வந்தனன் முருகன் வளரெழிற் குமரன்
அந்தமில் புகழோன் அருந்தமிழ்க் கிறைவன்
சந்தமர் கழலொடு சதங்கைகள் ஒலிக்கக்
கந்தமார் கமலக் கவின்பதங் காட்டி
வந்தனன் சிறுவன் வரைமகள் புதல்வன்
ஆயிரம் ஆயிரம் சூரியர் வந்தென
மாயிருள் போக்கிஇவ் வையந் தழைக்க
வந்தனன் ஒருவன் வானவர் தலைவன்
பொன்கல நன்கல மணிக்கலம் பூண்டு
மென்மலர் மாலைகள் மேனியில் நிறைத்து
தீச்சுடர் ஏய்த்திடும் திகழுடை அணிந்து,
மாச்சுடர் மேனியில் நீறொடு சாந்துற
வந்தனன் இறைவன் வள்ளியின் கணவன்
அறுமுக மலர்களில் முறுவலை இறைத்தும்
நறுமலர் விழிகளில் திருவருள் நிறைத்தும்
மடநல் லாரிரு மங்கையர் அருகுறச்
சுடர்நெடு வேலொடுந் துதைபடைக் கலத்தொடும்
வந்தனன் அருளோன் வரையினில் உறைவோன்.
வெண்சங் கூதுமின் வெற்றிகொண் டாடுமின்
நண்ணியே தீபமுந் தூபமுங் காட்டுமின்
தோரணம் நாட்டுமின் சூடமும் ஏற்றுமின்
ஆரணம் ஓதுமின் பேரிசைத் தமிழிற்
றிருப்புகழ் தன்னை விருப்புடன் பாடுமின்
பகழிக் கூத்தனின் பாடல்கள் உரைமின்
குருபரன் கவிகளைக் கூறுவீர் இசையுடன்
அரகர வென்றுங் குருபர வென்றும்
சிரமதிற் கரம்வைத் தருள்முரு காற்றுப்
படையினைப் பாடிப் பரவசம் எய்துவீர்.
நல்லான் அவனை நயந்து
செல்வீர் யாவிரும் நல்லூர்ப் பாலே.