கொடியவர் வாழுங் குவலயத் தின்கண்
அடியவர்ப் போற்றி யன்புசெய் யாமல்
பழித்துப் பேசும் பண்பி லாளரும்
தாயுந் தந்தையுந் தாமறி தெய்வமென்
றாயு மறிவிலா தலைக்கும் மக்களும்
பெற்ற குழவியைப் பேணு மன்பிலாக்
குற்ற முடனே கொலைசெயுந் தாயரும்
கணவனைப் போற்றாக் கற்பிலாப் பெண்டிரும்
கள்ளவா ணிகத்திற் கரவுசெய் பவரும்
அரசியல் நாடகம் ஆடும் மாந்தரும்
நல்லா சிரியரை நயந்துபோற் றாமல்
பொல்லாங் கியற்றும் புல்லறி வாளரும்
நன்றி மறந்த நாணிலா தவரும்
கடவுள் இலையெனக் கழறும் கயவரும்
உடன்பிறந் தவருடன் உடற்றும் மாக்களும்
ஒழுக்கம் போற்றா திழுக்கும் நெறியில்
மனிதப் பண்பிலா மக்கள் மலிந்தே
ஐம்பெரும் பாவத் தழிவுசெய் யுலகில்
எம்பெரு மானே ஏன்பிறந் தேனென
வருந்துவன் அந்தோ வாழேன் வாழேன்
திருந்தும் அன்பிலாத் தீயரைக் காண
அஞ்சுவன் ஆதலின் அடியேன் நின்பால்
நெஞ்சுவந் தொருவரம் நேர்குவன் அன்பால்
உலகம் உய்ய உயரிய குமர
கிரிவளர் முருக கேடில்
பரிவுடன் கருணை புரிவதுன் கடனே.