முருகன் App
குமரகிரி மும்மணிக்கோவை
வித்துவான் கோ. இளையபெருமாள்
அருளுணர் வின்றிப்10 / 12
குமரகிரி மும்மணிக்கோவை · வித்துவான் கோ. இளையபெருமாள்

அருளுணர் வின்றிப்

26அகவல்✓
அருளுணர் வின்றிப் பொருளுணர் வோடே
ஆசைக் கடலுள் அழுந்திநின் றுலகில்
இன்பங் காணா தேங்குவ தேனோ
ஈங்குனக் கொருசொல் லியம்பக் கேளாய்
உலகம் உய்ய உயர்தமிழ் வழங்கிய
ஊமைப் பிள்ளைக் குணர்வினை யூட்டி
என்றும் அன்பர்க் கெளியவ னாகி
ஏறு மயிலுகந் தேறிநின் றாடி
ஐம்புல இன்பம் ஆர அளிக்கும்
ஒருதிரு முருகனை உள்நினைந் துருகி
ஓதின் இன்ப முறுவை
ஒளவையின் பாட்டை அறிகவென் நெஞ்சே.
27வெண்பா✓
சேயின் துயர்துடைக்கச் சேரவணைத் துக்காக்கும்
தாயிற் சிறந்த தயவுடையாய் — நோயற்ற
வாழ்வருள்க வென்றுதினம் மன்னுங் குமரகிரி
சூழ்வருவேன் பாடித் துதித்து.
28கட்டளைக் கலித்துறை✓
பாடுவ துன்புகழ் பத்தியினோடு பணிந்துதினம்
சூடுவ துன்னடி சூழ்வினை நீங்கநற் சுற்றமெனக்
கூடுவ துன்னடி யாருடன் என்றுங் குமரகிரி
நாடுவ தேயன்றி நானறி யேன்தெய்வ நாயகனே.