முருகன் App
மயிலணி முருகவேள் மும்மணிக்கோவை
கு. முத்துக்குமார சுவாமிப்பிள்ளை
மாயை வயமாம்11 / 12
மயிலணி முருகவேள் மும்மணிக்கோவை · கு. முத்துக்குமார சுவாமிப்பிள்ளை

மாயை வயமாம்

27ஆசிரியப்பா✓
மாயை வயமாம் மாசுடை மனத்தொடு
மயிலணிப் பதிவாழ் அயில்வேற் குமரன்றன்
குஞ்சித பாதத்தை அஞ்சித் தொழுகிலேன்,
நெஞ்சுநெக் குருகி அஞ்சலி செய்கிலேன்,
தஞ்சம் புகுந்து சஞ்சிதம் நீக்கிலேன்,
பத்தி வலையிற் பட்டும் இருக்கிலேன்,
எத்திறத் தோர்க்கும் சித்தம் இரங்கிலேன்,
செற்றம் நீக்கிலேன், பற்றுகள் அறுக்கிலேன்,
பயந்து தீவினை நயந்து ஒருவிலேன்,
தபத்தைச் செய்கிலேன், செபத்தைப் பண்ணிலேன்,
உண்மை நூலுணர் திண்மை பெறுகிலேன்,
அமிழ்தினும் இனிய தமிழ்மறை ஓதிலேன்,
தத்துவ மசியின் தத்துவம் அறிகிலேன்,
வேதாந்த சித்தாந்த சமரசம் விளங்கிலேன்,
சிவோகம் பாவனை சிறிதும் பண்ணிலேன்,
சின்னாள் வாழ்வை உன்னா தலைவேன்,
இன்னன குணங்கள் துன்னும் அடியேன்
அன்புவழி நில்லா அறிவில னேனும்
புண்ணிய மார்க்கம் நண்ணிலே னேனும்
புறமெனைத் தள்ளல் சிறப்பன்று முருகா!
சேவற் கொடியோய்! சேவடி அருள்கவே.
28நேரிசை வெண்பா✓
சேவற் கொடியுவக்கும் செவ்வேளை நாடியே
ஆவலுடன் ஆலயத்தை அண்டினேன்—பாவப்
பிறப்பறுத் தாண்டருளிப் பேரின்ப வீட்டைச்
சிறப்போ டளிப்பான் தெளி.
29கட்டளைக் கலித்துறை✓
சிறக்கும் மயிலணிச் செவ்வேள் அடியிணை சித்தமதில்
மறக்கும் வகையின்றி மானிலத் தென்றும் வரந்தருவாய்
துறக்கம் புகினும் அதுதனை வேண்டுவன் தொல்லுலகில்
இறக்கும் பொழுதெனக் கின்னருள் பாலித் திரங்குவையே