரவிவன்
வடிவே லொளிக்கஞ் சுமால்
பைம்முக வுராவினுக் கஞ்சுதியவ் வுரவிவன்
பரியினுக் கஞ்சு நாளும்
பயவாரி நீந்துதிய வாரியிவ னடிபரவு
பண்ணவற் கோரு முந்தா
நைம்முக களங்கநீ யகளங்க னிவனிவை
நயர்ந்துணர்நி மதியல் லையோ
நங்கள்சேய்க் கெவ்வழியு மெள்ளளவு மொப்பலை
நாடினொரு கோடி சான்றா
மைம்முகக் கடவுண்மகி முறுமுகக் குருமணியொ
டம்புலீ யாட வாவே
யம்புய தடங்குலவு கம்பைவளர் கந்தனுட
னம்புலீ யாட வாவே.
65✓
தேய்மதிய னாகென்ன நின்னுடைய சின்னமதி
தேர்ந்துவெஞ் சாப மிட்ட
சிறுவிதியை முன்றரும் பெருவிதியை யன்றருஞ்
சிரமதிற் குட்டி யன்னான்
றூய்மதி முகங்கவிழ வவமதி புரிந்துபின்
சுமதிவர வருள்செய் தவித்
தோன்றனீ சற்குருது ரோகியென் றேநன்கு
தோற்றியு ழைக்க வேயுங்
காய்மதி லெரித்தவன் றலைமே லிருந்திடுங்
கனசெல்வ முடையே னெனாக்
கருமங்கொ ணீயிவன் காலுதையி னாலொரு
கறங்கிற் சுழன்று வீழ்தி
யாய்மதிகெ டுதியுனது பேய்மதிவி டுதிசுடுதி
யம்புலீ யாட வாவே
யம்புய தடங்குலவு கம்பைவளர் கந்தனுட
னம்புலீ யாட வாவே.
66✓
மயலகன் றோர்க்குமரி தானவிக் குருராசன்
வாவென நினைக்க வியும்
வரவில்லை யென்றுசின வுந்தோறும் வேடுவர்
மடக்கொடியென் மாம டிகளார்
கயலகன் கண்மாமி மகிழநட மாடினர்
கடுப்பநின தாடலி யானுங்
காண்குறவி ரும்பினனெ னப்பிணங் கிடிலுனது
காட்சி வதனப் பகைஞனே
முயலக னெனப்பதத் தூன்றியா டும்பொழுது
முதுகிறு மெனப்ப யந்தே
முன்வரற் கஞ்சினனெ னத்தப்பு வித்தனம்
மோசம்வரு மினிநிற் றியே
லயலகன் பழிபடுதி யன்பரன் புக்கெளிய
யம்புலீ யாட வாவே
யம்புய தடங்குலவு கம்பைவளர் கந்தனுட
னம்புலீ யாட வாவே.
67✓
சிவனென்ன வரியென்ன வயனென்ன விந்திரன்
றேவர்முனி வோர்க ளென்னச்
செகதலத் தோரென்ன விவரெலாஞ் சந்ததஞ்
சிந்தித்து வந்திக் குமோ
ரிவனென்ன நீயென்ன விவனுனை யழைத்திடற்
கென்னமா தவமி ழைத்தா
யேனென்ன விதுவரையும் வந்துகேட் டாயில்லை
யென்னநின் னிறுமாப் புகா
ணுவனென்ன நின்றநவ வீரருண் முதல்வீர
னுற்றுனைக் காலா லுதைத்
தொருசகட் டினினுருட் டிக்கொண்டு வருவனிது
வுண்மைநீ யுய்ய வெண்ணி
னவனென்ன வவளென்ன வதுவென்ன நின்றவனொ
டம்புலீ யாட வாவே
யம்புய தடங்குலவு கம்பைவளர் கந்தனுட
னம்புலீ யாட வாவே.
68✓
கமலமட மங்கைவத னத்தழகு காண்பளக்
கரியமுகில் வண்ண னுஞ்செங்
கண்ணழகு காண்பன்வளர் கலைவாணி சொல்லழகு
காண்பன்முக் கட்டா தையும்
விமலமுறு சொற்பொருளி னழகுகாண் பன்விதி
வியன் கரத் தழகு காண்பான்
வீறுதோ ளழகிந்தி ராணிகாண் பாளும்பர்
வேந்துவே லழகு காண்பா
னிமலமன வடியரடி யழகுகாண் பார்கவுரி
நின்றுபின் னழகு காண்பா
ணின்னொத்த வாதித்தன் வடிவழகு காண்பனொரு
நீயுமவ ரொடுகு ழுமியே
யமலமென் னகையழகு காணலாஞ் சமயமீ
தம்புலீ யாட வாவே
யம்புய தடங்குலவு கம்பைவளர் கந்தனுட
னம்புலீ யாட வாவே.
69✓
சொற்கால மிருமூன்று மன்பர்கள ழைக்குமுன்
றுன்னுற வணங்கி மிக்க
துதிசெய்து கதியெய்து சந்நிதா னப்பெருமை
சொல்லுதற் கெளிய தலநீ
முற்கால முற்றமா பாபமுஞ் சாபமும்
மோயாத கயரோ கமும்
முயலெனுங் கறையும்வரு கோட்கஞ்சு குழையுமெய்ம்
முதுகூனு நீங்க வென்றாற்
றற்காலம் வந்திடுக வுய்யலாஞ் சரவணத்
தனையனு மழைக்க லுற்றான்
றாதைபா லஞ்சுதலை யுண்டிவன் பாலாறு
தலையுண் டமர்ந்து வாழ்வா
யற்கால மதியுனது நற்கால மிக்கால
மம்புலீ யாட வாவே
யம்புய தடங்குலவு கம்பைவளர் கந்தனுட
னம்புலீ யாட வாவே.
70✓
முகிலாண்ட வண்ணமா துலனிதய மாமியா
முளரிமா னொடுபாற் கடன்
மொய்யழற் றந்தைமுக மன்பனா மத்திரி
முனித்தகை விழிக்கண் வந்தாய்
நிகிலாண்ட பிண்டமு நிறைந்தசங் கரபிதா
நேத்திரத் தினும மர்ந்தாய்
நின்னையம் முறையினெம் முறையினா யினுமன்பி
னீவா வெனக்கூ வினான்
புகிலாண்ட லைத்துவச வெமதாண்ட வன்கருணை
பூண்டளவ ளாவி வாழ்வாய்
புலனறிக லாநிதி மதிக்கடவு ளுன்பெரும்
புண்ணியத் தவமென் கொலோ
வகிலாண்ட கோடிபிர மாண்டநா யககுகனொ
டம்புலீ யாட வாவே
யம்புய தடங்குலவு கம்பைவளர் கந்தனுட
னம்புலீ யாட வாவே.