முருகன் App
கச்சிக் குமரகோட்டக் கடவுள் பிள்ளைத்தமிழ்
அரன்வாயல் வேங்கடசுப்புப்பிள்ளை
வருகைப்பருவம்8 / 12
கச்சிக் குமரகோட்டக் கடவுள் பிள்ளைத்தமிழ் · அரன்வாயல் வேங்கடசுப்புப்பிள்ளை

வருகைப்பருவம்

58✓
கங்கையங் கோடீர மகுடனென் கண்மணிக்
கடவுளென் றேசிகனெனக்
கயமா முகத்தனென் றுணையெனப் பன்னியர்கள்
கெளரியெங் காதலனெனச்
செங்கமலை யருகனென் மருகனென விதியெனைச்
சிறைசெய்த விறையவனெனத்
தேவர்கோ னெமதுசே னாபதி யெனக்கலைச்
செல்விகுறு முனிகவிஞரெஞ்
சங்கையற வருளுமுழு நாவல னெனத்தாந்
தனித்தனி வியந்துபுகழத்
தகுமனையர் நாப்பணவர் மாதவமுருக் கொண்டு
தகவினடை மேவி வரல்போற்
றிங்கண்முக மூவிரண் டம்புயமு நான்குமிளிர்
தெய்வநா யகன்வருகவே
சீர்க்குமர கோட்டத் திருந்தெலாஞ் செயவல்ல
சித்தர்பெரு மான்வருகவே.
59✓
மவுனவின் பச்செழுந் தேறல்பாய் வாரிச
மலர்த்தாட் சிலம்பலம்ப
மாழையி னியற்றுதிரு வரைஞாண் வயங்குபன்
மணியினங் கிண்கிணென்ன
நவமணி யிழைத்தபொற் கங்கணமு நான்கிலு
நலம்பெற நிறைந்தொலிப்ப
நகுவாகுவலயத் தடந்தோட் கடம்பினொடு
நாறுமளி பாண்மிழற்றக்
கவின்மகர குண்டலம் பரிதிமண் டலமெனக்
கதிர்கால விருமூன்றுவெண்
கலைமருவு திங்கண்முக மண்டலத் தீராறு
கண்களுங் கருணைபொழியச்
சிவனைமுத லியதேவர் வாழ்த்து திருவருண்ஞான
தேசிகோத் தமன்வருகவே
சீர்க்குமர கோட்டத் திருந்தெலாஞ் செயவல்ல
சித்தர்பெரு மான்வருகவே.
60✓
பாசொளிய மரகதத் திருமேனி யுமைமலர்ப்
பாதச் சிலம்பின் வந்துன்
பாற்படைத் துணைவீர ராமருவு மோரொன்
பதின்மரும் புடைசூழ்வரப்
பேசனையர் நாப்பணெம தய்யநீ வருபரிசு
பிரமன்முத லாகுமொன்பான்
பேருருவு கொண்டனைய ருடனாகு முதலாய்ப்
பிறங்குநவ கண்டநடுவில்
வீசுபுகழ் மேருபோ லாதார மாநிலையும்
வெய்யவனை யாதிகோள்கள்
வினையுற நடாத்துமொரு துருவனிக ராற்றலும்
விளக்கிவரன் மானுமென்னத்
தேசுருச் சித்தசன வாவுகட் டழகுடைச்
செல்வமுரு கோன்வருகவே
சீர்க்குமர கோட்டத் திருந்தெலாஞ் செயவல்ல
சித்தர்பெரு மான்வருகவே.
61✓
மித்தையிருள் சீயக்குமொரு சோதிமர கதவெற்பின்
மேலெழுங் காட்சிபொருவ
மிளிர்பசுங் கட்பீலி மேனிமுற் றிடமுதுகில்
வீற்றிருந் தெண்டிக்கினு
மத்திசைப் பாலகர் வணங்கிடப் பவனிபோந்
தவனிப் பரப்புமுழுது
மாயிரம் பைத்தலைப் பாந்தளுட னெளியநட
மாடியைஞ் சிறைபுடைத்துக்
கத்துகட னீர்வற்ற வெண்சண்ட மாருதக்
காலினையெழுப்பி யோரெண்
கார்வரையு நாகமுங் களிறுநிலை மாறவொரு
கடிகையில்வலங் கொள்கதிகூர்
சித்திர மயிற்பரி செலுத்திவரு சேவகத்
திருமுருக வேள்வருகவே
சீர்க்குமர கோட்டத் திருந்தெலாஞ் செயவல்ல
சித்தர்பெரு மான்வருகவே.
62✓
முந்நீர் முளைத்துநிமிர் சடையண்ட முகடேற
முடிகடலி னகடுதாழ
முரண்மாத் தடங்கவடு திசைவிளிம் பினைமுட்ட
முழுவெளி நிறைத்துமுடித்
தன்னீர்மை தடுமாறி மாயமாங் கொக்குருச்
சார்ந்துபொரு சூரனுடலந்
தான்போழ்ந்து மலையைப் பொடித்துமற் றசுரர்தந்
தானையின் முனைந்திகன்ற
வெந்நீர்மை யோரைத் தடிந்துயர் பிணக்குவியல்
வேதாள மாதிமிசைய
விழைவொடு விருந்தூட்டி வெற்றிகொண் டிமையவரை
விண்ணேற்றி வாழ்வளிக்குஞ்
செந்நீர் நிணங்குலவு தன்னேரும் வைந்துதிச்
செவ்வேற்செவ் வேள்வருகவே
சீர்க்குமர கோட்டத் திருந்தெலாஞ் செயவல்ல
சித்தர்பெரு மான்வருகவே.
63வேறு✓
ஆவி யிடத்தா ணவவிருளை
யவிக்கு மவியா வருள்விளக்கே
யருட்குப் போத நிவேதிப்பா
ரறிவை விழுங்கும் பரவெளியே
யோவி யம்போற் சிவயோக
ருண்ணுந் துஞ்சாப் பெருங்காலே
யுள்ளத் துணரார் புறத்துணர்வா
ருயிர்மா சலம்பு நறும்புனலே
தாவித் தொண்டு நெறிநிற்பார்
தமக்குப் போகந் தருநிலமே
சமர சத்தோர்க் கெங்குமொன்றாந்
தன்மை வாய்ந்த சின்மயமே
தேவி யொடுமே கம்பர்மகிழ்
சேயே வருக வருகவே
சேனா பதீசத் தருண்ஞான
சித்தா வருக வருகவே.
64✓
குருவா யெமைபாட் கொளவருக
கொடுமா ணவந்தேய்த் திடவருக
குணமா ரருட்பே றுறவருக
குளிர்பே ரின்பந் தரவருக
விருவா தனைதீர்த் திடவருக
விறவா நலமீய்ந் திடவருக
வெமது கலிமாற் றிடவருக
விசைக்குந் துதிகேட் டிடவருக
மருவார் வணங்கும் படிவருக
வாழ்வு பெருகும் படிவருக
மறவா வரந்தந் திடவருக
மகிழ்வா னபயந் தரவருக
திருவார் கச்சி யேகம்பர்
செல்வா வருக வருகவே
சேனா பதீசத் தருண்ஞான
சித்தா வருக வருகவே.
65வேறு தானான தான தானான தான தானான தான தனதன✓
மாவாது கூறி யோர்பாவ லோன்முன்
வாயார வோது துதிசெவி
வாயேறு நீடு சோணாச லேசர்
வாழ்கோயின் மேவு சிகரியின்
மூவாத தூணின் மேகார மீது
மோகாதி மாயை மலவிருண்
மூடாத சோதி மாருப சேவை
மூதாதை யோர்கள் பிரபுடன்
நோவாது காண நேர்வா யநாளி
னோலாத யாழும் விழைவொடிந்
நூன்மாலை பாட நீயேவு வேலை
நூனாம லெசெய் தலினெதிர்
தேவானை மோக மாவேடர் மாது
சேர்மாலை மார்ப வருகவே
சேனாப தீச மேவாழ்கு மார
தேவாகு கேச வருகவே.
66✓
மார்பாடு நீடு வேடேறி யாடு
மாவோது பாணி னிசையிலே
மாறாது தோளில் வாழ்தூய சாரு
வாய்கூறு பாட னசையிலே
சார்பான தேவி மாருடி டாது
தானாடி லீலை நெறியிலே
சாலோக மாதி மேலோக மீது
சார்ஞான யோக முறவிலே
நேர்பாகு நேய நீமேவி னாலு
நேயாநு கூல னெனுமாத
னேரேயி நாளில் வாவாவெ னோசை
நீவாமை கூவென் விழிமுனே
சீர்பாட நாடு பாவாண ரோடு
தீராத மோக வருகவே
சேனாப தீச மேவாழ்கு மார
தேவாகு கேச வருகவே.
67தனன தாத்த தனன தாத்த தனன தாத்த தனதனா✓
அதுல மோக்க மருள்சன் மார்க்க
மணுகு தீர்த்தன் வருகவே
யருளை நீத்த கொலைசெய் தூர்த்த
வசுரர் கூற்றன் வருகவே
மதுவை யூற்று மலைகண் மேட்டின்
மருவு கூத்தன் வருகவே
மதன வேட்கு மயலை யூட்டும்
வடிவி லேற்றன் வருகவே
பதும மாட்சி கருணை பூத்த
பதினெ ணோக்கன் வருகவே
படிறு தீர்த்த புனித வார்த்தை
பகரெ தார்த்தன் வருகவே
முதுமை வாய்த்த மறைசொல் வாக்கு
முதன்மையாத்தன் வருகவே
முனிவ ரேத்து குமர கோட்ட
முருக மூர்த்தி வருகவே.