நானிலந் தன்னில் தானினி தோங்கிய
விமலன் வைகும் இமயஞ் சார்ந்த
கந்தவேள் வாழுங் கந்த வெற்பினைக்
காணுவான் வேண்டிக் கலங்கா நெஞ்சுடன்
ஏழா யிரமடி தாழா தேறி
மசூரி என்னுமா மலைச்சிக ரத்தின்மேல்
தாங்கருங் குளிரில் ஆங்கோர் இரவு
தயங்கிய என்னைத் தாங்கி அருளினை;
உச்சயினி இராமேசுரம் மெச்சு குஷ்ணேசுரம்
ஆதியாம் புண்ணிய சோதி லிங்கத்
தலங்களை முறையே வலம்வரு வித்தனை;
காசி மதுரா காஞ்சி மாயா
அவந்தி அயோத்தி ஆதிய புகழ்சேர்
உத்தம தலங்களாம் முத்தித் தலங்களை
முறையாய் ஏத்த நிறையருள் புரிந்தனை;
பவங்களைத் தீர்க்கும் அவந்திமா நகரில்
மாமை வளஞ்சால் ஆமைகள் நிறைந்த
சிப்பிர நதியின் அப்புறத் தோப்பில்
உம்பர் மகிழும் கும்பமே ளத்திற்காய்
ஒன்று திரண்டே பன்மொழி பேசும்
மூவா யிரத்துமேல் முனிபுங் கவரை
தரிசனஞ் செய்யும் பரிசினை வழங்கினை;
பாசம் நிலவுமென் நேசமில் நெஞ்சில்
நின்கழல் ஏத்தி இன்னிசைப் பாக்களாற்
கோவை பாடும் ஓகையைக் கொடுத்தனை;
என்னைக்கொல் அடியேன் இயற்றுபுண் ணியமே.