கச்சிக் குமரகோட்டக் கடவுள் பிள்ளைத்தமிழ்
அரன்வாயல் வேங்கடசுப்புப்பிள்ளை
சிற்றில்பருவம்10 / 12
கச்சிக் குமரகோட்டக் கடவுள் பிள்ளைத்தமிழ் · அரன்வாயல் வேங்கடசுப்புப்பிள்ளை
சிற்றில்பருவம்
78✓
ஒளிர்பைஞ் ஞீலப் புவனமெலா
முனதா டரங்கின் வகுத்தகன்னி
யுமையாள் மகிழ்ந்துன் றிருமேனி
யொழுகு மழகு முகந்துண்டு
குளிர்கண் காண வென்னருமைக்
குழந்தா யாடி வருகவெனக்
கோல முற்றத் துணைவிடுப்பக்
குறுகி யாஞ்செய் மணல்வீட்டை
யெளிதி லழிப்ப தறனேயோ
விருஞ்சேற் றுவயற் குரம்புதொறு
மிமிழ்வெண் பணில மிப்பியுளைந்
தீன்ற முத்த நிலவினகுந்
தெளிநீர்க் காஞ்சி நகர்க்குமரா
சிறியேஞ் சிற்றில் சிதையேலே
சீர்சால் குமர கோட்டத்தெஞ்
செல்வா சிற்றில் சிதையேலே.
79✓
கன்னி யன்னக் குழாங்குலவு
கமல மலர்ந்த கடற்கூலங்
கவினு முத்தக் குவைவாரிக்
கருத்திற் கிசைந்த படியாங்க
ளுன்னி வகுத்த மணியரங்க
முன்பொற் சதங்கைச் சீறடிக
ளுறுத்த நெய்த்தோர் குழம்பவழித்
தோடி லுறுபே றென்னைகொலோ
மின்னி முகில்பெய் சரற்கால
விண்ணத் தியங்கு மதியாடி
விண்மீன் மாலை பெற வேட்டு
மின்னா ரேறு நீண்மாடச்
சென்னிக் காஞ்சி நகர்க்குமரா
சிறியேஞ் சிற்றில் சிதையேலே
சீர்சால் குமர கோட்டத்தெஞ்
செல்வா சிற்றில் சிதையேலே.
80✓
மொழிக்கு மொழியின் னமுதொழுக்கு
முகிழ்வெண் ணகைச்செவ் வாய்க்கொடிச்சி
முலைவெம் முயக்கத் தவளடிகண்
முடிமேற் புனைந்து முழுநீல
விழிக்கு னழகு விருந்தூட்டி
மிச்சின் மிசைந்து வேட்டபணி
விரைந்தாற் றியது மொழிந்தேமா
வெள்ளை யானை மகளூடிப்
பழிக்க நின்ற தறைந்தேமா
பணியா துன்னை யிகழ்ந்தேமா
பல்கா னெறிச்சென் றிமிழ்திரைநீர்ப்
பாலி பாய வயற்பைங்கூழ்
செழிக்குந் தொண்டை நன்னாடா
சிறியேஞ் சிற்றில் சிதையேலே
சீர்சால் குமர கோட்டத்தெஞ்
செல்வா சிற்றில் சிதையேலே.
81✓
கருத்துங் கண்ணுங் கலந்துவப்பக்
கனிவாய் முத்தா ருட்சிவனார்
கங்கைச் சடையி லெண்டோளிற்
கவுரி யம்மை மடித்தலத்தின்
மருத்துங் கவனச் சிலம்பிலன்பர்
மனத்தில் வேதா கமமுடியின்
வதிந்து குனிக்கு மலரடிகள்
வருந்த வெங்கள் வண்டன்மனை
மிருத்து மாசு படச்சிதைக்க
மிறையென் புரிந்தேம் பொங்கழியில்
விரவிச் சாலி யொடுமுத்தும்
விளங்கக் களங்கண் டுழவர்மகிழ்
திருத்தொண் டீர நன்னாடா
சிறியேஞ் சிற்றில் சிதையேலே
சீர்சால் குமர கோட்டத்தெஞ்
செல்வா சிற்றில் சிதையேலே.
82✓
கருவே ரறுக்கு நின்கமலக்
கடைக்கட் கருணை மலர்நோக்கிற்
கனிந்த வருட்பே றடைந்திடவெண்
காற்புள் ளனையார் தொண்டர்சில
ரிருவே றுலகத் தருந்தவஞ்செய்
தேத்தி யிருப்ப வவர்க்கருளா
தெம்மை யடைந்தாய் நின்வருகை
யெங்கட் கின்ப முடைத்தாக
மருவேய் கூந்தற் காமக்கண்
மடந்தை தனக்கு மாலாதி
வானோர் தமக்கும் வரங்கணல்கி
மாத்தண் ணிழலில் வீற்றிருக்குந்
திருவே கம்பர் கட்புதல்வா
சிறியேஞ் சிற்றில் சிதையேலே
சீர்சால் குமர கோட்டத்தெஞ்
செல்வா சிற்றில் சிதையேலே.
83வேறு✓
கொற்றமிகு திருவருட் பேராற்ற லாற்கொடுங்
கொலைபுலை மறங்க ணீக்கிக்
கோளறுஞ் சன்மார்க்க நெறியொன்று பொதுமையிற்
குவலய மெலாந் தழைப்ப
நற்றவர் புகழ்ந்தேத்த வொளிர்ஞான சித்தனாய்
நண்ணிவெங் கலியின் வன்மை
நலிவுறச் சித்தாட நீதிரு வுளம்புரியு
நாளையெதிர் நோக்கி நின்றே
முற்றறிவி னுணர்திமற் றுணரா யெனப்பல
மொழிந்திங்கு மங்கு மோடி
முன்னிற்கு நினைமறந் தொழிபோதெ மறதியை
முனிந்தருளு மூர்த்தி யொப்பச்
சிற்றறிவி னேஞ்செய்து விளையாடு மிம்மணற்
சிற்றில் சிதைத்தி டேலே
தெய்வானை வள்ளிபுணர் குமரகோட் டச்செட்டி
சிற்றில் சிதைத்தி டேலே.
84✓
மூலமுத லாதார மூவிரண் டுச்சியின்
மூவாத மலர்மாளிகை
முன்னிச் சமைத்தெம் முடற்கோயி லுண்மன்னி
முதல்வநீ விளையாடல்போற்
கோலமிகு பலபெயர்ச் சிற்றறை வகுத்துட்
குயிற்றிய வடுக்களையினிற்
குமுதத் தடுக்கிய குறட்டினிற் செம்மணிக்
குவையொளித் தீயை மூட்டி
வாலரிசி முத்தென வுலைப்பெய்து சிறியே
மகிழ்ந்தட்ட வின்னடிசினின்
வயிறார வுண்கபின் மிச்சிலுண் பேமெங்கள்
வாஞ்சைக் குடம்படாமே
சீலமொடி யாஞ்செய்து விளையாடு மிம்மணற்
சிற்றில் சிதைத்தி டேலே
தெய்வானை வள்ளிபுணர் குமரகோட் டச்செட்டி
சிற்றில் சிதைத்தி டேலே.
85✓
கொல்லாமை புன்புலா லுண்ணாமை யறமெனக்
கூறினுங் கேளார்களைக்
கொடியகள் ளுண்டுமயன் மனைவிழைந் துங்களவு
கொண்டும்வல் லாடுநர்களை
யில்லாமை யாற்குறை யிரப்பார் தமக்கணுவு
மீயா வுலோபர் தம்மை
யியலும்வரு ணாச்சிரம நெறிகடந் திருமையிலு
மெய்தின் பிழக்குமவரை
நல்லாமை போற்பொறி யடக்காது மெய்வேட
நாடகங் காட்டுவாரை
நன்றுனைப் பாடாது மானிடம் பாடுபுன்
னாவரை மனந்திருத்தச்
செல்லாமை வந்தெம்மை யெதிரெனக் கொண்டெமது
சிற்றில் சிதைத்தி டேலே
தெய்வானை வள்ளிபுணர் குமரகோட் டச்செட்டி
சிற்றில் சிதைத்தி டேலே.
86வேறு
தனனா தனன தாத்தத்
தனனா தத்தத் தனதானா✓
பொறியோ கவரும் வேட்கைப்
புலனோ புத்திக் குறவாகா
புவிமே லிலகு தோற்றப்
பொருளோ பொய்க்குப் பிறிதாகா
நெறியா லுயிரின் மேற்பட்
டுறைவாய் நித்தப் பொருளானாய்
நினையே யடையு மார்க்கத்
தினிலே நிற்றற் கெமையாள்வாய்
பிரியா விருளி னீக்கித்
தனுவார் பெத்தத் திசையூடே
பறழா துணைவ யூட்டிற்
கனைநேர் பெட்புற் றொளிர்வாயே
சிறியோ மடியர் கூட்டத்
தயலோ சிற்றிற் சிதையேலே
திருவாழ் குமர கோட்டத்
தரசே சிற்றிற் சிதையேலே.
87தாத்த தனன தாத்த தனன
தத்தத் தனதானா✓
கூற்ற மனைய தோற்ற மருவு
கொக்கைக் கிளையோடே
கூர்த்த வயிலின் மாய்த்து நிலவு
கொற்றத் தினைவானோர்
சாற்ற வுயர்வி ணாட்டை யுதவு
தற்குத் தளராயே
தாட்டீ யகல வேட்கு மறவர்
தத்தைக் கினியாய்நீ
யேற்ற முடிவி லாற்ற லொளிர
வெட்டுத் திசையாள்வா
ரேத்த மயிலின் மேற்செல் பவனி
யெற்றைக் கருள்வாயோ
தேற்றி யெமையு மாட்கொள் குரவ
சிற்றிற் சிதையேலே
சீர்த்த குமர கோட்ட முருக
சிற்றிற் சிதையேலே.