முருகன் App
மயிலணி முருகவேள் மும்மணிக்கோவை
கு. முத்துக்குமார சுவாமிப்பிள்ளை
விரைந்து வம்மின்,9 / 12
மயிலணி முருகவேள் மும்மணிக்கோவை · கு. முத்துக்குமார சுவாமிப்பிள்ளை

விரைந்து வம்மின்,

21ஆசிரியப்பா✓
விரைந்து வம்மின், விரைந்து வம்மின்,
வரைமகள் பெற்ற முருகனைப் போற்ற
நரைதிரை வருமுன் விரைந்து வம்மின்,
தத்துவ மயமாம் வித்தக உலகில்
அட்டதிக் கெங்கணும் அலைந்துலை யாது
சுன்னை மயிலணி சூழ்ந்திருத் தளிக்கு
உள்ளத் தன்பொடு பொள்ளென வம்மின்,
தீபம் ஏற்றுமின், தூபம் இடுமின்,
வெற்றிலை பாக்குப் பொற்புறு முக்கனி
ஆதிய வைத்தே அர்ச்சனை செய்மின்,
ஐம்பு லன்களும் அறியஒண் ணாத
அருவமும் உருவமும் இல்லா ஒருவனை,
நிர்க்குண ரூபியாம் ஞானக் கொழுந்தினை,
அவ்வியம் அற்ற திவ்விய மனத்துடன்
ஆசையோ டென்றும் பூசனை செய்மின்,
மயில்மேல் ஏறும் அயில்வேற் குமரனைக்
குமர! குருபர! முருக! சரவண
பவ!வென அல்லும் பகலும் சொன்மின்,
தத்துவ முடிவில் தாண்டவம் ஆடும்
சிவசக் திகளின் சேர்க்கை வடிவமே
ஆறுமுகக் கடவுளென் றுறுதி கொண்மின்,
அகமுகம் நோக்கி ஆழ்ந்து தியானிப்போர்
புருவ மத்தியில் மருவிடுஞ் சோதியை
ஓயா தென்றுந் தியானஞ் செய்மின்,
தேக்குமா னந்தம் நீக்கமறப் பெறுமின்,
உள்ளத் தாமரை விள்ளவீற் றிருக்கும்
மாயா குணங்கள் தோயா முருகனை
மரணம் வருமுன் சரணம் புகுமின்,
விழிநீர் சிந்தக் கழிபேர் உவகையொடு
இறைவனை நாளும் இறைஞ்சி அழைமினே.
22நேரிசை வெண்பா✓
இருளிற் கிடக்குமென் ஏக்கந் தவிர்த்தே
தெருளை அளித்தினிய தேற்றாய்—முருகா!
மயிலணிவாழ் பெம்மானே! மால்மரு கோனே!
அயில்வேற் குகனே! அருள்.
23கட்டளைக் கலித்துறை✓
அஞ்ஞானத் தாலெழு மாணவ மிக்குன் அடிமலரை
விஞ்ஞானத் தாற்பெற வேண்டி முயல விரைந்தனன்யான்
மெய்ஞ்ஞான சாகரம் மேவி மகிழ்வுற்று வீடுபெற
இஞ்ஞாலந் தன்னில் எமக்கருள் செய்க இறையவனே.