முருகன் App
நல்லூர் முருகன் காவடிச் சிந்து
சோ பத்மநாதன்
வடிவேலன் வரும் நேரம்9 / 12
நல்லூர் முருகன் காவடிச் சிந்து · சோ பத்மநாதன்

வடிவேலன் வரும் நேரம்

9✓
ஏறுமயில் ஏறிவிளை யாடும் — காண
எங்கள்வினை நீறுபடும் இன்பநிலை கூடும்
ஆறுமுகன் தேரில்வரும் அழகு — வெள்ளி
அன்னமதில் வள்ளிவரும் அழகென்ன அழகு!
காவடி எடுப்பவர்கள் கோடி — நல்லைக்
கந்தனடி சிந்தனைசெய் அன்பர்பல கோடி!
சேவல்மயில் காவலுக்கு நிற்கும் — நாங்கள்
செய்தவினை நல்லைநகர் எய்தவிரைந் தோடும்!
ஞானவடி வேலன்வரும் நேரம் — இள
ஞாயிறவன் பாதமலர் சூழவரும் நேரம்!
ஆனகுறை யாவும்தொழத் தீரும் — எங்கள்
ஐயன்புகழ் பாடநல்லை வீதிவந்து சேரும்!
கோபுரங்கள் காணஉள்ளம் துள்ளும் — கை
குவியும்முரு கேசனது கோலம்நெஞ்சை அள்ளும்!
தீபஒளி கண்களை நிறைக்கும் — இளந்
தென்றல் மணம்கொண்டுவரும் எங்கணும் இறைக்கும்!