முருகன் App
குமரகிரி மும்மணிக்கோவை
வித்துவான் கோ. இளையபெருமாள்
இறைவன் உண்மை3 / 12
குமரகிரி மும்மணிக்கோவை · வித்துவான் கோ. இளையபெருமாள்

இறைவன் உண்மை

5அகவல்✓
இறைவன் உண்மை இனிதறி யாத
குறையுடை மாக்கள் குறிக்கோ ளிலரே
எங்கும் நிறைந்த இறைவனை யறிகிலார்
எங்குளன் இறைவன் என்ப ராயின்
தம்மை யறியாத் தகவிலா தவரே
இயற்கையின் வடிவே இறைவன் வடிவம்
இயற்கை யாதோ என்குவீ ராயின்
கைபுனைந் தியற்றாக் கவின்பெரு வனப்பே
ஞாயிறு திங்கள் நளிகடல் மலைநதி
பூம்புனற் பொய்கை பொறிவண் டிசைக்கும்
தேம்பொழில் செழுமுகில் திகழ்வனம் தென்றல்
மாங்குயில் குரலொடு மயிலின் ஆட்டம்
இன்னோ ரன்ன இயற்கையி னூடே
மன்னும் இறைவன் மாண்பினை விரும்பிக்
காணா திகழும் கல்லா மாந்தர்
வாணாள் முற்றும் வறிதே கழிப்பர்
ஆயினும் அன்னார்க் கறிவு கொளுத்தத்
தாயினும் இனிய தயாபரன் தன்னை
அன்போ டுருகி அகங்குழைந் துலகில்
என்போல் பலரும் எளிதில் காணக்
குமர கிரியில் கோயில்கொண் டருளினன்
ஓங்கும் இறைவன் உண்மை உணர்ந்து
கண்ணிற் கண்டு களியார்
மண்ணிற் பிறந்தும் மதிமறந் தவரே.
6வெண்பா✓
தவமே புரிந்தறியேன் தண்மலர்த்தாள் போற்றேன்
அவமே பிறந்துழல்வேன் ஆனால்—பவமறுக்க
இன்றே குமரகிரி எய்தினேன் ஏற்கவருட்
குன்றே குமர குரு.
7கட்டளைக் கலித்துறை✓
குருவா யிருந்துமுன் தந்தைக்கு வேண்டுங் குறிப்புணர்ந்து
திருவாய் மலர்ந்து மறைமொழி தந்த திருமுருகா
உருவாய் மயில்மிசை வள்ளிதெய் வானை யுடனுவந்து
வருவாய் குமர கிரியினில் அன்பர் வரம்பெறவே.