கம்பை முருகன் பிள்ளைத்தமிழ்
அலங்காரம்
காப்புப்பருவம்3 / 12
கம்பை முருகன் பிள்ளைத்தமிழ் · அலங்காரம்
காப்புப்பருவம்
1திருமால்✓
உலகநிலை முழுதாகி யுயிர்களுக் குயிராகி
யோங்கரன் றனது தொல்லை
யோரரறு வதனுதல் விழியாறு தீப்பொறியி
னுற்றெரியும் வாயு வுங்கொண்
டிலகவரு சுரநதியின் விடவநதி சரவணையி
னினிதுய்க்க வாறு மகவா
யின்பின்வளர் நங்கார்த்தி கேயனைக் கம்பைவள
ரிளையோனை நனிபு ரக்கத்
திலகநுதன் மாதிலக் குமிமின்ன வொண்கரச்
செந்தா மரைக்க ணமருந்
திண்பாஞ்ச சன்னிய மிடிக்கநற் சார்ங்கமது
திகழோங்கு வான்வில் லிடக்
கலகவினை வெங்கொடை தணியமன் னுயிரெனுங்
கவினோங்கு பயிர்த ழைப்பக்
கருணைமழை பொழிகட்க தண்டசக் கரதரண
கருமுகிலை வாழ்த்து துமரோ.
2நருமதேச்சுரர்✓
வேறு
இமகிரண மதியுமெரி விடவரவு முறவுகொடு
வினிதுவாழ் செஞ்சடைத் தோற்றனை
யிமையவர்கண் முறையிடமு னலைகடலில் வருகடுவு
ணெழிலுலா வுங்களத் தேற்றனை
நமபயம தகலுமென வழிபடுநன் மதலையெதிர்
நமனைவீ சும்பதக் கூற்றனை
நவநிலையின் மிசைநிலவு சிவனையடி யவர்பரவு
நருமதே சன்றனைப் போற்றுவாம்
விமலமுறு சதுமறையி னுளபொருளை யறிவரிய
விதியின்மே லுந்துநற் சீற்றனை
வியனுலகு கதியடைய வருளுமுயர் பிரமனென
மிளிரவே நின்றமெய்ச் சாற்றனை
யமரர்முனி வரர்நரர்கள் குமரகுரு வெனுமொலியி
னழகுசேர் கம்பையுட் பேற்றனை
யயிலவனை மயிலவனை யமலைதரு திருமகனை
யருளுமா கந்தனைக் காக்கவே.
3சௌந்தரநாயகியம்மை✓
வேறு
பாணுற்ற தும்புருவி னோடுற்ற தண்டுமுனி
பாடப்ப ணிந்தடியர் நின்றுமிக் கேத்தவே
பாதத்த ணிந்தசதுர் வேதச்சி லம்பொலிகள்
பாரச் செழும்பவ னமெங்குமுற் றார்க்கவே
தாணுற்ற வின்பநட மேவிக்க ணுண்டுயிர்க
தாமற்பி னுய்ந்திடமெ யின்பினிற் சேர்க்கவே
சாலப்பெ ருங்கருணை யேலப்பொ ழிந்திடுமோர்
தாயைச்ச வுந்தரம டந்தையைப் போற்றுவா
மாணுற்ற வைந்தருவின் மேலுற்ற நுங்கனிகள்
வானத்தர் நுங்கவுத வும்பொழிற் சேக்கைமேன்
மாலுற்று வந்துதிரு மானிற்பி றந்தகுற
மானைப்பு ணர்ந்தமுரு கன்றனக் கேற்றசீர்
காணுற் றகன்றிலது வாழ்வுற்ற னன்பொருவு
காருற் றமர்ந்துதுயில் சுந்தரக் காட்சிசேர்
காதற் றலங்களினு மேருற்ற கம்பைவளர்
காளைக் குழந்தையையொர் கந்தனைக் காக்கவே.
4சித்திவிநாயகர்✓
வேறு
நலனுறு துதிகண வின்றடி வணங்கி
நயந்துறு குழுவலன் பினர்க்குப்
பலன்மிக வளிக்குங் கம்பையம் பதிவாழ்
பாலவேற் குமரனைக் காக்க
இலகுவெண் கோடு மதம்பத மொன்றொன்
றிரண்டொடு கைகணா லொன்றும்
வலனுற மிகுந்து மறைந்திடக் குறமான்
வணங்குமுன் வருசித்தி யிபமே.
5திருநீறு
வேறு✓
மயர்வறு ஞான மாமணி விளக்கை
மன்னுசீர் மோனமெய்ந் நிலையை
வரத்தொடு போக்கி லாதநற் கதியை
வணங்குநர்க் களிக்குமொண் ணிதியைச்
செயமுறும் வடிவே லேந்துமெம் மரசைத்
தேவர்கள் சேனைநா யகனைத்
திகழ்பெறு கம்பை நகருறை கருணைச்
சேயனைத் தூயனைப் புரக்க
வுயர்சிவ மறையோன் விமலைபார்ப் பனியா
யூழியின் வெள்ளநீ ராக
வுலப்பிலா வண்ட மண்டப மாக
வுரைதரை வேதிகை யாய்மா
லயன்முத றேவ ரவிகளா யுயிர்க
ளாக்களாய் நுதற்கணாங் குண்டத்
தக்கினி யாற்செய் வேள்வியி லுதித்த
வற்புத பரமவெ ணீறே.
6உருத்திராட்சம்✓
வேறு
மன்மணி யெனக்கொடு கவுத்துவம ணிந்தமணி
வண்ணனெண் கண்ணன் முதலாம்
வானவரு மணிமணி கிரீவசர ணசுரவிருண்
மாய்த்தெமைக் காக்கு ஞான
நன்மணி யளித்தியென் றோலிடக் கண்ணுத
னயந்துதவு குமர மணியாய்
நகரமணி யாங்கம்பை மேவுசுப் பிரமணிய
நாதனை யுவந்து காக்க
பொன்மணி பளிங்குமணி சங்குமணி பவளமணி
புத்திரத் தீப மணியம்
புயமணி துழாய்மணியி ரசமணிவெண் முத்துமணி
பொலியுமா மணியா தியாம்
பன்மணிக ளுக்குஞ்சி ரோமணிய தாகிப்
பரிந்தணிந் தார்கள் பாவம்
பாற்றியிக பரசுகந் தந்திடு நிறைந்திறும்
பரசிவன் கண்ணின் மணியே.
7பஞ்சாட்சரம்✓
வேறு
மறப்பெருஞ் சூர்மா மரனட்ட வேலு
மயிலுமென் றேத்துநர் வாழுஞ்
சிறப்பெலா நிறைந்த கம்பையம் பதிவாழ்
திகழ்சடக் கரன்றனைப் புரக்க
பிறப்பெனுங் கடற்கோர் பெரும்புணை யாகிப்
பேரின்ப முத்தியங் கரைசேர்த்
தறப்பெருந் தாயை யப்பனைக் காட்டு
மஞ்செழுத் தாயமந் திரமே.
8திருமகள்✓
வேறு
மாயவனை மாநினக் காசையார் மீதென்ன
மாலுமென் புகல்வன் மற்றென்
மார்பினுறை பூமங்கை நீயென்ன மண்ணுண்ட
வாய்ச்சொனிச் சயம தாமே
யேயவனை வண்டுழாய்க் காட்டினிற் கார்வமிலை
யேயென விருந்தைக் குமே
லினியைநீ யென்றுநகை புரியுமால் சொற்கவைக்
கிளகுபொன் மகளை நினைவா
மேயவனை முத்துவெண் சாந்தாற்றி நவமணி
விளங்குநவ நிலைசெய் துமா
மேருகிரி நிகரோங்கு சிகரிமுகி லிரவிமதி
மீன்மண் டலத்த ளாவி
நேயவனை மார்களாங் கார்த்திகைப் பெண்களை
நெருங்கிமுரு கைய னொண்சீர்
நிகழ்வுரை செயவடைந் தென்னவளர் கம்பையுண்
ணிமலனைக் காக்க வென்றே.
9கலைமகள்✓
கள்ளையுண் டளியினங் கானஞ்செய் வெள்ளையங்
கஞ்சா தனத்தி னுஞ்செங்
கஞ்சாதனக் கிழவ னாவா தனத்தினுங்
காதலி னுறைந்து கவினார்
வெள்ளையணி வெள்ளையுடை பூண்டுடுத் தொளிர்மேனி
வெள்ளையாய்க் கொண்ட வதனான்
வெள்ளைமதி யினனென்று தள்ளாதெ னுள்ளமும்
விரும்பியமர் தாயை நினைவாம்
பிள்ளைமதி வேணியணி பித்தருக் கினியவோர்
பிள்ளையா யவத ரித்தும்
பிரணவ மகாமந்தி ரோபதே சஞ்செய்த
பெரியகுரு நாத னாகிக்
கிள்ளையை யகற்றல்போற் கூய்ப்புனத் துறைகுறக்
கிள்ளையைக் களவு செய்த
கிழவனைக் குமரனைக் கம்பைவரு பாலனைக்
கேண்மையொடு காக்க வென்றே.
10பிரமன், சத்தமாதர், இந்திரன், பலதேவர்.
வேறு✓
செப்பத்து விதப்பொரு ளாய்க்காஞ்சி காசி
திருநகர்வா ழம்மையப்பர் திகழுங் கண்ணே
யொப்பத்துப் பிதழ்மடவார் பாட லோவா
வுயர்கம்பை யுறைகுகனை யுவந்து காக்க
விப்பத்துத் திசைப்புவனம் படைக்கும் வேத
னெழுமாதர் சதகோடி யேந்துங் கையான்
முப்பத்து முக்கோடி தேவர் யார்க்கு
முகமலர்ந்து பலகோடி முகமன் சொல்வாம்.