ஏற்றிடற் குரியவுன் இன்னருள் பெறாமல்
நாற்றமார் சடத்தினில் நாளெலாங் கிடந்து
பொய்யிலும் புனைவிலும் பொழுதினைப் போக்கி
நையும் நையுமிந் நலமிலா மாக்களைப்
பைய வுன்னருட் கதிர்களை நீட்டி
உய்ய வைப்பதுன் உயர்கட னன்றோ
கலியுக வரதனாங் கந்தனே நாமுன்
வலியினைத் தாங்கிடும் வல்லமை இல்லாத்
தூசுகள் ஆதலின் துன்பந் துடைப்பாய்
மாசுகள் ஒழித்தெமை மாண்பிடை வைப்பாய்
எறிதிரைக் கடலிடை அலைப்புறும் அலையாய்
மறித்தெமை வாட்டிடும் மாயைகள் பலவாம்
தலைவராய் நின்று தருக்கிடல் குறித்தும்
கலைஞராய்த் திறனினைக் காட்டுதல் கருதியும்
பலகலை கற்றிடு பண்டிதர் இவரென
நிலவுல கழைத்திடும் நீர்மையைப் பெறவும்
முல்லை மூரலள் மதியொளிர் முகத்தி
இல்லை என்றிடும் இடையினள் தன்னைப்
புல்லி இன்பப் புதுப்புனல் வீழவும்
செல்வச் சிறுவரின் சிறப்புக்கள் காணவும்
உள்ளி உள்ளி உலகிடை உழலும்
எள்ளற் குரியராம் எமக்கொளி காட்டி
உண்மையை உணர்த்திடல் உன்கடன் அன்றோ?
மஞ்சுதொடு கோபுர நல்லூர்
அஞ்சொ லாருடன் அமர்ந்திடும் அழகே.