வானுற நிவந்த சேணுயர் பனையும்,
தென்னையுங் கமுகும் புன்னையும் புளியும்,
இலுப்பையும் வேம்பும் வருக்கையும் மாவும்,
பொன்பூ நிறைந்த மென்னறுங் கொன்றையும்,
வில்வமும் ஆத்தியும் வெறிகமழ் பிச்சியும்,
அறுகும் பொலிந்த நறும்பூஞ் சோலையும்,
காமரு பூநிறை தாமரைத் தடாகமும்,
இன்னன வளஞ்சேர் சுன்னைமா நகரில்
பொங்கருள் பாலிக்கும் ஐங்கரன் கோயிலும்,
மருதடி உறையும் மாசாத்தன் கோயிலும்,
கதிதனைக் கொடுக்குங் கதிரமலைக் கோயிலும்,
வியப்பார் விஸ்வ நாதன் கோயிலும்
நாற்றிசைச் கண்ணும் ஏற்றமுற் றோங்க
மயிலணிப் பதியில் மன்னிய முருகா!
அறைகுவன் ஒன்று இறைவ! கேண்மதி
சுன்னைமா நகரில் முன்னைநாள் வைகிய
வரகவிப் புலவனாம் வரதன் ஆதிய
வித்தகப் புலவோர் வியப்புடன் அளித்த
அத்தகு சொன்மலர் அனைத்தையும் ஏற்றனை;
பன்மொழி அறியாச் சின்மொழி உடையேன்
ஆசையாற் சொற்றவிவ் வோசையில் கோவையை
குற்றமுங் குணமாக் கொண்டே பொற்புற
நாடி மாலையாய்ச் சூடிப் பொலிகவே.