ஐயா உன்றன் அருளதின் பெருமையும்
பொய்யா நீதிப் புகழதும் அடைந்தோர்க்(கு)
எய்யா தளிக்கும் இன்னுளச் சிறப்பும்
மெய்யாய் என்னால் விளம்பிடற் கரிதே
சொற்பல கடந்தவோர் சோதிப் பிழம்பே
கற்பனைக் கெட்டிடாக் கவின்பெறு வடிவே
வேதத் துச்சியில் விளங்கிடும் அறிவே
சீதக் கருணைச் சிவனார் நெஞ்சிலும்
வீரத் திருமகள் விமலையின் மடியிலும்
ஆருந் துதிக்கவுன் னடிகளை வைத்தாய்
நாதமும் விந்துவும் யாவையும் நீயே
ஓதும் புலவரின் உள்ளொளி நீயே
கலியுக விருளிற் கதிரவன் நீயே
மலிதுளி கருணையால் மாநிலம் புரப்போய்
விழவறா வீதியும் வியன்மிகு மூர்த்தியும்,
அழகமர் கோபுரத் தமைவதும், சிறந்த
மணமலர்ச் சோலையும் மலரணை தென்றல்
உணங்கிடு சேவலின் கொடியதும், சூழ்ந்த
வெண்சுதை செஞ்சுதை வீக்குநற் சுவரும்,
தண்ணொளி பரப்பிடு தீபமும், தம்பத்து
விளங்கிடு மின்னொளி விளக்குடன், அடியார்
துளங்கொளி விரித்திடும் சூடமும் அமைந்த
வேதியர் மந்திர ஓசையுந், தொழும்பர்
ஓதிடு பாடலின் ஓங்கிடும் ஒலியும்
கலந்தெழில் சுமந்திடும் கவின்பெறு நல்லூர்
அலங்கல் மார்பொடும் அமர்ந்தாய் போற்றி
மாற்றரும் பசும்பொனே மணியே போற்றி
கூற்றையும் ஆட்கொள் குருவே போற்றி
என்றும் அழியா இளமையும் அழகும்
ஒன்றிய குமரநின் உயர்பதம் போற்றி
நல்லைசெய் தவமே நாடுவார் நெஞ்சம்
ஒல்லையில் அணைவாய் உயிரே போற்றி.