முருகன் App
நல்லூர் நான்மணி மாலை
சொக்கன்
வணங்குவம் எங்கள்11 / 12
நல்லூர் நான்மணி மாலை · சொக்கன்

வணங்குவம் எங்கள்

35விருத்தம்✓
வணங்குவம் எங்கள் வள்ளிதெய் வானை
வரித்திடும் இளைஞனைக் குகனைப்
பிணங்கிடு நெஞ்சே பேதையே வீணிற்
பின்னென வைத்திடா தணுகி
உணங்கிய அன்பால் விழியெலாம் நீராய்
உடலினிற் புளகம தூர
அணங்கரொன் றில்லா தாடியே பாடி
அவனடிப் போதினில் வீழ்வாய்.
36அகவல்✓
வீழ்வாய் மனமே வீழ்ந்துநின் றுன்னில்
ஆழ்வாய் அமைந்தொளி அணைந்திட முயல்வாய்
சொல்லொடு மொழியுறுந் துரியா தீதத்
தெல்லையில் நின்றுனை இழந்திடல் குறிப்பாய்
கல்வியும் பயனுங் கலைகளும் யாவும்
தொல்லைகள் சுமையாந் தொலைத்துநீ ஏதுஞ்
சொல்லா தடங்கியே சும்மா இருப்பாய்
வல்லவன் ஒருவனே வலியிலர் நாங்கள்
நல்லவன் எமக்கவன் நல்லவே செய்வான்
படைத்தும் இருத்தியும் பார்வையிற் காத்தும்
துடைத்தும் அருளியும் துயர்களை முருகனை
யாவனென் றெண்ணினை யாதுநீ குறித்தாய்
ஏவரும் துதித்திடும் ஈரறு தோள்களைப்
போற்றுதல் ஒன்றே பிறவி
மாற்றுதற் குளதாம் மருந்தென ஓர்வாய்.
37வெண்பா✓
ஓர்வாய் மனமே உனக்கொன் றுரைக்கின்றேன்
சேர்வாய் முருகன் திருக்கோயில் - தேர்வாய்
அவனல்ல தொன்றும் அசையாதென் றெண்ணிச்
சிவனென்றே சேவித் திரு.
38கலித்துறை✓
இருவென் றுலகிடை வைத்தவன் தாள்களை எண்ணியிசை
மருவும் வகையினில் வாழ்ந்திடல் வேண்டுமிம் மாநிலத்தில்
உருவும் எமக்கென நல்லையில் வைத்திடும் உத்தமனின்
அருளுக் கெமதுயிர் ஆட்செயின் ஒப்பரும் ஆனந்தமே.