முருகன் App
கச்சிக் குமரகோட்டக் கடவுள் பிள்ளைத்தமிழ்
அரன்வாயல் வேங்கடசுப்புப்பிள்ளை
தாலப்பருவம்5 / 12
கச்சிக் குமரகோட்டக் கடவுள் பிள்ளைத்தமிழ் · அரன்வாயல் வேங்கடசுப்புப்பிள்ளை

தாலப்பருவம்

28✓
கண்ணிற் சிறந்த வளங்காட்டுங்
கமஞ்சூலெழிலிக் குப்பாயங்
கவினப் போர்த்த பொங்கரினுட்
கங்குலிரிய நாகமணி
விண்ணிற் கதிர்போல் வெயில்பரப்ப
விரித்துக்கலாப மயினடிப்ப
வேரி மலர்த்தே னளிமிசைந்து
விளரிநறும்பண் மிழற்றவய
எண்ணிக் கொன்றை பொன்சொரிய
நன்னீர்வாவிச் செழுங்கமல
நடுவீற் றிருந்து வெள்ளெகின
நன்றுநோக்கிக் கேட்டுவக்கு
மண்ணிற் சிறந்த தமிழ்க்காஞ்சி
வாழ்வேதாலோ தாலேலோ
தமர்தீர் குமரக் கோட்டமமர்
வரதாதாலோ தாலேலோ.
29✓
நீறு பூசி மணிபுனைந்து
நிலாவெண்டிங்கண் முடிதோய்ந்து
நிமலன் போலு நிவந்தபல
நெடுமாளிகைக ளவன்றனருட்
கூறு பூத்த பசுங்காமக்
கோட்டிபுகழ்போற் பரந்தவற்றுட்
குலவுங் காம தேனுவன்னார்
கூவியிரப்போர் பசிப்பிணிக்குச்
சோறு மினிய சுவைக்கறியுந்
தொலையாதெடுத்து வழங்குதொறுஞ்
சொக்க நாதர் குறட்களித்த
சொன்றிக்குழிபோல் வளர்ந்தறத்தின்
வீறு காட்டுங் காஞ்சியுட்செவ்
வேளேதாலோ தாலேலோ
விளங்குங் குமரக் கோட்டவடி
வேலாதாலோ தாலேலோ.
30✓
தேமாந் தருக்கு விளக்கமுறச்
சிவன்வீற்றிருக்கு மறைவடிவத்
தேமாந் தருவொன் றீண்டுளது
தேவதாரு வைந்தினிழற்
கோமா னிதிக்கோ னயனெடுமால்
குலவும்பதமு மேற்பதமுங்
குளிர்பே ரன்பிற் சூழ்வார்க்குக்
கொடுக்குந்தகைய தெனப்பெரியோ
ரேமாந் திராம லெப்போழ்து
மிறுமாந்ததனைச் சூழ்ந்துய்வா
ரிமையா விழியீர் நீரும்வம்மி
னெனல்போற்புட்க ளொலிக்கும்விண்டோய்
மாமாண் பொதும்பர் புனைகாஞ்சி
வாழ்வேதாலோ தாலேலோ
மதிக்குங் குமரக் கோட்டமுழு
மணியேதாலோ தாலேலோ.
31✓
நல்வங் கணத்தா னின்றனையு
நால்வாய்த்தந்தி முகத்தனையு
நவிநேர் காம நோக்கியையு
நாரவேணி நம்பனையும்
வில்வங் கடுக்கை யாதிநறு
மென்பூத்தூவி யருச்சித்து
விரும்புஞ் சரியை கிரியையுடன்
மேவியோக ஞானத்தாற்
பல்வந் தனைக ளாற்றிவழி
படுவேதியராற் றந்திரந்தேர்
பவராஞ் சைவ தேசிகராற்
பத்தர்குழுவாற் சிவநேசச்
செல்வங் கொழிக்குங் காஞ்சிநகர்ச்
சேயேதாலோ தாலேலோ
சீரார் குமரக் கோட்டமமர்
சேந்தாதாலோ தாலேலோ.
32✓
பத்திக் கடலிற் படிந்தாடிப்
பாசமாசு தவிர்ந்துபரி
பாக மென்பூந் துகிலுடுத்துப்
பற்பக்கவச மணிந்திதய
சுத்திப் பீட மிசையிருந்து
தூயபஞ்சாக் கரமோதிச்
சோதி பதந்தாழ்ந் தருளமுதந்
துய்த்துஞான மகட்புணர்ந்து
சித்திச் செல்வ மோரெட்டுஞ்
சேர்ந்தத்துவிதப் பெருவாழ்விற்
சிறக்கு மினிய சிவபோகந்
திளைக்கும்பெரியோர் குழாம்பரவு
முத்தித் தலமாந் திருக்காஞ்சி
முதல்வாதாலோ தாலேலோ
முதுசீர்க் குமரக் கோட்டத்துண்
முருகாதாலோ தாலேலோ.
33வேறு✓
பண்மது ரத்தமிழ் பாடிய பாவலர்
பக்கத் துணைவோனே
பரம னகப்பொரு ளுக்குரை கண்டருள்
பாவலர் சிங்கேறே
யுண்மதி மிக்கபொய் யாமொழி வாண
னுரைத்திடு கவிநசையா
யொண்கனி தந்துமு னௌவைசெவ் வாய்மொழி
யொருசில கவிகேட்பாய்
வெண்மதி யேனும் புகழ வியக்கும்வி
ருப்புறு செவ்வேளே
விரிதரு காந்தந் தமிழில் விரித்துரை
வேதிய னுக்கருள்கூர்
தண்மதி யம்பொரு சண்முக தேசிக
தாலோ தாலேலோ
சதிர்மிகு குமரக் கோட்டத் ததிபதி
தாலோ தாலேலோ.
34✓
கங்கைப் புனன்மக ளன்பு செயத்தகு
கான்முளை யாமுருகா
கந்தச் சரவண வாவி பிறந்தொளிர்
கந்தா விமயமலை
மங்கைக் கிருகண் மணியினுண் மணியெனு
மைந்தா விந்தார்விண்
வளரறு மீனார் முலையமு துண்டு
வளர்ந்த குழந்தாய்வார்க்
கொங்கைக் களபக் குஞ்சரி மஞ்சரி
குலவுங் குழன்மறமான்
கொண்கா வண்கா ருள்ளிய வள்ளற்
கொடையாய் நடையார்முச்
சங்கத் தமிழுணர் தலைமைப் புலவா
தாலோ தாலேலோ
சதிர்மிகு குமரக் கோட்டத் ததிபதி
தாலோ தாலேலோ.
35✓
அம்பல நர்தக மாடுஞ் சங்கர
னங்கணில் வந்தோனே
யன்பரு ளம்போ ருகமிக விகசித
மடைய வருஞ்சோதீ
வம்பல ரிட்டு வணங்குநர் சென்னியின்
மன்னு மலர்த்தாளா
மணமுறு நீபத் தொடையணி பன்னிரு
வரைபொரு திண்டோளா
கம்பல மாநர சிங்கத் துரிபுனை
கடவுட் கிளையோனே
காலா யுதநெடு வேலா யுதமொடு
கலப மயூரமுமே
தம்பல மென்பவர் தங்கள் சகாயா
தாலோ தாலேலோ
சதிர்மிகு குமரக் கோட்டத் ததிபதி
தாலோ தாலேலோ.
36வேறு தத்தன தனனத் தாத்தத் தத்தன தானா தானானா✓
கற்புறு நெறியிற் போற்றித் தற்கெதிர்
காணா தேசோர்வாள்
கைத்தலம் வளரக் காத்துச் கர்ப்பவொர்
காலே போனேர்வாய்
விற்புறு வமதைக் கோட்டிக் கட்கணை
வீறே காதேவா
வெற்றிகொண் மறவர்க் காக்கத் தத்தையின்
மீதே மாலோவா
யெற்பணி புரியத் தேற்றிக் கைப்பொரு
ளீவாய் மூவாதா
யிட்டள வறுமைக் கூற்றைச் செற்றிடு
மேவே போல்வானே
தற்பர குமரக் கோட்டச் சிற்பர
தாலோ தாலேலோ
தத்துவ வுலகத் தேர்க்கச் சொத்தவ
தாலோ தாலேலோ.
37தந்தன தனனத் தாத்தந் தந்தன தானா தானானா✓
மங்கல மருவிச் சீர்க்கும் பைந்தரு
வானோர் கோமானே
வன்கலி யகலக் காக்குந் தண்கொடை
மாறா தீவோனே
திங்களி னமுதிற் றேக்குங் கொங்கவிழ்
தேனார் தார்மார்பா
செங்கதி ரொளியைக் காட்டுந் திண்பெறு
சீரார் கூர்வேலா
தொங்கல்செய் கலபத் தேற்குங் கண்புனை
தூய்தா மேகாரா
தொண்டருய் வகையைக் கூட்டுங் குஞ்சரி
தோய்தோ ளீராரா
சங்கரர் விழியிற் றோற்றும் புங்கவ
தாலோ தாலேலோ
தண்டரு குமரக் கோட்டங் கொண்டவ
தாலோ தாலேலோ.